Friday, October 4, 2013

[ 8 ] ஏங்கி நின்றான்..! ஏக்கம் தொடர்கிறது...


அடுத்த வீட்டுக்கல்யாணத்தில்
ஆடம்பரமாய் பகல் உணவு
வாரித்திரண்டு மக்கள் வர
வரவேற்க வந்தனர் பலர்
வயசான ஒரு கிழவர்
வந்து நின்றார் வயிற்றுப்பசியில்
வந்தவரை தூர விரட்டி
வயிறு நிறைத்த மனிதனை கண்டு
ஏங்கி நின்றான்...!

மீதி உணவை கழிவாய் எறிந்து
மிகைப்புடனே சொல்லிப்புகழ்ந்து
மார்தட்டி நடந்து வந்த
மாப்பிள்ளை வீட்டார்
மனதை எண்ணி
ஏங்கி நின்றான்...!

கன்னி அவளை கரை சேர்க்க
கடும் உழைப்பில் சேர்த்த பணம்
வரதட்சணை எனும் முதலை வாயில்
வாரி இறைத்து கொடுத்து விட்டு
வானம் பார்த்த பூமியாக
வயிறு காய்ந்த சோகமெண்ணி
ஏங்கி நின்றான்...!

வயிறெரிய வாங்கிய பணம்
வருவோரை மகிழ வைக்க
வகை வகையாய் உணவு கொடுத்து
ஆடம்பரத்தில் தீர்த்து முடித்து
அரசனாய் வாழ்ந்த அவன்
ஆண்டியாகிப்போனது கண்டு
ஏங்கி நின்றான்...!

பணமில்லாமல் நடை பிணமாய்
பெண் பெற்றவன் பகல் கனவாய்
முடிவில்லாத இக்கொடுமை
முழுவதுமே முடிவுபெற
முற்றுப்புள்ளி வைக்கும்
நன் மக்கள் வரும் நாளை எண்ணி
ஏங்கி நின்றான்..!

வெறுப்புற்ற இவ்வாழ்வில்
வேதனையால் அவன் வாட
வெகுமதிகள் பல கேட்கும்
வெட்கம் கெட்ட சொந்தம் நினைத்து
ஏங்கி நின்றான்...!

சிறப்புடனே வாழ்வைத்துவக்க
சீராட்டி உரைத்து விட்டு
நடிப்புடனே புகழ் பேசி
நகைப்புடனே புறம்பேசும்
நயவஞ்சக மனிதனை கண்டு
ஏங்கி நின்றான்..!
ஏக்கங்கள் தொடரும்...
அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.