Wednesday, November 27, 2013

[ 4 ] மிரட்ட வரும் பேய் !? பயமுறுத்தல் தொடர்கிறது..!


அது ஒரு அழகிய தென்னந்தோப்பின் நடுவில் அமைதியை மொத்தமாக விலை கொடுத்து வாங்கியது போல அமைந்திருக்கும் குக்கிராமம். அந்த கிராமத்திலேயே கொஞ்சம் வசதி படைத்த குடும்பம் அது. அவள் புருஷன் வெளிநாட்டில் வேலை செய்கிறான்.வெளிநாட்டில் சம்பாரித்த பணத்தில் ஊர் எல்லையில் மனை விற்ற புரோக்கரிடம் நிலம் வாங்கி புதிதாக வீடு கட்டி குடிபுகுந்திருக்கிறார்கள். அந்தப்பகுதிக்கு புதிதாக குடிவந்த இரண்டு மூன்று வீடு மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது. இரண்டு பிள்ளைகளுடன் அந்த புதிய வீட்டில் அவள் தனியாக வசித்து வருகிறாள். ஒரு நாள் இரவு...

டேய்...நாளக்கி பரிச்சைன்டு சொன்னியே...செல்லுல கேம் வெளையாண்டது போதும் வந்து தூங்குங்கடா மணி 10 ஆவுதுல என்று சொல்லியபடி அவர்கள் படுக்கப்பாய் விரித்துப் போட்டாள்...அம்மா தூக்கமே வரமாட்டேங்குதும்மா. ஒரு கதை சொல்லேன் நாங்க தூங்கிற்றோம் என்று இளையமகன் சொன்னான். அவள் உடனே சரிடா நா கதை சொல்றேன் தூங்கிடனும் என்னா என்று சொல்லியபடி....ஒரு ஊர்ல ஒரு ராசாவாம்...என்று ஆரம்பித்து சொல்லி முடிக்குமுன்னே மூத்தமகன்......போம்மா எப்ப பாத்தாலும் இந்தக்கதெயெ கேட்டுக் கேட்டு அலுத்துப் போச்சி. நல்ல ஒரு பேய்க் கதையாய் சொல்லேன் என்று கேட்டான்.சரி சொல்றேண்டா என்று சொல்லியபடி இவர்களைத் தூங்கவைப்பதற்க்காக கற்பனையில் உதித்த ஒரு பேய்க் கதையை சொன்னாள். கதை கற்பனைக் கதையானாலும் அதைச்சொன்ன அவளுக்கே என்றுமில்லாமல் அன்று அவளையும் அறியாமல் மனதினுள் பயம் தொற்றிக் கொண்டது. உள்மனதில் பயம் இருந்தாலும் மனதைத் தேற்றிக்கொண்டவளாய் டியுப் லைட்டை அணைத்து விட்டு ஊதா நிறம் கொண்ட நைட் லாம்பை மட்டும் எரிய விட்டுவிட்டு படுக்கைக்கு வந்து பயத்துடன் பிள்ளைகளை அணைத்தபடி உறங்கிப் போனாள்....

தூக்கத்தில் பிள்ளைகளின் அணைப்பிலிருந்து விடுபட்டு நிமிர்ந்துபடுத்தவளாய் உறங்கிக் கொண்டிருக்கையில்...அப்போது...........

திடீரென தமது மேல் யாரோ வந்து அமர்ந்து இருப்பது போன்ற ஒரு உணர்வு...சுதாரிக்கும் நிலைக்கு வர முயற்ச்சித்து தோற்றுப் போனாள். கைகால்களை அசைக்க முயற்ச்சித்தாள். அசைக்க முடிய வில்லை. சப்தம்போட வாயை அசைத்துப் பார்த்தாள். முடியவில்லை. இப்படி எல்லா முயற்ச்சியிலும் தோற்றுப்போய் அந்த உருவமில்லா நிழலுடன் போராடிக் கொண்டிருக்கும் போது திடீரென அந்தப் பிடியிலிருந்து விடுபட்டாள்... பயத்தில் உடம்பெல்லாம் வியர்த்து நடுங்கி உறைந்து போனவளாய் சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தாள். பிள்ளைகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். மேல் உத்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் காத்தாடி சுழன்று கொண்டு ச்ஸ்ஸ்ஸ்ஸ்..என்ற தனக்கே உரித்தான மெல்லிய ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தன.சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரம் டக்..டக்..டக்..என்ற தனது ஒலியை ஓயாமல் விட்டுக் கொண்டிருந்தன.

