Friday, September 13, 2013

காசு பணம் துட்டு Money..! Money..!

சமீபத்தில் திரைக்கு வந்த ஒரு தமிழ்ப்படத்தின் பாடல் வரிதான் இந்தக்கட்டுரையின் தலைப்பாக இருந்தாலும் நான் சொல்லவந்தது அதைப்பற்றியல்ல. ஆவலாய் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த வாசகர்கள் மன்னிக்கவும்.


என் எண்ணத்தில் உதித்தவைகளையே பதிவாக தந்துள்ளேன்.

இவ்வுலகில் உயிர்வாழ காற்று நீர் நெருப்பு எவ்வளவு முக்கியமோ அந்த வரிசையில் அடுத்ததாகச் சொல்லப்போனால் இந்த காசு பணம் துட்டு Money Money யைத்தான் சொல்ல முடியும். பணமில்லாதவன் பிணம் என்றும், பணத்தைக்கண்டால் பிணமும் வாய் பிளக்குமென்றும் பணம் பத்தும் செய்யுமென்றும் பணம் பாதாளம் வரை செல்லுமென்றும் இப்படி இன்னும் பல பன்மொழிகள் பணத்தைப்பற்றி சொல்வார்கள்.காரணம் மனித வாழ்வு மொத்தமும் இந்தப்பணத்தை மையமாக வைத்துத் தான் இயங்கி வருகிறது.ஆனால் இந்தப்பணம் காசு எல்லோரிடத்திலும் சரிசமமாக இருப்பதில்லை. அவரவர் உழைப்பு, வருவாய்,தொழில் பரம்பரைச் சொத்துக்கள் இவைகளின் அடிப்படையில் ஏற்ற தாழ்வாக இருப்பு இருக்கும்.

இதனை இரண்டு வகையாக பிரிக்கலாம் முதலாம் வகை காசு பணம் சம்பாரிக்கவேண்டி இராப்பகலாக கடும் உழைப்பு உழைத்தும் தனது தேவைகள் முழுவதும் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளவர்கள். இரண்டாம் வகை மிகை மிஞ்சிய காசு பணம் வைத்துக்கொண்டு இதை என்ன செய்வது.? எப்படி இதைச் செலவு செய்வது என்று யோசிக்கும் நிலையில் உள்ளவர்கள். நாம் இப்போது பார்க்கப்போவது இரண்டாம் நிலையில் உள்ளவர்களைப்பற்றிய இக்கட்டுரையைத்தான் உங்களின் பார்வைக்கு தந்திருக்கிறேன்.

இலட்சாதிபதிகளென்று ஒரு காலத்தில் பெரிதாக சொன்ன பணக்காரர்கள் சீசன் ஓய்ந்து போய் தற்போது கோடீஸ்வரர்களென்றும், மில்லியனரென்றும், பில்லியனரென்றும் சொல்லும் அளவுக்கு பணக்காரர்கள் உருவாகி இருப்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் இவ்வுலக வாழ்க்கைக்கு தேவையான பண வசதிகள் இல்லாமல் தினம் தினம் பசியால் வாடிவதங்கி வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் மக்கள் கூட்டம் ஒரு பக்கம்..

ஆனால் மனிதன் இவ்வுலகில் உயிர்வாழ என்னன்னா தேவைகள் அவசியமோ அது பண வசதி படைத்தவனுக்கும், வசதி க்குறைவானவனுக்கும் தேவைகள் என்பது ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.அந்தத்தேவைகளை வசதி படைத்தோர் கணக்கில்லாமல் செலவு செய்து பெறுகின்றனர். பண வசதி குறைவானவர்கள் கணக்குடன் செலவு செய்து வாழ பழகிக் கொள்கின்றனர். இதுவே நடைமுறை நிலை.

மனிதனின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ளவும் ஒரு அந்தஸ்த்தை ஏற்ப்படுத்தி கொள்ளவும், வறுமை இல்லாமல் வாழவும் நமது வசதிகளை பெருக்கிக்கொள்ளவும் இப்படி பலவகையில் உதவும் இந்தப்பணத்தை இவ்வுலகில் உயிர்வாழும் காலத்திற்கு போதுமானவரை மட்டும் வைத்துக்கொள்ளும் எண்ணம் யாருக்கும் ஏற்ப்படுவதில்லை. எவ்வளவு பண வசதிகள் பெருகிக்கிடந்தாலும் மேற்கொண்டு பணவசதிகளை பெருக்கிக்கொள்ளவே ஆசைப்படுகின்றனர்.

அப்படிபபேராசைப்பட்டு சேர்க்கும் பணத்தை எத்தனை காலத்திற்கு தான் அனுபவிக்க முடியும்.? எவ்வளவுதான் ஆடம்பர வாழ்க்கை வாழ முடியும்.? இதை மனிதன் ஒரு நிமிடம் சிந்திப்பானேயானால் அனைவரும் வறுமையில்லாத வாழ்க்கை வாழ வழி செய்யலாம்.

