Tuesday, June 5, 2018

திருட்டு உலகமுங்க...!!!

திருட்டுத்தனம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் எந்தவகைத் திருடர்களாக இருந்தாலும் அவர்களைப் பார்த்து திருடன் என்று சொல்வதுதான் நடைமுறை வழக்கம்.திருடன் என்கிற வார்த்தை பொதுவாக நாம் உபயோகப்படுத்தும் பன்மை அற்த்தம்கொண்ட சொல்லாகும். அதாவது நமக்குத் தெரிந்து கொள்ளையடிப்பவன், குழந்தை கடத்துபவன்,வழிப்பறி செய்பவன், ஏமாற்றுபவன், மோசடிக்காரன், பொய்சொல்பவன் இப்படி பலவகையில் மனிதனுக்கு நஷ்டத்தை தீங்கை விளைவிக்கும் காரியங்களை செய்யக்கூடியவர்களை  திருடன், திருட்டுப் பயல் என்று அழைப்பார்கள்.

மேற்குறிப்பிட்ட திருடர்கள் அனைவரும் வறுமைக்குத் திருடும் அன்றாடத்திருடர்கள். ஆனால் தற்போது இந்தப்பட்டியல் நீண்டு வேறுவகை திருடர்கள் அதிகமாக உருவாக்கிக் கொண்டிருப்பதுதான்  வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது.

அதாவது தற்போது கௌரவத் திருடர்கள் பெருத்துவிட்டார்கள்.இந்தவகைத் திருடர்கள்தான் மிகவும் ஆபத்தானவர்கள்.நாட்டின்  பொருளாதாரத்தையும்  மக்களின் வாழ்வாதாரத்தையும் நசுக்கி பெருஅழிவை உண்டுபண்ணுபவர்கள். இவர்களுக்கு மனிதாபிமானம் நாட்டுப்பற்று மக்களை பற்றிய சிந்தனை கவலை ஏதும் மனதில் இருக்காது. பணத்தின்மேல் மட்டும் மோகம் கொண்டவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருத்துக் கொண்டிருப்பதால்தான் நாட்டில் நடக்கும் இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது.

ஊழல்  செய்வதும் ஒருவகையில் திருட்டுதான். மக்களை ஏமாற்றும் விதமாக அரசியல் செய்வதும் திருட்டைத்தான் குறிக்கும்.அதுபோல தனது சுயநலத்திற்காக இயற்கையையும் பசுமையையும் அழிப்பதும் மாசுபடவைக்கும் தொழிற்ச்சாலைகளும்,தயாரிப்பு நிறுவனங்களும் மக்கள் வசிப்பிடத்தில் அமைத்து  தீமையை  விளைவிக்கும் சுற்றுப்புற சூழலை பாதிக்கவைக்கும் செயலும் ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் ஒருவகையில் இதுவும் பணத்திற்காக செய்யப்படும் திருட்டு இனத்தையே சாரும்.

மேலும் இந்தப்பட்டியலில் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆதாயம் தேடுபவர்களும் சமயம்பார்த்து மக்கள் சேவகர்களாக தன்னை மாற்றிக்  கொள்பவர்களும் ஒருவகை திருடர்களேயாவார்கள்.இத்தகைய திருட்டுக்கு அப்பாவி மக்களே பலிக்கடாவாக ஆகின்றனர். அப்பாவி மக்களுக்கு எதை நம்புவது எது நல்லது எது கேட்டது யார் நல்லவர்கள் என்பது புரியாத புதிராக போய்விட்டது. இவரா இந்த தப்பை செய்தார் நல்லவர்போல் நம்மிடம் பழகினாரே இவரா இப்படியான செயலைச் செய்தார் நம்ப முடியவில்லையே என ஆச்சரியப்படும்படியான மனிதர்கள் மத்தியில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

அடுத்து ஆன்மீகவாதிகளிலும் பல திருடர்கள் பெருத்துவிட்டார்கள். சுவையான சொல்லில் மக்களை மயக்கமடையச் செய்து நம்பமுடியாத ஜீரணிக்கமுடியாத பல செயல்களை செய்து வருகிறார்கள். யாரைத்தான் நம்புவது என்ற குழப்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி தான் எவ்வித கவலையுமில்லாமல் பெரிய மனிதர்கள் என்கிற போர்வையில் சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை திருடர்கள் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது.? இப்படி தற்காலத்தில் திருட்டுத்தனம் பல உருவங்களில் நடமாடிக் கொண்டிருக்கிறது.

ஆகவே மக்களாகிய நாம்தான் இனியும் உறங்கிக்கிடக்காமல்அரசியல் திருடர்களையும்,ஆன்மீகத்திருடர்களையும்,மக்கள் விரோதத் திருடர்களையும் சரியாக அடையாளம்கண்டு தக்க பாடம் கற்ப்பிக்கவேண்டும். இவர்கள் யூகிக்கும் தவறான பாதையைநம்பி நாமும் சேர்ந்து பயணிக்காமல் அடியெடுத்துவைக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் விழிப்புணர்வுடன் நடந்து இனிவரும் காலங்களில் இத்தகைய திருடர்கள் பெருகாமல் பாதுகாத்துக் கொள்வோமாக.!

                                                                அதிரை மெய்சா
                                                            

                                                      

1 comment:

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.