Monday, January 19, 2015

கனவு !

நினைவோட்டங்கள்
நித்திரை வழியாய்
மனத்திரையில்
பிரதிபலித்து
உள்ளுணர்வில்
காண்பதே கனவு

கனவுகள் யாதுமே
காகிதப் பூப் போலாகுமே
களைந்ததும் மறைந்திடும்
கரும்புகைக் கூட்டமே

கனவுகள் யாவருக்கும்
மெய்ப்படுவதில்லை
கவலையுற கண்ணீர்விட
கைச்சேதமில்லை

பகல்க்கனவு பலிக்காதென
பண்டுதொட்டுச் சொல்வதுண்டு
பல்லாண்டு வாழ்ந்திடவும்
பலர்க் கனவு காண்பதுண்டு

ராக்கனவு கண்டவரும்
நோக்கத்தில் தோற்றிருப்பர்
ராகு கேது குளிகையென
ரகமாய்ச் சகுனம் பார்த்திருப்பர்

சகுனங்களும் கனவுகளும்
சங்கடத்தை உண்டுபண்ணும்
மௌனங்களும் முயற்ச்சிகளும்
முன்னேற வழிவகுக்கும்

கனவுக்குச் சக்தியில்லை
காண்பது வெறும் இயல்புநிலை
மனதிற்குச் சக்தியுண்டு
மதியறிந்த நடத்தைகொண்டு

இறுதியாய்ச் சொல்வதானால்
இன்றுவரை கனவுகள் யாதும்
மெய்ப்படுவதில்லை

உறுதியாய் நம்புவோமானால்
உறக்கத்தில் தெரிவது யாவும்
உலகாழும் இறையோனின்
மகத்துவத் தன்மை



அதிரை மெய்சா


குறிப்பு : இந்த கவிதை
கடந்த [ 04-12-2014 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம்
நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. கீழே உள்ள காணொளியில் 16 வது
நிமிடத்தில் வாசிக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.