எல்லாக் கோடீஸ்வரர்களும் ஒரு சாயலில் இருப்பதில்லை, சிலரிடத்தில் எண்ணிலடங்கா சொத்தும் பணமும் இருந்தும் அதை சரியான முறையில் பராமரிக்கத்தெரியாமல் பாதுகாக்க ஆளில்லாமல் வீண்விரயம் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

சில கோடீஸ்வரர்கள் கல்வியறிவில் பின்தங்கி இருப்பதால் மேற்கொண்டு எதுவும் தெரியாமல் பரம்பரை பணத்தை வைத்துக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள்.

சிலரிடத்தில் பண வசதிகள் இருந்தும் திறமை இருக்காது. மேற்கொண்டு எதுவும் செய்ய ஆர்வம் இருக்காது.

ஆனால் பலரிடத்தில் ஆர்வம், திறமை, புத்திசாலித்தனம் அனைத்தும் ஒருங்கே பெற்றிருந்தும் அதனை செயல்படுத்த பண வசதி இல்லாத காரணத்தால் வேறுவழி தெரியாமல் எத்தனையோ பேர் உள்ளனர்.

இப்படி இருக்கும் இவர்களின் நிலையை பெரிய மனம் படைத்த பணம் படைத்தவர்கள் மனம் வைத்தால் இவர்களின் வாழ்க்கையை நிச்சயம் சிறக்க வைக்கலாம். தொழில் அனுபவம் உள்ளவர்கள்,தொழில் செய்ய ஆர்வமுள்ள இளைஞர்கள், வேலையில்லா பட்டதாரிகள் என்று தேர்ந்தெடுத்து அவர்களின் அனைவரது கூட்டு முயற்ச்சியில் ஒரு நிறுவனத்தை ஏற்ப்படுத்த முதலீட்டை கொடுத்துப்பாருங்கள். அவர்களுக்கு சம்பளம் மட்டுமல்லாது இலாபத்திலும் ஒரு சிறிய பங்கை கொடுத்து உழைக்கும் பங்குதாரராக ( Working partnership ) அவர்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.பிறகு பாருங்கள் அந்த நிறுவனத்தை எப்படி நடத்திச் செல்கிறார்கள் என்று.! இதில் வெற்றியடைந்து விட்டால் அவர்கள் முன்னேற ஒரு வாய்ப்பாகவும் அதைக்கொண்டு பலர் வேலை பெற வாய்ப்பும் ஏற்படும்.

தனது தேவைக்கு மிஞ்சி புண்ணியப்படாத மிகைமிஞ்சிய பணத்தை இப்படிச் செய்வதன் மூலம் நம்நாட்டில் உள்ள வறுமை,ஏழ்மை, வேலையில்லாத்திண்டாட்டம்,என அனைத்துப்பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

நம் நாட்டுக் கோடீஸ்வரர்கள் அனைவரது மனதிலும் இப்படி ஒரு எண்ணம் உதித்து விட்டால் இன்னும் பல கோடீஸ்வரகளையும்,தொழில் அதிபர்களையும் உருவாக்குவதுடன் வறுமை இல்லாத செழிப்பான தேசமாக நம்நாட்டை உருவாகிவிடலாம்.

மரணம் என்பது ஒவ்வொரு மனிதனின் நிழலாய் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. மனிதனின் இந்த உயிர் நிலையானது அல்ல. எந்த நிமிடத்திலும் நம்மை விட்டு பிரியலாம். அப்படிப்பிரியும் பட்சத்தில் எந்தக்காசு பணமும் கூட வரப்போவதில்லை. அப்போது வறுமையில் வாழ்ந்தவரும்,, வசதியான வாழ்க்கை வாழ்ந்தவரும், ஒரு நிலையையே அடைகின்றனர். இந்த ஆன்மீக எண்ணத்தில் மனிதன் ஒரு நிமிடம் சிந்தனையை செலுத்தினால் பண வசதி படைத்த யாவரும் மீண்டும் மீண்டும் பணத்தின் மீது மோகம் கொள்ள மாட்டார்கள்.கொடுத்துதவும் எண்ணத்தையே மேற்க்கொள்வார்கள்.

ஆகவே பணத்திற்கு நாம் ஒருபோதும் அடிமைப்பட்டுப்போகாமல் நாம் நமது சொந்தங்கள் வாரிசுகளென அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் அளவுக்கு போதுமான சொத்துக்கள் காசுபணத்தை இருப்பு வைத்துக்கொண்டு நம்மிடம் மிகை மிஞ்சி இருக்கும் உபரிப்பணத்தை இல்லாதவர்களுக்கு தொழில் செய்யவோ அல்லது அவர்களின் ஏழ்மைநிலையை நீக்கவோ பகிர்ந்து கொடுத்து இவ்வுலகை விட்டுப்பிரியும் முன்னரே ஏழைகளின் வறுமையை நீக்கி விட்டு இல்லாதோரின் வாழ்க்கைக்கு உதவி செய்து விட்டு சந்தோசமாக ஆத்மா திருப்தி அடைவோமாக.!

( நாட்டின் வறுமையை ஒழிக்க இதுவும் ஒரு வழியென நினைத்து இப்படி செய்து கொடுக்க நம் நாட்டுக் கோடீஸ்வரர்கள் முன்வருவார்களா.!? )

அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.