பயத்தின் உச்சியில் இருந்த அவள் ஏதோ காத்து கருப்பு இங்கே நிக்கிது என்ன செய்றதுண்டு ஒன்னும் புரியல...என்று தனக்குள் முணுமுணுத்தபடியே மீண்டும் தமது பிள்ளைகளை அணைத்தபடி தூங்க முயற்ச்சித்தாள்...அப்போது....

கண்ணயரும் நேரத்தில் பூட்டியிருக்கும் அந்த சிறிய அறையின் உள்ளே இருந்து தாம் இதுவரை கேட்டிராத கோரசாக பல வகையான மிருகங்கள் ஒன்றுகூடி சப்தமிடுவது போன்ற ஒரு வித்தியாசமான திகில் கலந்த ஒலிச் சப்தம் வந்தது....

நீண்ட நேரமாக ஒலித்துக் கொண்டிருந்த அந்த சப்தம் அவளின் செவிகளில் ஊடுருவி தூக்கத்திலிருந்து விடுபடச் செய்தது. மனது படபட என்று துடிக்க படுக்கையை விட்டு எழுந்து சென்று பார்க்கக்கூட பயத்தில் அவளால் முடியாமல் போக... அமர்ந்து இருந்தபடியே முட்டிக்காலால் தவந்து சென்றவாறு அந்த அறைக்கதவு அருகில் போனபோது அந்த ஒலிச்சப்தம் சட்டென நின்று விட்டது....

மீண்டும் அவள் பயத்தைச் சுமந்தபடி படுக்கச் சென்றபோது.....காம்பவுண்டு சுவற்றில் உள்ள காலிங் பில் சப்தம் ஒலிக்க ஆரம்பித்தது. அப்போது அந்தத்தெரு நாயும் ஆவேசத்துடன் குரைத்தன. அத்தோடு மெல்லிய இனிய குரலில் நெஞ்சை வருடும் ஒரு சினிமா பாட்டுச் சப்தமும் ஒலித்தது..வெண் மேகமே...வெண் மேகமே...கேளடி என்கதையை.....

இது சந்தேகமே இல்லே...ஏதோ காத்து கருப்புதான் நம்ம வீட்டுக்கு வந்துடிச்சி....நாம பூஜெ பரிகாரம் எதுவுமே பண்ணாமே இங்கே குடிவந்தது தப்பா போச்சி என்று... தனக்குள் பேசிக் கொண்டு பைத்தியம் பிடித்தவள் போல் புலம்ப ஆரம்பித்து விட்டாள். . சிறிது நேரமே நீடித்த அந்த பாட்டு சப்தம் திடீரென அமைதியாகி விட்டன. ஒலித்துக் கொண்டிருந்த காலிங்பில் சப்தமும் நின்று விட்டன.

அதற்குப் பிறகு அன்று இரவுமுழுதும் எப்போது விடியும் என்று எதிர்பார்த்தவளாய் தூங்காமல் கண்கள் சிவக்க அதிர்ச்சியில் அவள் முகமே மாறிப்போய் இருந்தது. விடிந்ததும் காலை 7 மணிக்கே பிள்ளைகளை எழுப்பி விட்டுக் கொண்டிருக்கும் போது அந்த சிறிய ரூமிலிருந்து இரவு பயமுறுத்திய அந்த மிருக ஒலிச் சப்தம் மீண்டும் கேட்டது.

விடிந்து காலைநேரமானதால் தைரியமாக அந்த ரூம் கதவைத் திறந்து பார்த்தாள்.....அங்கே...... அவளது செல் போன் சிணுங்கிக் கொண்டு இருந்ததைப் பார்த்து கோபத்துடன்.....இந்த போனெ யார்ரா இங்கே வச்சது.. என்று கேட்கவும் இரவு கேம் ஆடிக் கொண்டிருந்த இளையமகன்...கேம் விளையாடிட்டு நா தாம்மா ராத்திரி அந்த ரூமில உள்ள சார்ஜெர்ல போட்டு வச்சேன். என்று இரவு நடந்த சம்பவம் என்னவென்று அறியாமல் புத்திசாலித்தனமான வேலையைச் செய்தவன் போல் புன்சிரிப்போடு சொன்னான். சரி ரிங்டோன யார்ரா மாத்தினது.!? அண்ணேந்தாம்மா மாத்தி வச்சிச்சி...என்று சொன்னதும்...ஏன்டா இந்த ரிங்க்டோனெ போயி மாத்தி எடுத்து வச்சே இனி போனெ தொட்டுப்பாரு...என்று சொன்னதும் விறைப்பாக தலைகுனிந்தபடி நின்றான். அவளுக்கு சிரிப்பதா கோபப்படுவதா என்று ஒன்றும் புரியாமல் நிற்கும்போது.

