Wednesday, January 22, 2014

என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் :)


இவ்வுலக வாழ்க்கையில் நமக்கு எத்தனையோ இரத்த உறவுகள் சொந்தபந்தங்ககள் இருந்தாலும் அனைத்து உறவுகளையும் விட அதிகமாய் நேசித்து, பாசம்காட்டி,இன்ப துன்பங்களை உரிமையுடன் பகிர்ந்து கொண்டு உண்மையான அன்பு செலுத்தும் ஒரு உன்னத உறவுதான் இந்த நட்பென்னும் நண்பனுறவு. இடையில் சேர்ந்த உறவாயினும் அனைத்து உறவுகளையும் விட உயர்வான உறவாக மிக சக்தி வாய்ந்த உறவாக முதன்மை இடம் வகிக்கிறதென்றால் அது நண்பனென்றும் தோழனென்றும் அழைக்கப்படும் இந்த உன்னதமான உறவாகத்தான் இருக்கமுடியும்.

சிறு பிராயத்தில் தொடங்கும் இந்த நட்புக்கு நல்லது எது ? கெட்டது எதுவென இரகம் பிரித்துப் பார்க்கத் தெரியாத அந்த அறியாப்பருவத்தில் நம்மையும் அறியாது இயற்கையாக பழகும் பழக்கமே நாளடைவில் மனத்தினில் ஒட்டிக்கொண்டு உயிருக்குயிரான சிநேகிதமாய் மாறி மனதினில் நிலைகொண்டு விடுகிறது.

அடுத்து பள்ளி,கல்லூரியில் நெருங்கிப் பழகிய நண்பர்கள். தொழில் ரீதியாக பழகியவர்கள், பணி செய்யுமிடத்தில் பரிச்சயமாகி நல்ல நண்பர்களாய் ஆனவர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களில் தன்னிடம் மட்டும் சகஜமாக பழகி நண்பனானவர்கள். இப்படி பல சூழ்நிலையில் நண்பர்களைப் பெற்றுக் கொண்டவர்களும் உண்டு.

இந்த நட்பென்னும் நண்பன் உறவின் தொடக்கத்திலிருந்து தான் ஒருநல்லவன் தீயவனாகவும். ஒருதீயவன் நல்லவனாகவும் மாற்றும் சக்தியும் உள்ளதென்று கூடச் சொல்லலாம்.

ஒருவனின் வாழ்க்கைப்பாதை சீராவதும் சீர்கெடுவதும் நட்பெனும் வழித்தடமேயாகும். நண்பன் கொடுத்த நல்லுபதேசத்திலும், ஊக்கப்படுத்தியதிலும், அக்கரைகாட்டியதிலும் எத்தனையோ நண்பர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்தும் இருக்கிறார்கள். அதுபோல் நட்பின் தகாதப் போக்கினால் பல தீய பழக்கங்களுக்கு அடிமையாகி தீங்குகள் பல செய்து தனது வாழ்க்கையை சீரழித்துக் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பணம்,பதவி,பட்டம்,படிப்பு, புகழ் இவைகளுக்கு அப்பாற்ப்பட்ட உன்னதமான உறவே நட்புயெனும் நண்பன் உறவு. ஒரு உண்மையான நல்ல நண்பன் கிடைப்பது ஆலமரத்தினைத் தாங்கி நிற்கும் விழுதுகள் போல் அத்தனை பலம் நிறைந்ததாய் இருக்கும்.

தான் கெட்டாலும் தன் நண்பன் கெடக்கூடாது என்று நினைக்கும் நண்பர்களும் உண்டு. தான் கெட்டதோடு மட்டுமல்லாது தனது நண்பனையும் சேர்த்துக் கெடுக்கும் நண்பர்களும் உண்டு.

நண்பர்களுக்குள் ஏற்ப்படும் சிறுசிறு பிரச்சனைகளை பெரிது படுத்திக்கொள்ளாமல் ஒருவரையொருவர் விட்டுக் கொடுத்துப் போகும் மனப்பான்மையையும், சகிப்புத்தன்மையையும், புரிந்துணர்வும், பெருந்தன்மையை மேற்க்கொள்வதும் தான் நட்பை பிரியாமல் உள்மனதுடன் நேசிப்பதாக அர்த்தமாகும். அர்த்தமற்ற நட்புக்கு ஆயுள் குறைவாகத்தான் இருக்கும். அர்த்தமுள்ள நட்புக்கள் எச்சூழலிலும் அழியாமல் இருக்கும்.

ஆகவே நட்பு எனும் உறவின் உயரிய சிறந்ததொரு உறவுக்குக்களங்கம் வராமல் தோள் கொடுக்கும் தோழனாய் தூக்கி உயர்த்தும் நண்பனாய் இருந்து தனது நண்பனுக்குள் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு நல்லுபதேசங்களை பரிமாறிக் கொண்டு மகிழ்வுடன் நல்ல நண்பர்களாக கைகோர்த்து காலத்தால் அழியாத ஒரு உறவாக அனைத்து உறவுகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருப்பதுடன்...''எம் ஃபிரண்டப் போல யாரு மச்சான்'' எனும் நட்பின் உயரிய வார்த்தையை வெறும் கேளிக்கைக்காகவும், விளையாட்டிற்காகவும் சொல்லி மகிழாமல் உண்மையான நேசத்துடன் நேர்மையான வழியில் நட்பை வளர்த்துக்கொண்டு சிறந்துவிளங்கி வீடும்,நாடும் போற்றும் வகையில் எக்காலத்திலும் இணைபிரியாத இப்பார்போற்றும் சிறந்த நண்பர்களாக விளங்குவோமாக.!!!

அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.