Wednesday, May 2, 2018

யாரைத்தான் நம்புவது.!?!?

நம்பிக்கை என்பது மனிதனுக்குமனிதன் மனசாட்சிப்படி  அவனது சொல்,செயல்,நடவடிக்கையென அனைத்திலும் நம்பகத்தன்மையை நிரூபிக்கும்  மிகச்சிறந்த குணமாகும்.இவ்வுலக வாழ்க்கைக்கு நமக்குத் தேவையான எல்லா விஷயங்களிலுமே நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டுதான் இவ்வுலகில் வாழும்  ஒவ்வொரு மனிதனது வாழ்க்கையும் இயங்கிக் கொண்டு இருக்கிறது.


நம்பிக்கை மனிதனைமனிதன் ஒன்றிணைக்கும் மிகப்பெரிய சக்தியாகும். நம்பிக்கை தோற்றுப்போய் விட்டால் அங்கு மனிதம் செத்து விடுகிறது. அப்படி மனிதம் ஒட்டுமொத்தமாக செத்துவிட்டால் இவ்வுலகம் சுடுகாட்டிற்கு சமமாக வாழ தகுதி இல்லாத இடமாக  போய்விடும்.அப்படியானால் நம்பிக்கையை பேணிநடப்பது  ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அத்தியாவிசயமாக இருக்கிறது.

நம்பிக்கை நமது இவ்வுலக வாழ்க்கையில் நாலாப்புறமும் தேவைப்படுகிறது. உறவு முறையிலிருந்து உலக நடப்புக்கள் வரை அதாவது தாய்,தந்தை, அண்ணன்,தம்பி ,கணவன்,மனைவி,நண்பன்,முதலாளி, தொழிலாளி, விற்பனையாளர், மருத்துவர்,ஆட்சியாளர், நீதிவழங்குவோர் இப்படி இவ்வுலக வாழ்க்கையின் அனைத்து தரப்பின் தேவைகளும், தீர்வுகளும்  நம்பிக்கையின் அடிப்படையில்தான் இயங்கிவருகிறது. ஒருத்தரை நம்பி ஒரு பொறுப்பான வேலையை ஒப்படைத்தாலோ,அவசரத்தேவைக்கு பணம் பொருள் கொடுத்து உதவினாலோ,ஒருபொருளை ஒருசொத்தை பாதுகாக்க அல்லது காவலுக்கு நியமித்தாலோ,அதன் உரிமையாளருக்கு துரோகம் செய்திடாமல் நம்பிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். இதிலிருந்து மாறுபட்டு நடந்துகொள்வோர்களை நம்பிக்கை துரோகி என்று அழைக்கப்படுவார்கள்.

பொய்யான வாக்குறுதி அளிப்பதும் ஒருவகை நம்பிக்கை துரோகம்தான்.
அதுமட்டுமல்ல ஒருவர் நம்மீது நம்பிக்கைவைத்து மன ஆறுதலுக்காகவோ அல்லது அதன் விபரம் அறிந்து கொள்வதற்காகவோ யாரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டாம் என்று சொல்லிக்காட்டும்  ஒரு ரகசிய அல்லது அந்தரங்க அல்லது குடும்ப செய்தியை கேட்டறிந்த பின் பிறரிடம் சொல்லிக்காட்டுவது அதை பற்றி விமர்சிப்பது நம்பிக்கை துரோகத்திலேயே  பெரும் துரோகமாக இருக்கிறது. யாரொருவர் நம்பிக்கை துரோகத்தால் பாதிக்கப்பட்டார்களோ அப்படி பாதிக்கப்பட்டோர்களின் மனவேதனையும் சபிக்கப்படும்  சாபமும் நம்மை வாழ்நாள் முழுதும் நிம்மதியிழக்கச் செய்துவிடும்.

இப்படி எங்கும் எதிலும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் இவ்வுலக வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் நகர்ந்து கொண்டு இருக்கிறது.ஆகையால் யாரைத்தான் நம்புவது என்கிற சந்தேகத்தை நம் மனதிலிருந்து நீக்கி
நம்பிக்கைதான் உலகம் நம்பிக்கைதான் வாழ்க்கை என்கிற  இச்சொல்லிற்க்கேற்ப இதை உண்மையாக ஒவ்வொருவரும் கடைப்பிடித்து உறுதியுடன் நம்பும்படி நடந்தோமேயானால் இவ்வுலகில் மனிதம் தழைக்கும். மனசாட்சியும், மனிதநேயமும் நிலைத்து நிற்கும்.
                   
                                                               அதிரை மெய்சா 
                                                     

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.