Sunday, November 24, 2013

[ 3 ] மிரட்ட வரும் பேய் !? பயமுறுத்தல் தொடர்கிறது..!


நமதூர் பகுதிகளில் பெரும்பாலான இளைஞர்கள்களின் தகப்பனார், அண்ணன்மார்கள், தம்பிமார்கள் மாமன் மச்சானென்று துபாய், சவூதி, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன் போன்ற வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்று கஷ்டப்பட்டு சம்பாரித்து பணம் அனுப்பி வைக்கிறார்கள். பணத்தின் அருமை தெரியாத ஒரு சில இளைஞர்கள் சுய உழைப்பில்லாமல் ஊரைச் சுற்றிக்கொண்டு ஜாலியாக வீண்செலவு செய்துகொண்டு பொறுப்பில்லாமல் ஊதாரித்தனமாகத் திரிகிறார்கள். இதனால் தீய நண்பர்களுடன் சேர்ந்து தீய பழக்கவழக்கங்கள் ஏற்ப்பட்டு இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போய் விடுகிறது. இதில் ஒரு சிலர் சில விபரீத நிகழ்வுகளிலோ அசம்பாவிதங்களிலோ திகில் சம்பவங்களிலோ பட்டு அனுபவித்து திருந்திவிடுவதும் உண்டு.அதைப்பற்றியே இந்த வாரம்...


ஒரு நாள் மாலை சுமார் 5 மணி இருக்கும். நண்பர்கள் படை சூழ இரண்டிரண்டுபேர் வீதம் 3 மோட்டர் சைக்கிள்களில் தமது ஊரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அடுத்துள்ள உள்ள நகருக்கு ஜாலியாக அரட்டையடித்தபடி சென்றனர். அங்கு ஐஸ்க்ரீம், ஜூஸ் போன்ற குளிர்பானங்களுக்கு பிரசித்தி பெற்ற ஒரு ஸ்நேக்பாருக்கு சென்று அவரவருக்கு விருப்பமான ஐட்டங்களை ஆர்டர் சொல்லி சாப்பிட்டு விட்டு அப்படியே....டேய் பசங்களா அந்த தியேட்டரில் ஒரு திகில் படம் ஓடுதுடா பேய்ப் படமாம் ரொம்ப த்ரில்லா இருக்குமாம்ன்டா வாங்கடா அதையும் பாத்துட்டு ஊருக்கு போகலாம் என்று ஒருவன் சொல்ல..மாப்ளே நானும் பேய்ப் படம் பாத்து ரொம்ப நாளாச்சிடா வாங்கடா போலாம்.. என்று இன்னொருவன் சொல்ல அதை அனைவரும் ஆமோதித்தவர்களாய்..... அந்த சினிமா தியேட்டரில் முதல் ஷோ சினிமா பார்த்து விட்டு திரும்புகையில்......

டேய் மாப்ளே நாம இங்கேயே ஏதாவது சாப்பிட்டுட்டு போய்டலாம்டா.... என்று அதில் இரண்டு பேர் கோரசாக சொல்ல. இல்லடா மச்சான் எனக்கு சாப்பாடு வீட்ல வச்சிருப்பாங்க நீ வேணுண்டா சாப்ட்டுட்டு வா என்று மற்றவர்களும் சொன்னனர். சரி அப்போ நீங்க போய்க்கிட்டு இருங்கடா நாங்க சாப்டுட்டு வந்துட்றோம் என்று அந்த இரண்டு நண்பர்களும் சொல்லி முடிக்கு முன்னரே.... சரி அவங்க ஏதோ தோதுல இருக்காங்கடா நாம ஏன் தொந்தரவு செய்யணும் நம்ம போலாம் வாங்கடா என்று சொல்லியபடி... போனமாசம்தான் இந்த ஊரு ரவுடிங்களோட இவங்க தகராறு பண்ணி இருக்காங்க . இப்போ என்ன திட்டம் வச்சிருக்காங்களோ.....இவங்கள திருத்தவே முடியாதுடா.....என்று ஆளாளுக்கு அவரவர் பங்கிற்கு அவர்களிருவரைப் பற்றி சொல்லியபடி .மீத நான்கு பேர்களும் பைக்கை ஸ்ட்ராட் பண்ணி கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டனர்.

