Monday, January 19, 2015

தவறான உறவு விபரீதத்தை ஏற்படுத்துமா !?

இன்றைய நிலையில் நம்நாட்டிலும் மேலைநாட்டுக் கலாச்சார வாழ்க்கைமுறைகள் கொஞ்சம் கொஞ்சமாக உட்புகுந்து ஆதிக்கம் செய்யத் தொடங்கிவிட்டன. அதன் தாக்கமாக ஆண் பெண் அன்னியோன்யமாக பழகுதல் திருமணமானவர்கள் வேறுஒருவருடன் தகாத உறவுகள் வைத்துக் கொள்ளுதல் உறவு முறைகளுக்குள் கள்ள உறவுகளை ஏற்படுத்தி கொள்ளுதல் போன்ற சமூகச் சீரழிவை ஏற்ப்படுத்தும் பாதையில் சிலர் பயணிக்கத் தொடங்கியிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கக் கூடியதாக உள்ளது.

தவறான உறவுகளைப் பற்றி நினைக்கும்போது நம் முன்னோர்கள் சொன்ன ஆசை அறுவதுநாள் மோகம் முப்பதுநாள் என்கிற பழமொழிதான் ஞாபகத்திற்க்கு வருகிறது. இது முழுக்கமுழுக்க தவறான உறவுகளுக்கே ஒருவகையில் பொருத்தமாக இருக்கும்.. காரணம் தவறான உறவுகள் வைத்துக் கொள்பவர்கள்தான் தனது ஆசையும் மோகமும் தீர்ந்தபின் அதிகபட்சமாக கைகழுவி விட்டுவிடுவார்கள்.

ஆனால் உண்மையான நல்ல புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளும் கணவன் மனைவிகளுக்கிடையிலான உறவு அப்படியில்லை. என்னதான் குடும்பப் பிரச்சனைகள் வந்தாலும் எத்தனைதான் மனவருத்தம் ஏற்ப்பட்டாலும் அன்பும் பாசமும், ஆசையும் மோகமும் அளவில் குறையாமல் நாளுக்கு நாள் அதிகமாகி ஆயுட்காலத்தின் இறுதிவரை வலிமைகுறையாமல் இருக்கும். இதற்க்கு ஆதாரமாக நம்மை கடந்து சென்று மறைந்த மற்றும் இன்னும் உயிருடன் நம்மோடு வாழ்ந்துவரும் எத்தனையோ தாத்தா பாட்டிமார்களை நாம் பார்த்திருக்கலாம்.

ஆனால் முறையற்ற கள்ள உறவுகள், தவறான தொடர்பில் ஏற்ப்பட்ட உறவுகள் நல்ல உறவுகளைப்போல் நீண்டநாள் நீடிப்பதில்லை.அது பல விபரீதத்தையே உண்டுபண்ணி நிம்மதியிழக்க வைத்து விடுகிறது. அற்ப சுகத்திற்க்காக ஆயுள் முழுதும் அவப்பெயரை சுமப்பதுடன் தமது சொந்தபந்தம், பெற்றோர்கள் சகோதர சகோதரிகள், தாம் பெற்ற பிள்ளைகளென அனைவருக்கும் பெருத்த அவமானத்தையும், தலைகுனிவையும், பாதிப்பையும் ஏற்ப்படுத்தி விடுகிறது.

இந்தப் பாழாய்ப் போன கள்ள உறவுகள் தனது தவறான உறவுக்கு இடையூறாய் இருக்கும் தமது உடன் பிறந்த சகோதர சகோதரிகளையும், செல்லமாய் வளர்த்த தாம் பெற்ற பிள்ளைகளையும் கூட ஈவு இரக்கமின்றி கொலை செய்யத் துணிந்து விடுகிறது. என்பதை எத்தனையோ பத்திரிக்கைச் செய்தியிலும் தொலைக்காட்சி செய்தியிலும், இணையச் செய்தியிலும் படித்து நாம் அறிந்திருப்போம்

அமைதியாய் வாழ்ந்து வந்த எத்தனையோ குடும்பங்களில் இந்த தவறான உறவுகள் வந்து புகுந்து மொத்த குடும்பத்தையும் அழித்துள்ளதை நாம் கேள்விப்பட்டு இருப்போம்.  அதுமட்டுமல்ல பல பால்வினை நோய்களுக்கு ஆளாகி வளமாக்கி வாழ வேண்டிய வாழ்க்கையை வறண்ட நீரோடையாய் வனப்பில்லா விளைநிலம் போல்தான் மீதி வாழ்க்கையை கழிக்கும்படி இருக்கும்.

தவறான உறவுகள் என்பது நாம் அவசியமில்லாமல் தூக்கிச்சுமக்கும் பாரத்தைப் போலாகும். அந்தபாரத்தை வெகுநாட்களுக்கு தூக்கி வைத்துக் கொள்ள முடியாது. அப்படிப்பட்ட பாரம் நமக்குத் தேவைதானா என்பதை நாம் தூக்குமுன்னே நினைக்க வேண்டும்.

ஆகவே தவறான உறவுகளால் அதிகபட்சம் பிரச்சனைகளும், விபரீதங்களும் மன உளைச்சல்களும் மரியாதைக் குறைவுகளும் சமூகத்தாரிடத்தில் அவப்பெயர்களும் குடும்ப வாழ்வில் நிம்மதியில்லாத நிலையும் தனது பெற்றோர் கணவன் மனைவி பிள்ளைகளிடத்தில் பாசமில்லாமல் போவதும் இப்படி அனைத்து விஷயங்களிலும் தனிமைப்பட்டு வாழ்நாள் முழுதும் இந்த சித்திரவதையை அனுபவிக்கும்படி ஆகிவிடும் அல்லது வாழ்க்கையில் வெறுப்புற்று வேறு தவறான முடிவை எடுக்கத் தூண்டும் எனவே நிம்மதியுடன் அனைத்தும் பெற்றுவாழ இந்தப் போக்கைத் தவிர்த்துக் கொண்டு தனக்கு அமைந்த குடும்பவாழ்க்கையை தரமாக்கிக் கொண்டு வாழ்வதே தலைசிறந்த வாழ்க்கையாக இருக்கிறது.

அதிரை மெய்சா 

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.