Sunday, May 13, 2018

கவனம்.! குழந்தைகள் பாதுகாப்பில் தேவை கவனம்.!!!

முன்பொரு காலத்தில் நம் வீட்டுக் குழந்தைகளை சுதந்திரமாக சுற்றித்திரிய விட்டு தெருக்குழந்தைகளுடன் விளையாட விட்டு நிம்மதியாக பயமின்றி  நமது மற்ற   வேலைகளில் கவனம் செலுத்தி வந்தோம். குழந்தைகளும் ஆசைதீர சுதந்திரமாக  இஷ்டம்போல் விளையாடிக் களைத்து வியர்த்து சந்தோசமாக பாதுகாப்பாக வீடு திரும்புவார்கள்.


அது கள்ளம் கபடமற்ற வெள்ளைமனம் கொண்ட காலமாக இருந்தது.  விஞ்ஞானமும் நவீனமும் அத்தனை வளர்ச்சி பெறாமல் இருந்தது.ஆகவே மேற்கொண்டு அறிந்துகொள்ள வழிதெரியாமல் ஒரு குறுகிய வட்டத்திற்குள் தான் எந்தஒரு விஷயத்தையும் அறிந்து  வைத்திருக்க முடிந்தது . ஆகவே  ஒருவித பய உணர்வு குழந்தைகளுக்கு இருந்தது.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு இரண்டு வகையான பாதுகாப்பு தேவைப்படுகிறது.முதலாவது அது வளரும் சூழ்நிலையில் தீய பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளாமல்  நல்வழியில் செல்ல பெற்றோர்களின் கவனமும்,கண்காணிப்பும் நிறைந்த பாதுகாப்பு. 

அடுத்து இன்றைய சூழ்நிலையில் நடந்துவரும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை,குழந்தை கடத்தல் போன்ற குற்றங்களைச்செய்யும் சமூகவிரோதிகளிடமிருந்தும் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி.? இப்படியான இந்த இரண்டுவகை பாதுகாப்பும் பலமாக இருந்தால் குழந்தைகளின் வாழ்வு மிகச் சிறப்பானதாக இருக்கும். சமூக விரோதிகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்தை புரியும்படியாக அக்குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.அந்த சூழ்நிலையில் பாதுகாப்பை தேடிக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துச்சொல்ல வேண்டும்.


ஆனால் இன்றைய காலகட்ட அவசர உலகில் குழந்தைகளை பராமரிப்பதில், குழந்தைகள் வளர்ப்பில்,குழந்தைகளை பாதுகாப்பதில், குழந்தைகளின் பழக்கவழக்கத்தை கவனிப்பதில்,குழந்தைகளுக்கு புத்திமதி சொல்வதில் சற்று நாம் கவனக் குறைவாகவே இருந்து வருகிறோம் என்பது நிதர்சன உண்மையாக இருக்கிறது.ஏதோ காலை எழுந்ததும் அதன் காலைக் கடமைகளை முடித்ததும் தலைவாரிவிட்டு ஆடை அணிவித்து உணவு கொடுத்து அனுப்பிவைத்து விடுகிறோம். அண்டையர் வீட்டு பிற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் என்று நாம் கவனிக்காமல் இருந்து விடுகிறோம். பிறகு நாம் வீட்டு வேலையில் மூழ்கிப் போனதும் குழந்தையை பற்றிய சிந்தனையே இல்லாமல்  மறந்தே போய் விடுகிறோம்.

இப்படி கவனிக்கப்படாமல் விடுவதால்தான் குழந்தைகள் பல விபரீத நிகழ்வுக்கு ஆளாகிறார்கள்.பழக்கவழக்கமும் மாறிப்போய் விடுகிறது.பொய் பேசுவதற்கும் துணிவு ஏற்பட்டுப்போய் சில நேரங்களில் தனது நண்பன் நண்பி கொடுக்கும் தைரியத்திலும் யோசனையிலும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு காரணம் சொல்லி தப்பிக்க முயல்வார்கள்.

இதற்க்கெல்லாம் பெற்றோராகிய நாம் தான் முக்கிய காரணமாக இருக்கிறோம். தமது குழந்தை யார்யாருடன் பழகுகிறது அப்படி பழகும் மற்ற குழந்தைகள் எப்படிப்பட்ட குணம்கொண்டவர்களாக இருக்கிறார்கள். என்னமாதிரியான விளையாட்டுக்கள் விளையாடுகிறது எந்த இடத்தில் விளையாடிக்  கொண்டு இருக்கிறது. குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போது அந்நியர்களால் கவனிக்கப்படுகிறார்களா.? இப்படி ஒவ்வொரு அசைவிலும் நம் குழந்தைகளை சுற்றி நமது பார்வை இருக்கவேண்டும்.அப்போதுதான் அவர்களின் பழக்கவழக்கமும் பாதுகாப்பும் அவர்களுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்துக்களையும் உணர்ந்து முன்னெச்சரிக்கையுடன் அதற்குத்தகுந்தவாறு குழந்தைகளை நாம் கவனமுடன் பார்த்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

அறியாப்பருவம் கொண்ட அக்குழந்தைகளுக்கு நல்லது எது கேட்டது எது என பிரித்துப் பார்க்காத தெரியாத அந்த மழலைப் பருவம் தெளிவடையும் வரை  அதற்க்கென சொந்தமாக சிந்தித்து செயல்படும் அறிவுத்திறன் வரும்வரை ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பெற்றோர்களின் பாதுகாப்பு அவசியம் தேவைப்படுவதால் முடிந்தவரை நமது கண்காணிப்பில் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பதே அக்குழந்தைகளின் வருங்காலம் சீரும் சிறப்புமாக அமைய வழிவகுக்கும்.
    
                                                              அதிரை மெய்சா
                                         


                         No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.