நண்பர்கள் அனைவரும் சென்றவுடன்.... அப்பாடா...போய்ட்டாங்கப்பா... இவங்க கூட பெரிய ரோதனையா போச்சிடா... என்று பெருமூச்சி விட்டபடியே... சுற்றும் முற்றும் பார்த்தபடி அருகில் உள்ள ஒயின் ஷாப்பை நோக்கி இருவரும் நடந்தனர். அந்த ஒயின் ஷாப்பை ஒட்டியுள்ள பாருக்குள் [ BAR ] நுழைந்தார்கள். மதுவகைகளும் மட்டன் சிக்கன் என்று பல உணவுவகைகளையும் ஆர்டர் செய்து ஆர அமர இருந்து சாப்பிட்டனர். போதை தலைக்கேரும் வரை ஒன்றெல்லாம் மூன்றாக நான்காக தெரியும் வரை குடித்து விட்டு அங்கிருந்து தள்ளாடியபடியே மோட்டோர் சைக்கிள் நிறுத்தி வைத்த அடையாளத்தை அரைகுறை நினைவுடன் கண்டுபிடித்தவர்களாய் வண்டியை ஸ்ட்ராட் பண்ணிக்கொண்டு ஊரை நோக்கிப் புறப்பட்டனர்.

குடி போதையில் இவர்களுடன் சேர்ந்து வண்டியும் தள்ளாடின. கண்ணுக்கு தெரிந்த தெல்லாம் தெளிவில்லாமல் இருந்தன. பைக் பின்னால் அமர்ந்திருந்த நண்பன் ...எவன்டா ரோட்ட ஆட்டுறது என்று குடிபோதையில் உளறியபடி புலம்பிக் கொண்டு வந்தான். அப்போது இரவு சரியாக 12 மணி இருக்கும்....மோட்டர் சைக்கிள் சப்தத்தை தவிர வேறு எந்த சப்தமும் இல்லாமல் அமைதிக்கு எடுத்துக்காட்டாக அந்த சாலை இருந்தது. அந்த அமைதி நிசப்தத்தில் இடைப்பட்ட ஒரு கிராமத்தைக் கடந்து செல்கையில் பைக் சப்தத்தைக் கேட்டுதும் ரோட்டோரம் படுத்துக் கிடந்த நாய் ஒன்று பைக்கை துரத்த ஆரம்பித்தன. அவன் போதையில் இருந்ததால் பைக்கின் வேகத்தை அதிகரித்துச் செல்ல முடியவில்லை. இருந்தும் முடிந்தவரை பைக்கை வளைத்து நெளித்தவாறு வேகமாக போக ஆக்சிலட்டரை திருகினான். அப்படி இருந்தும் அந்த நாய் மின்னல் வேகத்தில் பாய்ந்து பின்னால் அமர்ந்து இருந்தவனின் முதுகை பதம்பார்த்து விட்டது ஆ...ஆ..நாய் பின்னாடி முதுகெ கடிச்சிடிச்சிடா ரத்தம் ஊத்துதுடா இப்போ என்னடா பண்றது என்று கேட்டான்...இப்போ..இங்கே என்னடா பண்ண முடியும்.? சமாளிச்சிக்க... சட்டைய கலட்டி அப்டியே கட்டு போட்டுக்க...ஊருக்கு போய் பாத்துக் கிடுவோம்டா முதல்லே இங்கேர்ந்து சீக்கிரமா ஊருக்கு போனும்டா...நாய் கடிச்ச இந்த ரத்தவாடக்கி இந்த நடுராத்திரியிலே பேய் எதாச்சும் வந்துடும்டா...என்று சொல்லியபடி பயத்தில் கொஞ்சம் போதை தெளிந்தவனாக பேசினான்.

