Monday, September 16, 2013

மஞ்சப்பையை மறந்ததேன் .!?

என்னடா மஞ்சப்பைக்கெல்லாம் ஒரு கட்டுரையா ? என்று யாரும் கேலியாக நினைக்க வேண்டாம். நம் வாழ்வில் நம்முடன் இருந்து இன்று மறைந்து வரும் சில பொருட்களையும் அதன் பலன்களையும் இன்றைய நாகரீக உலகில் நினைவூட்டிப் பார்க்கவேண்டும். அப்போது தான் இன்றைய தலைமுறையினருக்கு அன்றைய வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்பதினை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதே என் நோக்கம். அதில் ஒன்றே இந்த மஞ்சப்பை.

அன்றைய காலகட்டத்தில் அதிகமாக நம் உபயோகத்தில் இருந்தது துணியிலான இந்த மஞ்சப்பையே.! பார்ப்பதற்கு எளிமையான தோற்றத்தில் இருந்தாலும் நாட்பட உழைத்து நமக்கு உற்ற தோழனாக விளங்கியது என்றே சொல்லலாம். ஒரு மஞ்சப்பையின் உபயோகம் சுமார் இருபது பிளாஸ்டிக் பைகளுக்கு சமம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அது மட்டுமல்லாது மஞ்சப்பை புழக்கத்தில் இருந்த காலத்தில் இத்தனையும் குப்பை கூளங்கள் அசுத்தங்கள் இல்லாத நகரங்களாக நாடுமுழுதும் சுத்தமாக இருந்தது. இன்று அனைத்து இடங்களும் மாசுபடிய மஞ்சப்பை ஒழிந்ததும் ஒரு காரணமென நான் நினைக்கிறேன். அது எந்த அளவுக்கு உண்மை என்பது இக்கட்டுரை வாசிப்போரின் வரவேற்ப்பை பொறுத்து இருக்கிறது. மேலும் பார்ப்போம்.!

அன்றொரு காலத்தில் நமது நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் அத்தியாவசியப் பொருளாக அதிகப்புழக்கத்தில் அனைவரது கைகளிலும் தென்பட்டது. இந்த மஞ்சப்பை. அது என்னவோ மஞ்சள் நிறம் ராசியானது என்று நம்பிக்கை வைத்திருப்பார்கள் போலும் நிறத்தினில் எத்தனையோ நிறமிருந்தும் அதிக எண்ணிக்கையில் வியாபார ஸ்தாபனங்களில் கொடுக்கப்படும் விளம்பாரப்பைகள் மஞ்சள் நிறம் கொண்டதாகத்தான் இருக்கும்.

இந்தப்பைக்கு ஒரு நேரத்தில் டிமாண்ட் இருந்தது என்று கூட சொல்லலாம். பெரும்பாலும் ஜவுளிக்கடை [துணிக்கடைகளில்] துணிகள் வாங்கும்போது அந்தக் கடைப்பெயர் விளம்பரத்துடன் கூடிய மஞ்சள் பையில் போட்டுக்கொடுபார்கள். அப்போது கடைக்காரர்களுக்கு பொருளை விற்ற ஆனந்தம் அவர்களது புன்சிரிப்பில் தெரியும். பொருள் வாங்கியோருக்கோ பொருளை விட அந்த மஞ்சள் பையை வாங்கிவிட்ட மகிழ்ச்சி முகத்தில் தெரியும்.

காரணம் இந்த மஞ்சப்பை அனைத்து தேவைகளுக்கும் அன்று உபயோகமாய் இருந்தது.. பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு பாட புத்தகங்களை கொண்டு செல்வது முதல், வீட்டுப்பொருட்கள்,மளிகை சாமான்களென அனைத்தையும் தூக்கிவர இலகுவாகவும் வசதியாகவும், சிரமமில்லாமலும் இருந்தது இந்த மஞ்சப்பையேயாகும்.வெளியூர் செல்லும் அனேகவர் கையில் அன்று இந்த மஞ்சப்பையை பார்க்கலாம். இன்னும் சொல்லப்போனால் பிழைப்புத்தேடி அயல் தேசம் சென்ற நிறைய நம்மவர் மஞ்சப்பையோடு பிளைட் ஏறியதாக முன்னோர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஒரு நேரத்தில் மஞ்சப்பை அவ்வளவு பிரசித்தி பெற்றதாக இருந்தது. இப்போதும் சில சமயங்களில் சிலர் பேசப்படும் வார்த்தைகளில் கூட இச்சொல்லை உபயோகிக்கிறார்கள்.

ஆ.. ஊண்ட மஞ்சப்பையெ தூக்கிக்கிட்டு வந்துடறாங்கப்பா
ஒரு நேரத்துல மஞ்சப்பையோடுதான் மதுராசுக்கு வந்தான் இன்னக்கி பாரு நல்லா இருக்கான்,
அவருகிட்டே அப்புடி பேசாதேப்பா கொண்டு வந்த மஞ்சப்பையோடு திருப்பி அனுப்பி விடுவார்.
மஞ்சப்பையிலே என்ன வச்சிருக்கே ? விசயமா !

