Wednesday, September 18, 2013

ஸம்மருக்கு என்ன செய்யலாம்.!?

கார்காலம் கரைந்து பனிப்பூக்கள் காய்ந்து இனி கோடை காலம் துவங்கி விட்ட இத்தருணத்தில் நாம் நம் உடலையும், மேனியையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது மிக அவசியமான ஒன்றாய் உள்ளது.


முன்பொரு காலத்தில் எத்தனை கோடைகாலமாயினும் இயற்கையாகவே நமதூர்பகுதிகள் இதமான சூழலில் இனிய தட்பவெட்பநிலை நிலவும். கோடை காலமென்றாலும் கொண்டாட்டம் தான் என்று சொல்லுமளவுக்கு பசுமைகள் தழைத்தோங்கி காணுமிடமெல்லாம் வாய்க்கால் குளங்களில் நீர் தேங்கி சீதோசன நிலை மாறினாலும் ஜில்லென்ற காற்றினில் வியர்வைகள் மாயமாய் மறைந்து மண்பானை தண்ணீர் குடித்து மனமெல்லாம் சந்தோசமாய் கோடைமழையும் கூடப்பொழிந்து திருவிழாக்கோலம் காண்போம்.

ஆனால் காலப்போக்கில் சுட்டெரிக்கும் வெயிலையும், சூறாவளி அனல்காற்றையும் சுவாசிக்கும் நிலை உருவாகி அன்றாடம் அவதியுறும் அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டு விட்டோம். இயற்க்கைச் சீற்றங்களினாலும், இயந்திர வாழ்க்கைக்கு மனிதன் தயார் படுத்திக்கொண்டதாலும், இயற்கை அழிந்து பசுமைகள் பறந்தோடி பல வண்ணப்பறவைகளின் ஓசை நிசப்தமாய் காணுமிடமெல்லாம் கரும்புகை காற்றாய் காது பிளக்கும் ஓசையில் கனரக வாகனங்கள் கூட்டமாய் காலம் நவீனத்தின் பக்கம் நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. எது எப்படியாயினும் கோடை வெயில் கொளுத்தும் வெயிலாக உருவெடுத்து விட்டது. இவ்வேளையில் நம் உடலையும், மேனியையும் பாதுகாத்துக்கொள்ளுதல் மிக மிக அவசியமே..!

இதோ சில உங்களுக்காக கோடைகால டிப்ஸ் :
 
1. கோடையின் தாக்கத்தை தீர்க்க பலவண்ண குளிர்பானகளை அருந்துகிறோம். வயிறுமுட்ட குடித்தாலும் தாகம் தீர்வதில்லை. காரணம் அதில் கலந்திருக்கும் வேதியல் ரசாயனப் பொருட்களேயாகும். இத்தகைய குளிர்பானங்களை அருந்திவதை தவிர்த்து இளநீர்,தர்பூசணி, ஆரஞ்சு, எலுமிச்சைப்பழச்சாறு மற்றும் இயற்க்கைப்பலச்சாரை அருந்தலாம்.இதனால் உடல் ஆரோக்கியம் பெறுவதுடன் தாகம் தணிகிறது. களைப்பு அடங்குகிறது. புத்துணர்வு கிடைக்கிறது [ அதிகக்குளிரூட்டப்படாமலும் ஐஸ் கட்டிகள் உபயோகிக்காமலும் இருந்தால் இன்னும் உடலுக்கு ஏற்றமாக இருக்கும்.]

2. இக்கோடையில் என்னதான் ஏ.சி இட்டு தூங்கினாலும் இயற்க்கை தூக்கத்தின் மகிமை அலாதி சுகமே. ஆகவே வீட்டு மாடி மேல் தளத்தில் கீற்றுக்கொட்டகை அமைக்கலாம், அல்லது தினமும் காலை மாலை வேளையில் மேல்தளத்தை நீரிட்டு ஈரப்பதமாக்கிக் கொண்டால் வீட்டின் உட்பகுதி குளிர்மை பெரும். தினமும் இப்படிசெய்து வந்தால் அனல் சூடு வீட்டினுள்ளே நீங்கி இக்கோடை சூட்டிலிருந்து கொஞ்சம் விடுதலை பெறலாம். [ அட போங்க சார்... ஏ.சி இட்டு தூங்கவும், தண்ணீர் விட்டு வீட்டை கழுகவும், மின்சாரத்திற்கு எங்கே போவது என்று முகம் சுளித்து முனுமுனுப்பது என் காதில் விழுகிறது ! ]