அப்போது எங்கிருந்தோ ஒரு அழுகுரல் ஒப்பாரி ஓலமென அந்த அந்த இரவின் அமைதியைக் கலைத்தவாறு காற்றோடு கலந்து குரல்ஓங்கியும் பிறகு தளர்ந்தும் ஒலித்தன. காதுகளையும், மனதையும் ஒப்பாரி சப்தம் பயத்தில் உறைய வைத்தன.. இந்த அழுகுரல் ஒப்பாரி சப்தத்தைக் கேட்டதும் டேய் இது பேயாத்தான்டா இருக்கும் இந்த ரத்த வாடெ தெரிஞ்சி பேய் வந்துடிச்சிடா என்று சொல்லியவர்கள் அந்த இருட்டைக் கிழித்துக் கொண்டு மீண்டும் பைக்கின் வேகத்தை அதிகமாக்கிக் கொண்டு பறந்தார்கள். அப்போது....... மீண்டுமாய் ஒரு திகில் காத்துக் கொண்டிருந்தன...

சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து வந்த நிலையில் மோட்டர் சைக்கிளின் முன்பக்க ஹெட் லைட் வெளிச்சத்தை சற்று உயர்த்தி விட்டான். அப்போது தூரத்தில் அரைகுறையாக சில உருவங்கள் சாலையில் நிற்ப்பது போல் தென்பட்டது. அது மேக மூட்டம் போலவும் மனித உருவம் அல்லாத வேறு உருவ வடிவிலும் முகமெல்லாம் மறைந்த நிலையில் கண்களுக்கு மேற்பகுதி மட்டுமே தெரியுமளவுக்கு இருந்தன. இதைப்பார்த்ததும் மனது சற்று தடுமாற்றத்துடன் போதை சுத்தமாக அவர்களிருவரின் உடலை விட்டு இறங்கி விட்டன.... கண்களில் ஏறெடுத்துப் பார்த்தவன்... டேய் அ..அது.. பேய்மாதிரி தான்டா தெரியுது இந்த ரத்த வாடெக்கி வந்துடிச்சிடா என்று ஒருவன் சொல்ல மற்றவனும் அதை நம்பியவனாய்...ஆமாண்டா அந்தப்பக்கமாத் தான்டா சுடுகாடு இருக்கு இது என்னமோதாண்டா நிக்கிது. நல்லா மாட்டிக் கிட்டோம்டா என்று பேச்சு நாவினில் பட்டும் படாமலும் தளதளத்து வந்தன. சொன்ன அந்த நிமிடமே இருவரின் போதையும் இடம் தெரியாமல் போய்விட்டன. அது ஒன்னுமில்லடா மாப்ளே நீ பயப்படாமே வண்டிய ஓட்டுடா என்று சொன்னான் அவன் நண்பனை ஒரு சின்ன ஆறுதலுக்காக....

அருகில் நெருங்கி வர நெருங்கி வர அந்த உருவங்கள் இவர்களின் வாகனங்களை வழி மறைப்பதுபோல ரோட்டின் நடுவில் நின்றன.. அந்த உருவங்களின் கையில் பயங்கர ஆயுதங்கள் இருப்பது தென்பட்டன.

அப்போதுதான் இவர்களின் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. போன மாதம் ஒயின் ஷாப்பில் தகராறு செய்து இவர்களிடம் அடி வாங்கிய அந்த ஊரு ரவுடிகள் தான் அது...! சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து நோட்டமிட்டு பிலேனிங்கோட தான் முகம் தெரியாமலிருக்க முகமூடி அணிந்து கொண்டு முன்கூட்டியே அந்த ஆளாரவாரமற்ற நெடுஞ்சாலையில் காத்திருந்திருக்கிறாகள். டேய் அங்கெ நிக்கிறது பேய் இல்லடா. நம்மல தீத்துக்கட்ட அந்த பழய ரவுடிக் கும்பல் நிக்கிறாங்கடா.... என்று அடையாளம் கண்டு கொண்டவர்களாய் சொல்லி முடிக்குமுன்னே அவர்களின் ஆயுதம் இவர்களின் உடம்பை பதம்பார்க்க ஆரம்பித்து விட்டன. கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாயாக அடித்துப் போட்டு விட்டு சென்று விட்டனர்....குற்றுயிராய் குறையுயிருமாய் முக்கலும் முனகளுடனும் அவர்கள் இருவரும் ரோட்டோரத்தில் கிடந்தனர்.

