Friday, September 13, 2013

யார் நல்லவர்கள்.!?

நிறத்தில் எத்தனை விதமுண்டோ அதுபோல் மனிதர்களின் குணத்திலும் பற்ப்பல விதமுண்டு. இவ்வுலக வாழ்வில் நாம் அன்றாடம் எத்தனையோ வித்தியாசமான குணமுடைய மனிதர்களை காண்கிறோம். சந்தித்தும் சகல செய்திகளும் பகிர்ந்தும் வருகிறோம்.சில மனிதர்களின் கவர்ச்சிகரமான பேச்சும், செயல்பாடும், அணுகு முறைகளும் நம்மைக்கவர்ந்து அவர்களை நல்லவர்கள் என்று முத்திரை குத்துவதுடன் நாமும் நம்பி மோசம் போய் விடுவதும் உண்டு.அத்தகைய இரட்டை வேடமிடும் மனிதர்களே இவ்வுலகில் அதிகம் நடமாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் இவர்களின் அடையாளங்களை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. காரணம் இத்தகைய மனிதர்களிடத்தில் சகல நடிப்பும் கைதேர்ந்த கலையாக இருக்கும்.நாம் தான் விழிப்புணர்வுடன் இருந்து இத்தகையரோடு விலகி இருத்தல் வேண்டும்.

உதாரணமாகச்சொல்லப்போனால் இறைப்போதகர்கள், ஞானபீடர்கள், துறவிகளென்று தன்னைப்புனிதர்களாக அடையாளப்படுத்திக்கொண்டு இறைப்பள்ளி புனித ஸ்தலங்களில் காணும் இவர்களை இருட்டிய பின் இரண்டாம் நம்பர் கடைகளிலும் காணலாம். அனைத்து போதைப் பொருளுக்கும் அடிமையாய் இருக்கும் இத்தகையோர்கள் நல்லவர்களா..?

தானதர்மத்திலும், தற்ப்பெருமையில்லா சமுதாயத்தொண்டிலும், தரமான மனிதர் என்று தலை சிறந்து விளங்கும் சிலர் தகாத உறவுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வீட்டிற்கு துரோகியாகவும் நாட்டிற்கு நல்லவராகவும் வளம் வருகிறார்கள். அப்படி என்றால் இக்குணம் படைத்த இத்தகையோர்கள் நல்லவர்களா..?

இன்னும் சிலர் அனைத்திலும் தான் சரியானவன் என்பவனாய் அடக்கமுள்ளவனாய் அன்பாய் பேசி நம் கஷ்டத்தில் பங்கெடுத்துக்கொள்பவனாய் கபட நாடகமாடி அனைத்து அந்தரங்க செய்திகளையும் அறிந்து கொண்டு எத்தகைய வலிமையுள்ளோர் என்பதனையும் அறிந்து வைத்து கொண்டு சோதனைகள் ஏற்ப்படும் போது விலகி நிற்ப்பதோடு மட்டுமல்லாது அதை விமரிசித்துப் பேசி ஆனந்தமடையும்...இத்தகையோர்கள் நல்லவர்களா..?

இன்னும் சிலர் பகுத்தறிவுச்சிந்தனை பேசி பாரினிலே வளம் வந்து பழகிய நட்பிற்கும் உறவினர்களுக்கும் பங்கம் விளைவிக்கும் விதத்தில் பாசாங்கு செய்து பலருக்கு புகழ்ச்சியாளராகவும் சிலருக்கு சூழ்ச்சியாளராகவும் இருக்கிறார்கள்.. இத்தகையோர்கள் நல்லவர்களா..?

இன்னும் சிலரது போக்கு சற்று வித்தியாசமான முறையில் அமைந்து இருக்கும்.

இறைபயம், மனசாட்சி, உதவி,நேர்மை,நியாயம் என்று அனைத்திலும் உயர்ந்து நிற்கும் இவர்களிடத்தில் தாழ்வு மனப்பான்மையும் பொறாமையும் புரையோடிக்கிடக்கும்.அது மட்டுமல்லாது உள்ளொன்றும் புறம் ஒன்றுமாக நினைத்து அடுத்தவர்கள் மனதை வேதனைப்படுத்தி அகம் மகிழ்வர். இத்தகையோர்கள் நல்லவர்களா..?

இப்படிக்கணக்கு பார்த்துக்கொண்டு போனால் இவ்வுலகில் ஒருவர் கூட நல்லவராக இருக்க வாய்ப்பே இல்லாமல் போய் விடும். அப்படியானால் யார் நல்லவர்கள்.? என்று நீங்கள் வினா எழுப்புவது என் வியூகத்தில் தெரிகிறது.

குணமென்பது இயற்கையாக இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனின் படைப்புடன் கூடவே ஒன்றி வந்த ஜீனில் உருவானவை. ஆனால் காலப்போக்கில் மனிதன் ஒரிஜினலை விடுத்து வழி மாறும் போது இரட்டைவேட மிடுகிறான். நல்லவராயினும், தீயவராயினும் நடித்து வேஷமிடும் இரட்டைப்போக்கான எண்ணம் இல்லாமல் சொல்லாயினும்,செயலாயினும் சுயரூபத்தை வெளிப்படையாக்கி திறந்த மனம் படைத்தவனாக இதுவே எனது உண்மைக்குணம்,உண்மை நிலை என்று யார் வெளிப்படுத்துகிறார்களோ அவர்களே நல்லவர்கள்.

தனது உடல் மட்டுமல்லாது உள்ளத்தில் தூய்மையானவர்களாய், ஏழ்மையிலும் பெருந்தன்மைனவர்களாய்,யாவருக்கும் தீங்கிழைக்காதவர்களாய், எல்லோர்க்கும் உகந்தவர்களாய், ஏற்ற தாழ்வாய் எண்ணாதவர்களாய், துன்பத்தில் துயர்துடைப்பவர்களாய், தூய எண்ணம் கொண்டவர்களாய், நேர்மையாய் நடந்து நீதியை நிலைநாட்டி, நேசக்கரம் நீட்டி யாவரையும் வஞ்சிக்காதவர்கள் யாரோ அவர்களே நல்லவர்கள்.பொய் வேஷங்களை அழித்து மெய்ப்பாசங்களை பெருக்கி இவ்வுலக வாழ்வில் நல்லவர்களாய் வாழ்ந்து நல்லவர்களாய் மரணிப்போம்.!!!

அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.