3. கோடைகாலத்தில் நீராடுவது என்றால் அது ஒரு தனி சுகம் தான்.ஆனால் முன்போன்று அப்படி நீராட ஏரி,குளங்களில் தண்ணீர் இல்லாமல் எட்டாத தூரக்கனவுகளாய் ஆகிவிட்டன. நதிகளிலும் தண்ணீர் இல்லை.ஆதலால் அநேகமாய் அனைவர்களும் வீட்டுக்குளியல் தான் குளிக்கின்றோம்.அப்படி வீட்டுக்குளியலில் ஆனந்தமாய் குளிக்க நினைத்தால் தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி சூடு தணிந்த பின் முழ்கி குளிக்கலாம்.அவசியம் தினமும் நீராடுவது நன்று. [ நறுமண சோப்புகளை தவிர்த்து மஞ்சள்,சந்தனம் போன்ற உடலுக்கு குளிர்ச்சிதரும் மூலிகை கலவை சோப்புக்களை உபயோகிக்கலாம்.]

4. அடுத்து நாம் கவனிக்கவேண்டியவை கோடை காலத்தில் உடைகள் விஷயத்தில் மிகுந்த கவனம தேவை. வியர்வை தேங்கி நிற்காத வகையில் உள்ள நூறு சதவிகித காட்டன் துணியிலான ஆடைகளை அணிவது நலம் பயக்கும். அதுபோன்று ஆடைகளை நாள் ஒன்றுக்கு ஒருமுறை மட்டும் அணிந்து தினம் தினம் மாற்றிக்கொள்வது இன்றியமையாததாக இருக்கும். சுருங்கச்சொன்னால் உடலை தூய்மையாக வைத்துக்கொள்வது மிகமிக அவசியமானதாகும்.அப்படியில்லையெனில் உடம்பிலிருந்து வெளியாகும் வியர்வைகள். உடல் சூட்டினாலும்,வியர்வை எனும் கழிவு நீரினாலும் உருவாகும் உஸ்னகட்டிகள்,வேக்கூரு எனும் வேனல் மருக்கள் இவை ஏற்ப்பட்டு விட்டால் பெரும் அவதிக்குள்ளாகி விடுவோம். [ பெரும்பாலும் இத்தகைய கட்டிகள் தலை,முகம் கழுத்து ஆகிய பகுதிகளிலேயே அதிகம் உருவாகும். காரணம் அப்பகுதிகளில் வியர்வை தேங்கி கிருமிகள் உண்டாகி கட்டிகளாக உருவெடுத்து கடும் தொல்லை கொடுத்து விடும் ]

5. அடுத்து அனைத்திற்கும் மேலாக இத்தகைய வெப்பகாலத்தில் கோபப்படுவது,பிள்ளைகளை, வீட்டார்களை கடிந்து கொள்வது, ஆத்திரமூட்டும் செயல்களை செய்வதை முடிந்தவரை தவிர்த்துக்கொண்டு பொறுமையை கையாண்டால் நலம் பயக்கும்.காரணம் இத்தகைய சீதோசன நிலையில் கூடுதல் டென்சனை ஏற்ப்படுத்தி கொள்வதால் உடல் நிலை வெகுவாக பாதிப்படைந்து விடும்.  [இறுதியில் உடலில் இரத்த அழுத்தம் கூடி அதன் விளைவாக மயக்கம்,ப்ரஸர்,மாரடைப்பு, போன்ற பாதிப்புக்கள் வந்து அபாயத்தை ஏற்ப்படுத்தி விடுகின்றது. இந்த விசயத்தில் முதியோர்கள் அதிக கவனம் செலுத்துவது நன்று ]

இன்னும் எத்தனையோ ஆயிரம் பின்பற்றும் விஷயங்கள் இருந்தாலும் மேற்ச்சொன்ன கோடைகால டிப்ஸை முடிந்தவரை பின்பற்றினால் இக்கோடை வெயிலை சமாளித்து விடுதலை பெற்று கொஞ்சம் மனம் ஆறுதல் அடைந்து கொள்ளலாம். நீங்களும் கொஞ்சம் முயற்ச்சித்துப் பாருங்களேன் !
அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.