Friday, September 13, 2013

மேகமும் மழையும்

அந்தரத்தில் மிதக்கும் அழகிய
பஞ்சு மெத்தைக்காரனாம் நீ

மழை நீரை மடியில் சுமந்து
மார்கழித்திங்கள் வரை காத்திருந்து
மா மாரிப்பொழிந்து
மானிடர்களையும் மற்றபிற
உயிரினங்களையும்
மகிழ்விக்கிறாய் நீ

காலத்தில் பொழியவில்லையெனில்
கல் நெஞ்சம் படைத்தவன் கூட
கண்ணீர் விட்டு அழுகின்றான்
உன் வருகை நோக்கி

நிலத்து நீரை ஆவியாக்கி
நீண்ட நாள் உன் உள்ளடக்கி
மீண்டும் மழை நீராய்த்தரும்
பல மந்திரம் கற்ற வித்தைக்காரனாம் நீ

மழை நீரை மேகக்குடையாய் விரித்து
மணங்கமழும் தென்றலைத்தூது விட்டு
மாதத்தில் பொழிந்து மகிழ்வு தரும்
மாபெரும் கொடை வள்ளலாம் நீ

என்ன ஒரு ஆச்சரியம்
உன் தந்திரச் சமிக்ஞையில் தவழ்ந்து
தாவி விளையாடிக்கொண்டிருக்கிற
மழை நீர்
உன் மேகப்பெட்டகத்தினுள்
மாயக் கண்ணாடியாய்
நீர் த்துளிகளாய் நிறைந்து
கிடக்கிறது

இவ்வையகம் செழிக்க
இவ்வாழ்வு தழைக்க
வறியோரின் வறுமையை போக்க
வஞ்சிக்காமல் நீ பொழிந்து
கொஞ்சிக்கூடி மகிழ வைத்து
நெஞ்சுக்குள் குடிகொண்டு
வற்றாத அமுதாய்
வந்து பொழிந்திடுவாய்
வனப்புடன்
இப்புவி நின்று

மழை நீரும் மேகமுமாய்
மனம் குளிர வைக்கும் நீ
வாழிய பல்லாண்டு
வான்வெளியில் என்றென்றும்
படர்ந்து நின்று
அதிரை மெய்சா

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 22-08-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.