Thursday, March 27, 2014

அந்தக்காலம்


இனம்புரியாத மகிழ்வினை
தினம் அனுபவித்து
மணம் கமழ்ந்த காலம்

கஷ்டம் கவலை அறியாமல்
நஷ்டம் நடப்புத் தெரியாமல்
இஷ்டம் போல் வாழ்ந்தகாலம்

சண்டை போடும் அண்டைவீடும்
சாயங்காலம் கூடிப் பேசி
சமாதானம் கொண்ட காலம்

சினம் கொண்ட சிநேகிதனை
மனம் கொண்டு நேசித்து
பகை மறந்து கைகோர்த்த காலம்

கூட்டுக் குடும்பம் சிறப்பென்று
கொள்கை மாறா கோட்பாட்டில்
கூடி வாழ்ந்து மகிழ்ந்த காலம்

நாட்டுப்பற்றில் அக்கறை கொண்டு
வீட்டை துறந்த தியாகிபலர்
வீரமுடன் சென்ற காலம்

நம்பிக்கையும் நானயமும்
நாடெங்கும் நிறைந்திருந்த
நடிப்பரியா நல்ல காலம்

ஜாதிமத பேதமின்றி
சமத்துவத்தை பேணிக்காத்து
சம உறவில் வாழ்ந்த காலம்

நீதி காத்த அரசர்களும்
நெஞ்சில் துணிவு கொண்டவர்களும்
நேர்மையாய் ஆண்ட காலம்

தேசப்பற்றில் அக்கறைகொண்டு
நாசம் விளைத்த நச்சுக்களை
இனம்கண்டு அழித்தகாலம்

கள்ளமில்லா கபடமில்லா
வெள்ளை உள்ளம் படைத்தநல்லோர்
மிகுதியாய் வாழ்ந்த காலம்

காசுபணப் பஞ்சத்திலும்
மாசுபடியா எண்ணம் கொண்ட
நேசர்பலர் நிறைந்த காலம்

எத்தனைதான் புதுமைகள்
இவ்வுலகில் வந்தாலும்
அத்தனைக்கும் வித்திட்ட
ஆதிமனிதன் வாழ்ந்த காலம்
அந்தக் காலம்
அதிரை மெய்சா

1 comment:

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.