Thursday, February 20, 2014

திருடாதே...மனிதா திருடாதே !


திருட்டு ஒரு கூடாத செயல். தன்மானத்தை இழக்கவைக்கும் இழிவுச் செயல்.மனிதாபிமானமற்ற செயல். மனசாட்சி இல்லாத செயல். நம்பிக்கையை நாசப்படுத்தும் செயல்.கீழ்த்தரமான செயல். இன்னும் சொல்லப்போனால் தன்னை சமுதாயத்தார்களிடமிருந்து பிரித்து தனிமைப்படுத்தி மானம்,மரியாதைக்கு பங்கம் விளைவிக்கும் செயலாகும்.

திருட்டு என்பது தனக்குச் சொந்தமில்லாத தனக்கு உரிமை இல்லாத அடுத்தவர்கள் சொத்து, பணம் பொருள் நகை, பிற உடைமைகள் ஆகிவைகளை அதன் உரிமையாளரின் அனுமதியின்றி அபகரித்துக் கொள்வது மற்றும் நம்பிக்கையின் பேரில் கொடுத்து வைத்திருக்கும் அமானிதப் பொருட்கள் அவர்களின் அனுமதியின்றி அனுபவிக்கும் அனைத்தும் திருட்டெயாகும்.

திருட்டில் பல விதங்கள் உள்ளது.சிலர் வறுமையில் திருடுகிறார்கள்.சிலர் சந்தர்ப்ப சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு திருடுகிறார்கள். சிலர் சில பொருளின்மீது ஆசைப் பட்டு திருடுகிறார்கள். சிலர் தன் தேவைக்கு கிடைக்காததால் அல்லது கொடுக்காததால் வீட்டுக்குள்ளேயே திருடுகிறார்கள். சிலர் விளையாட்டாக திருடுகிறார்கள்.இன்னும் சிலர் திருடுவதையே தொழிலாக்கிக் கொண்டு திருடுகிறார்கள்.அதுமட்டுமல்லாது மக்களையும், அரசையும் ஏமாற்றி ஊழல் செய்வதும் ஒருவகையில் திருட்டையேசாரும்.

அடுத்து தங்கும் விடுதி, [ Hostel ] பேச்சுலர் அக்கமன்டேசன், கம்பெனியில், கடைகளில் வேலைசெய்வோருக்கு அந்த நிறுவனத்தினரால் கொடுக்கப்படும் தங்கும் ரூம்கள் இப்படி பலபேருடன் தங்கியிருக்கும் சூழ்நிலையில் ஆடை, உடைமைகள், காசுபணம் திருட்டுப் போவதுண்டு. இந்தத்திருட்டு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.இந்தத் திருட்டை பொருத்தமட்டில் பார்த்தால் விளையாட்டாகவும் பார்க்காவிட்டால் திருட்டாகவும் மாற்றிப் பேசப்படும்.

இன்னும் சிலர் தான் வேலைசெய்யும் அலுவலகம் ,கடை, தொழில் நிறுவனம் ஆகியவற்றில் கௌரவத் திருடர்களாக சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் தன் கைவரிசையை காட்டிக் கொண்டிருப்பார்கள். .எது எப்படியோ திருடுவதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. எப்படிச் செய்தாலும் திருடுபவரை திருடன் என்று தான் சொல்லமுடியும்.யார் செய்தாலும் திருட்டு திருட்டுத்தான் அதை நியாயப்படுத்திச் சொல்லமுடியாது.

உழைத்து சம்பாரித்த ஒரு ரூபாயில் கிடைக்கும் நிம்மதியும்,சந்தோசமும் திருடிப் பெற்ற கோடிரூபாயில் கிடைப்பதில்லை என்பதே உண்மை..அது எப்போதும் நம் மனசாட்சியை உறுத்திக் கொண்டே இருக்கும். அப்படிக் கிடைக்கும் பொருளை,பணத்தைக் கொண்டு என்னதான் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தாலும் மனதில் நிம்மதி இருக்காது. காரணம் பறி கொடுத்தவரின் வயிற்றச்சலும், சாபமும் நிம்மதியுடன் வாழவிடாது. ஆகவே பிறர் உழைத்து சேர்த்த பொருளையோ, பணத்தையோ திருடி நிம்மதியில்லாமல் சாபத்தை சுமந்து வாழ்வதைவிட தாம் உழைத்து ஒருவாய்க் கஞ்சி குடித்தாலும் நிம்மதியுடனும், சந்தோசத்துடனும் வாழும் வாழ்க்கையே மேலாகும்.

திட்டம் போட்டு திருடும் கூட்டம் திருடிக் கொண்டே இருக்கிறது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது.என்ற பழைய சினிமா பாடலுக்கு ஏற்ப திருட்டு பலரூபத்தில் இவ்வுலகில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.

இப்படி பலவகையில் திருட்டுக்கள் நம்மை சுற்றி வளம் வந்து கொண்டிருப்பதால் நாம் உஷாராக இருப்பதுடன் நமக்கு எந்த சூழ்நிலையிலும் அந்த கீழ்த்தரமான ஆசை வந்து விடாமல் மனம் தடம்புரண்டு விடாமல் எண்ணங்களை தூய்மையாக்கிக் கொண்டு தலை நிமிர்ந்து மதிக்கத்தவர்களாய் நாம் நடந்து கொள்வோமாக..!!!

அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.