சிணுங்கிக் கொண்டிருந்த செல்லை ஆன் செய்து ஹலோ என்று சொல்லி முடிப்பதற்குள் மறுமுனையில் என்ன தங்கச்சி நீ... இப்புடியா தூங்குறது.! நைட் அம்மாவுக்கு ஒடம்பு சரியில்லாம போய்டிச்சி. அதான் உனக்கு போன்போட்டேன் நீ போனெ எடுக்கலெ. அதோட அம்மாவும் ஒம்பேரச் சொல்லி மொனங்கிக்கிட்டே இருந்துச்சி அதான் நேர்ல வந்து ஒன்னே கூட்டிக்கிட்டு போலாம்ண்டு பைக்கெ எடுத்துக் கிட்டு வந்தேன். வீட்டு காலிங் பில்ல அடிச்சேன் நீ எழுந்திரிச்சி வரலெ. நா இந்த தெருவுக்கு புது ஆளாச்சா... அதான் நாய் வேற கொலக்க ஆரம்ச்சிடிச்சி நா இங்கே நின்னுகிட்டு இருக்கப்போ உங்க அண்ணியும் போன்போட்டு சீக்கிரமா வாங்க அம்மாவே இப்பவே போய் ஆஸ்பத்திரியிலே காட்டிட்டு வந்துடலாம்ண்டு கூப்பிட்டா அதான் நா திரும்பி போயிட்டேன் என்று இரவு நடந்ததை விபரமாக அண்ணன் சொல்லிக் காட்டினான்.

அவள் எல்லா விபரத்தையும் கேட்டுவிட்டு அந்த இரவு தனக்கு நடந்ததை அண்ணனிடம் சொல்லிக்காட்டிவிட்டு...அண்ணே உங்க செல்லுல உள்ள ரிங் டோனே முதல்லே மாத்துங்கண்ணே..வெண் மேகமே...வெண் மேகமே...கேளடி என்கதையை..... என்று சிரித்துக் கொண்டு சொன்னாள்.அம்மா இப்போ எப்படி இருக்காங்க அண்ணே..நா பசங்கள ஸ்கூலுக்கு அனுப்ச்சி வச்சிட்டு அம்மாவே பாக்க வர்ரண்டு அம்மாகிட்டே சொல்லுங்கண்ணே.! என்று சொல்லிவிட்டுசெல்போனை சிரித்துக் கொண்டே மீண்டும் சார்ஜரில் போட்டு வைத்தாள்.

அப்போ எல்லாம் மனசுதான் காரணம் அரண்டவங்கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ன்டு ஒரு பழமொழி சொல்லுவாங்களே அது சரியாத்தான் போச்சு... என்று தனக்குள்ளேயே பேசி கொண்டு நிம்மதியுடன் அந்தவீட்டில் வாழ ஆரம்பித்தாள்.

குறிப்பு :- .குழந்தைகளிடம் நாம் உபயோகிக்கும் செல்போனை கேம் விளையாடுவதற்காக கொடுப்பதை தவிர்த்துக் கொள்ளலாம். அப்படியே கொடுத்தாலும் திரும்ப வாங்கும்போது ரிங்க்டோன் போன்ற அதன் செட்டிங்கை செக் பண்ணிக் கொள்வது நல்லது இரவில் தூங்கும் போது செல்போனை தம் பார்வையில்படும்படி வைத்துக் கொண்டு தூங்கினால் இத்தகைய நிகழ்விலிருந்து விடுபடலாம். அத்தோடு செல்போனில் தேவையற்ற பாட்டு, திகில் ஒலி போன்ற ரிங்க்டோன் வைப்பதை தவிர்த்துக் கொண்டால் நல்லது
பயமுறுத்தல் தொடரும்...
அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.