Friday, October 4, 2013

[ 6 ] ஏங்கி நின்றான்...! ஏக்கம் தொடர்கிறது...


அகம் நொந்து புறம் நொந்து
அவனிருக்கும் வேலையிலே
மரணச்செய்தி ஒன்று கேட்டு
மதி இழந்து மனம் கணத்து
ஏங்கி நின்றான்...!

தூரத்து அவன் சொந்தம்
துன்பியலை துக்கம் கேட்க
துக்கம் வந்து தொண்டை அடைத்து
துடித்து துவண்டு அழுது புரண்டு
வெந்த மனம் ஆறாமல்
வேதனையால் அவன் துடித்து
ஏங்கி நின்றான்...!

ஏழுறவும் அருகில் வர
எப்படிச் செத்தான் என கேட்க
ஒவ்வாத உறவு வளர்த்த
உயிர்க் கொல்லி நோய் என்று
உறவார்கள் சொல்லிடவே
உயிர் நீத்தக் கதை கேட்டு
ஏங்கி நின்றான்...!

கல்லூரிக் காலங்களில்
கான மழை அவன் பொழிந்து
தட்டு முதல் தங்கம் வரை
தட்டிச்சென்ற பரிசுகளை
வேதனையால் விற்றுத் தீர்த்து
வயித்தெறிந்து தாயவள் குமுறி
வாரித் தூவிய வசை சொல்கேட்டு
ஏங்கி நின்றான்...!

பாலிய சிநேகிதனை
பல்லாண்டு கழியக் கண்டு
நா தலுக்க நலம் கேட்க
நானிருப்பது ஐரோப்பியச் சீமை
நீ இருப்பது எந்தச்சீமை என்று
ஏளனமாய் கேட்டதெண்ணி
ஏங்கி நின்றான்...!

அயல் நாட்டு மோக வாழ்க்கை
அப்பிக்கொள்ளும் அட்டை போல
முடிவுறாத கடல் எல்லையாய்
முழுவிடையை அறியும்முன்னே
முடித்து வந்து முகம் சுழித்து
ஏங்கி நின்றான்...!

ஒரு கொடியில் முளைத்த காம்பும்
உருவில் சில மாற்றம் வரும்
ஒரே கொடியில் பூத்த பூவில்
மணம் மாறிய அதிசயம் கண்டு
ஏங்கி நின்றான்...!
ஏக்கங்கள் தொடரும்...
அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.