சிறிது நேரம் கழித்து அவ்வழியாக லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. இந்த இடுகாட்டு ரோட்டைத்தொடும் நேரத்தில் கிளீனர் பையனிடம் தம்பி சுடுகாடு வருது நா கொஞ்சம் வேகமா போகவா..என்று கேட்டபடி..கியரை மாற்றி ஆக்சிலெட்டர்மெல் கால்வைத்து மின்னல் வேகத்தில் புறப்படஆயத்தமானார் லாரி டிரைவர். அப்போது ரோட்டோரத்தில் பைக் ஒன்று கவிழ்ந்து கிடந்து பக்கத்தில் இரண்டுபேர் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பது லாரியின் லைட் வெளிச்சத்தில் தெரிந்தன.

அண்ணே அங்கபாருங்க அண்ணே யாரோ அக்சிடெண்ட்டாய் கெடக்குறாங்க அண்ணே லாரியெ கொஞ்சம் நிறுத்துங்க அண்ணே ...என்று கிளீனர் பையன் சொன்னான். அடெ வெவரங்கெட்ட பயலே இந்த நடுராத்திரியிலே சுடுகாட்டு ரோட்டுப்பக்கமா வண்டியிலேந்து விழுந்து கேடக்குராங்கண்டா இது ஆக்சிடன்ட் இல்லடா ஏதோ பேய் இவர்கள அடிச்சிருக்கும்டா... இந்த இடத்ல தாண்ட கொஞ்ச நாளக்கி முன்னாடியும் ஒருத்தன் பைக்கோட ரத்தம் கக்கி செத்துக் கிடந்தான்.. என்று பேயை ஏதோ இவரு கண்ணாலே பாத்தவரு போல அந்த கிளீனர் பையனிடம் கதையளந்தார்..... டேய் வாடா நாம இங்கேருந்து சீக்கிரமா போய்டலாம்..என்று லாரி டிரைவர் பதஸ்டமாக சொன்னார். அண்ணே 108க்காவது போன்போட்டு சொல்லிடுங்க அண்ணே பாவம்ண்ணே அவன் மனசு தாங்காமல் டிரைவரை கெஞ்சிக் கேட்டான். சரிடா...என்று கைபேசியை எடுத்து லாரியை வேகமாக ஒட்டியபடியே சம்பவத்தை 108க்கு [ ஆம்புலன்ஸ் ] சொல்லி மனிதாபிமானத்துடன் தனது கடைமையை செய்துவிட்டார்...

பிறகு சிகிச்சை முடிந்து நலமாக வீடு திரும்பியதும்...

டேய் எல்லாம் உன்னாலதான்டா இவங்க மோசமானவங்க நம்மல விடமாட்டாங்க வம்புக்குப் போகாதேடான்னு அப்பவே சொன்னேனே நீ கேட்டியா..??? எல்லாம் இந்த குடிப்பழக்கத்தாலே வந்ததுதான்டா இவ்வளவு பிரச்சனையும்.... நாம அப்பவே நம்ம பிரண்டுங்கலோட ஒண்ணா ஊருக்கு போய் இருந்தா இந்த நெலமெ வந்திருக்குமா.?? உன்னய நாய் கடிச்சிருக்குமா..? சரி அந்த ராத்திரி நேரத்துலே ஒரு ஒப்பாரி சவுண்டு வந்திச்சே அது என்னடா... என்று அவன் கேட்டான். அது வர்ற வழியிலே உள்ள காலனிலே ஒரு பெருசு தலையப் போட்டுடுச்சாம்டா.. சரிடா.. மச்சான் நாம இனிமே இந்த மாதிரி ராத்திரி நேரத்துலே தேவையில்லாமே எங்கையு போகக்கூடாதுடா...ஆமான்டா... சத்தியமா இனிமே நா குடிக்க மாட்டேன்டா. நீயும் இன்னையோட குடிப்பழக்கத்தை நிறுத்திடு....சரி நண்பா !.

ஏதோ இவர்களது நல்ல காலம் பிழைத்துக் கொண்டதால் உண்மை வெளி உலகிற்கு தெரியவந்தது. இல்லையேல் தீய நட்புக்களால் ஏற்ப்படும் இத்தகைய சம்பவங்கள் பேயடித்து விட்டதாக அனைவராலும் நம்பப்படுவர்.

பயமுறுத்தல் தொடரும்...
அதிரை மெய்சா


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.