Monday, September 16, 2013

கணவன் !

திரு மணமெனும் பந்தத்தில்
திகட்டாத முக்கனியாய்
நறுமணமாய் எந்நாளும்
நாடி வந்த உறவுடன்
பாடிப்பாரில் வளம் வந்து
வாழ்க்கைக்கு துணைவனாய்

வாரிசுக்கு முகவரியாய்
கண்ணாரக்கண்டெடுத்த
கண்ணாலனே
துணைவனெனும் கணவன்

பாசத்தின் பிறப்பிடமாய்
பாதுகாக்கும் பயிர் வேலியாய்
கோபத்திலும் கொள்கை தவறா
குடும்பப் பொறுப்பில் கடமை தவறா
கலங்காது கண்மணியை
காப்பாற்றும்
கனிவான மனம் படைத்தவனே
துணைவனெனும் கணவன்

ஈருடலும் ஓருயிராய்
இணைந்துவிட்ட புது உறவாய்
இல்வாழ்வில் கைபிடித்து
இதயத்தில் வீற்றிருக்கும்
ஈடில்லா இணைதுணையே
துணைவனெனும் கணவன்

மோகத்தில் முப்பது தினமும்
தியாகத்தில் ஆயுள் முழுதும்
தன் நலம் மறந்தவனாய்
தாரமதை தவம் கொண்டவனாய்
துன்பத்தை தோளில் சுமந்து
இன்பத்தை இறுக அணைத்து
தூய நல் உறவானவனே
துணைவனெனும் கணவன்

எச்சிரமம் வந்தாலும்
எதிர்கொண்டு தனைவென்று
ஏற்றமாய்க் குடில் நடத்தி
ஏகமாய் மகிழ்விக்கும்
இனிய மனம் கொண்டவனே
துணைவனெனும் கணவன்

காலங்கள் கரைந்தோடி
கருங்கூந்தல் நிரையாகி
தேகங்கள் சுருத்தொய்ந்து
சோகங்கள் சூழ்ந்த போதும்
சோர்வில்லா சுய உழைப்பில்
சோறூட்டும் உறவதுவே
துணைவனெனும் கணவன்

வையகத்து இவ்வாழ்வை
வளமாக வாழ்ந்திட்டு
மெய்யகப்படுத்தும் இறப்பினை
மேற்த்தழுவிக் கிடக்கும் போது
கைபிடித்துக் கரம் அணைத்து
கண்மூடக் கடைசி நேரம்
வாய்மூடி மனமழுகும்
வனப்பு மிக்க நல்லுறவே
துணைவனெனும் கணவன்
அதிரை மெய்சா

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 27-06-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.