Friday, April 27, 2018

நானும் ரவுடி நானும் ரவுடிதான்.!

ரவுடி என்று ஒருமனிதனைச் சொல்ல நாம் கேட்கும்போதே அச்சம் கலந்த வெறுக்கத்தக்க நபராக சராசரிமனிதனிலிருந்து மாறுபட்டவனாகவே நாம் கருதுகிறோம். காரணம் இந்த பெயர்கொண்டு அழைக்கப்படும் மனிதன் சொல், செயல்,நடவடிக்கை அனைத்திலும் முரண்பாடாக இருப்பதுடன் எந்த ஒரு பாதகச் செயலையும் ஈவிரக்கமின்றி பின்விளைவுகளை யோசிக்காமல் செய்து முடிப்பவனாக இருக்கிறான்.


மனிதன் பிறக்கும்போதே நாம் ஒரு ரவுடியாக வேண்டும் என்று நினைத்து இப்படியான ஒரு குணத்துடனோ,இப்படியான ஒரு சிந்தனையுடனோ யாரும் பிறப்பதில்லை.எந்தக்குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் வளரும் சூழ்நிலையே காரணமாக இருக்கிறது. அவரவர் பெற்றோர்களின் வளர்ப்புமுறை,பழகும் நண்பர்கள்,குடும்பப் பின்னணி இப்படி பல காரணங்கள் மனிதனது மனமாற்றத்தை உருவாக்கி ரவுடி என்ற பெயரை வாங்கி கொடுத்து விடுகிறது.

இப்படி ரவுடி என்ற பெயரை பெற்றவர்கள் தான் ஒரு மிகப்பெரிய சக்தியாக நினைத்துக் கொண்டு தனது மனதை மூர்க்கத்தனமாக்கிக் கொண்டு தன்னை மிஞ்சியவர்கள் யாருமில்லை என்கிற ஆணவம் கொண்டு தான் மனது வைத்தால் எதையும் செய்யலாம் என்கிற எண்ணம்கொண்டு தனக்கு எல்லோரும் பயப்படுகிறார்கள் என்று கற்பனை செய்துகொண்டு  ஈவிரக்கமின்றி மனிதாபிமானமின்றி மனித நேயமின்றி சகமனிதனை மிரட்டுவதும் அடிதடி,வன்செயல்கள்,கொடுஞ்செயல்கள்,வழிப்பறி கொள்ளை கொலைப்பாதகங்கள், போன்ற குற்றச்செயல்களை செய்தும் வருகிறார்கள்.

ஆரம்பகாலத்தில் ரவுடி என்று சொல்லிக் கொண்டு தன்னை ஒரு பெரிய சக்தியாக நினைத்து சந்தோசமாக காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தவர்களின் முடிவு எந்த ரவுடிக்கும் சாதகமாக அமைந்ததில்லை. மாறாக சமுதாயத்தார் முன்னிலையில் கேவலப்பட்டு யாருடைய அனுதாபமோ,உதவியோ கிடைக்காமல் ஒதுக்கப்பட்டு சபிக்கப்பட்டு பெரும்குற்றவாளியாக காவல்துறையால் தேடப்பட்டு தனது வாழ்க்கையை சின்னாபின்னமாக்கிக் கொண்டு பெரும்தண்டனைக்கு ஆளாகி தன்னைத்தானே அழித்துக் கொள்கிறார்கள்.

இப்படி இவ்வுலகில் உள்ள எல்லா மனிதனும் தனது செயல் நடவடிக்கைகளை ரவுடித்தனமாக அமைத்துக் கொண்டானேயானால் இவ்வுலகே ரவுடி மயமாகி ஒட்டு மொத்த உலகமும் ஒருநொடியில் கலவர பூமியாகி அழிந்து போய்விடும். நாம் இவ்வுலகில் பிறந்ததற்கான அர்த்தமில்லாமல் போய்விடும்.மனிதம் என்கிற இனமே இல்லாமல் போய்விடும்.  

மனிதன் ஆறறிவுடன் இவ்வுலகத்திற்கு வந்தவன்.சிந்தித்து செயல்படும் பகுத்தறிவைக் கொண்டவன். எனவே எது நல்லது எது தீயது என்று உணர்ந்து நடந்து தனது வாழ்க்கையை தரத்துடன் அமைத்துக் கொண்டு வாழவேண்டும்.
மனிதனுக்கு மனிதன் ஏற்ற தாழ்வு பாராமல் தன்னை மிஞ்சியவன் யாருமில்லை என்கிற அகந்தை கொள்ளாமல் ஒருவருக்கொருவர் உதவிகள் செய்து அன்புடன் பழக வேண்டும். வாழ நினைத்தால் வாழலாம் நல் வழியா இல்லை பூமியில்.என்ற தாரக மந்திரத்தை தன்னம்பிக்கையை கொண்டு  வளர்த்திட்டு தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும்  இழிவுபடுத்தி சமூகத்தாரால் சபிக்கப்படும்  ரவுடித்தனமான செயலை கைவிட்டு  சமுதாயத்தார் மதிக்கும்படியான செயல் நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டோமேயானால் நற்ப்பெயருடனும் புகழுடனும் சாகும்வரை  சந்தோசமாக இவ்வுலகில் வாழலாம்.

                                                               அதிரை மெய்சா
                                                        
                                            

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.