Friday, October 4, 2013

[ 7 ] ஏங்கி நின்றான்...! ஏக்கம் தொடர்கிறது...


சொந்தமென்றும் பந்தமென்றும்
சொல்லி அணைத்து புகழ்ந்திடவே
தன் மடியில் கணம் வேண்டும்
தங்க நகை மின்ன வேண்டும்
அன்பு பாசம் அற்றுப்போன
ஆடம்பர கலாச்சாரம் விரும்பும்
அவல நிலை நினைத்து
ஏங்கி நின்றான்...!

பாசமெல்லாம் வேஷமென்று
பல கதையில் அவன் படிக்க
வேஷத்தையே பாசமாக்கி
வேஷமிடும் மனிதன் நினைத்து
ஏங்கி நின்றான்...!

உடன் பிறந்தார் உதறித்தள்ளி
உறவற்று அவனிருக்க
கலங்காதீர் எனக் கண் கலங்கி
கவலை மறைய பேசி மகிழ்ந்து
துன்பத்தில் துயர் துடைத்த
தூய துணைவியை எண்ணி
ஏங்கி நின்றான்...!

பாசம் மறந்த இவ்வுலகில்
பாசம் காட்டும் ஒரு ஜீவன்
நேசக்கரம் பிடித்ததெண்ணி
நிம்மதியில் அவன் நனைந்து
ஏங்கி நின்றான்...!

அழகுக்கு அழகு சேர்க்கும்
அறிவுக்கு அறிவு சேர்க்கும்
ஆருயிர் மகனை அவனும்
ஈன்றதெண்ணி ஆறுதலில்
ஏங்கி நின்றான்...!

விழிகள் ரெண்டும் விழித்திருந்து
விடிந்து விட்டது உறக்கம் மறந்து
மடிதனில் கிடந்துறங்கிய
மகன் கொண்ட பாசம் எண்ணி
ஏங்கி நின்றான்...!

பகல் உணவில் மீன் ருசிக்க
பழங்கதைகள் சொல்லி சிரிக்க
ஓடி வந்த செல்ல மகன்
ஒய்யாரமாய் சிரித்து ரசித்து
ஓரக் கண்ணால் பார்த்து பணிந்த
ஒரு நிமிஷம் எண்ணி மகிழ்ந்து
ஏங்கி நின்றான்...!
ஏக்கங்கள் தொடரும்...
அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.