இப்படி நகைச்சுவைக்காகவும் பேசப்படுவதுண்டு.

மிக முக்கியமாக சொல்லப்போனால் மஞ்சப்பை புழக்கத்தில் இருந்த காலத்தில் ஊர்,தெருக்கள் சுத்தமாகவும், குப்பை மேடுகள் இல்லாமலும், இருந்தது என்று சொல்லலாம். காரணம் அன்று பிளாஸ்டிக்கிளான பைகள் பேக்குகள் அனைத்து இடங்களிலும் கிடைப்பதில்லை. அதன் நாட்டமும் குறைவாகவே இருந்தது. அதன் புழக்கம் இல்லாமல் இருந்தது. அதில் யாரும் கவனம் செலுத்தாத நிலையில் அனைவரும் மஞ்சப்பையையே அதிகமாக விரும்பினர்.

ஆனால் இன்றோ மஞ்சப்பையோடு கழிந்த காலம் மலையேறி நாகரீக காலம் உருவாகி அந்தந்த பொருள்களை பிரத்தியேகமாக கொண்டு செல்ல வசதியான விலை உயர்ந்த வேல்லெட் புதுப்புது வகை ஹேன்ட் பேக்,பிளாஸ்டிக்,பைகள், அலங்கரிக்கப்பட்ட வண்ண வண்ண வடிவம் கொண்ட எக்ஜிகுட்டிவ் பேக் என்று பல விதமாக நம் கண்முன் புழக்கத்தில் வந்துவிட்டது.

ஒருமுறை மட்டும் உபயோகித்து விட்டு விட்டெரியும் நிலை மஞ்சப்பை உபயோகிக்கும் காலத்தில் இல்லை இந்த பிளாஸ்டிக்கிளான பைகள் என்று புழக்கத்தில் வந்ததோ அன்றிலிருந்து இந்த மஞ்சப்பைக்கு மட்டுமல்ல நமக்கும் சேர்த்து ஏழரைச்சனியன் பிடித்தது விட்டது.

எதற்கும் வளைந்து கொடுக்காத மக்கிப்போக மனமில்லாத அரக்க குணம் படைத்த இந்த பிளாஸ்டிக் பையின் ஆதிக்கம் வேரூன்றி பெருநகரம் முதல் குக்கிராமம் வரை குப்பை மேடையாக்கி வைத்து விட்டது. இன்றைய நிலையில் சுகாதாரத்தின் முன்னோடிச்சிதைவு எதனால் ஏற்படுகிறது என்றால் எல்லாம் இந்த மக்க மனமில்லாத பிளாஸ்டிக்கிலான பையே காரணம் என்பது யாரும் மறுக்க இயலாத கசப்பான உண்மையாகும். இன்னும் சொல்லப்போனால் கொஞ்சம் கொஞ்சமாக மனிதனையும் மற்ற உயிரினங்களையும் பழிவாங்குவது மக்க மறுக்கும் இப்பிளாஸ்டிக்பையே.!

ஒரு நேரத்தில் ஏழைகளும், பணக்காரர்களும், படித்த இளைஞர்களும் மாணவர்களும் வெட்கப்படாமல் பாராபட்சமில்லாமல் அனைவரையும் சமநிலையில் வைத்திருந்த இந்த மஞ்சப்பையை என்று தூக்கி எறிந்தார்களோ அன்றிலிருந்து ஊரும் மாசுபட்டுப் போய் உள்ளமும் மாசு பட்டுப்போய் விட்டது.எல்லோருக்கும் இளிச்சவாயனாக இருந்த எளிதில் மக்கும் தன்மை படைத்த இந்த அப்பாவி மஞ்சப்பையை இப்போது யார் நினைத்துப்பார்ப்பது.!?

மஞ்சப்பையை மறந்ததேன் !?

அதிரை மெய்சா

1 comment:

  1. மகிழ்ச்சி அண்ணா, மஞ்சள் பையைப்பற்றி நகைச்சுவையாக குறிப்பிட்டாலும் அதில் உள்ள உண்மையை நான் நன்கு அறிவேன். மலையாளிகள் மாத்ருபூமி நாளிதலோடு பிழைப்பு தேடி வந்ததைப்போல் நம்மவர்கள் மஞ்சள் பையுடன் அயல்நாடுவரை சென்று சாதனை சரித்திரம் படைத்துள்ளதை நானும் அறிவேன் அண்ணா, தங்கள் இதனை பற்றியெல்லாம் 2013 லிலேயே பதிவு செய்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. வரும் தலைமுறைக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாகும்.உங்கள் முயற்ச்சி தொடர வாழ்த்துகள் அண்ணா, அன்புடன் கார்த்திக் கல்யாணி.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.