Tuesday, September 17, 2013

கம்பியூட்டர் இங்கே.! கடுதாசி எங்கே.?

முன்பொருகாலத்தில் அயல் நாட்டில் இருக்கக்கூடிய நமது உறவுகளிடத்திலிருந்து வரும் கடிதத்திற்காக ஏங்கி, ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டிருப்போம்.
தினமும் அஞ்சலகம் போய் ஆவலாய் மணிக்கணக்கில் காத்திருந்து நமது பகுதிக்கு ஒதுக்கப்பட்ட தபால்காரர் [ POST MAN ] எப்போது வெளியே வருவார் என்ற ஏக்கப்பெருமூச்சு விட்டு காத்திருந்து கடிதம் வாங்கி வருவோம். சிலசமயம் ஏமாற்றத்துடன் திரும்பி வருவதுமுண்டு.

உள் நாட்டுக்கடித்தை விட வெளிநாட்டுக்கடிதம் வந்து விட்டால் சொல்ல வேண்டிய தேவையில்லை. அன்று முழுவதும் மனம் சந்தோசத்தில் மூழ்கியிருக்கும். வழியில் காணும் சொந்தங்களிடமும், நண்பர்களிடமும் பெருமையாக சொல்லிக்கொள்வோம். அக்கடிதத்தின் அழகிய தோற்றமும் அதன் மேல் பதிக்கப்பட்டிருக்கும் ஸ்டாம்பின் வண்ணப்படங்களும் மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும்.

இது இப்படி இருக்க...நாம் எழுதும் பதில் கடிதத்திற்காக காத்து கொண்டு ஒவ்வொரு நிமிடத்தையும் நாளாக நினைத்து நகர்த்திக்கொண்டிருக்கும் அவர்களின் மனநிலை இதைவிட மோசமாக ஏக்கப்பெருமூச்சில் தூக்கமிழந்து நிற்ப்பார்கள்.

சில நாட்களுக்குப்பிறகு பதில் கடிதம் கிடைக்கப்பெற்றதும் அளவிட்டுச்சொல்லமுடியாத மகிழ்ச்சியில் அக்கடிதத்தை பிரித்து படிக்கும்போதே தன்னை அறியாத ஒரு சந்தோசத்துடன் மற்றட்ற மகிழ்ச்சி மனதில் ததும்பும். அடுத்த கடிதம் வரும் வரை மீண்டும் மீண்டும் அந்த பழைய கடிதத்தை வாசிப்பதும் உண்டு. பதில் கடிதம் எழுதி,எழுதி எழுத்தில் வசப்பட்டு கடைசியில் கவிஞர்களாகவும், எழுத்தாளர்களாகவும் சிலர் ஆனதும் உண்டு.. அயல் நாட்டில் வாழ்ந்த அனைவருக்கும் இதன் அனுபவம் தெரியும்.

தகவல் பரிமாற்றம் தாமதமாய் அதிக இடைவெளி இருந்ததால் ஒரு மாதம் ஒரு வருடமாக நகர்வதுபோல் தோன்றியது. காரணம் அன்று வேறு எந்த ஊடகங்களோ, இன்றைய நவீனம்போல் செல்போன், மின் அஞ்சல், ஸ்கைபி, பேஸ்புக், இருவழி காணொளி, இதர சாட்டிங் என்று இன்றைய காலத்தில் நடமாடும் எதுவும் அன்று இல்லை. ஆனால் அன்று மெய்யான அன்பும் பாசமும் அளவுகடந்து இருந்தது. இன்றோ எல்லா நவீனங்களும் அருகில் வந்து அன்பு, பாசத்தை தூரமாக்கி விட்டது. நவீனங்கள் தலை தூக்கி பாசங்கள் வேஷங்களாக உருமாறின. உண்மை நட்புக்கள் நசுக்கப்பட்டன. ஊடக வாயிலான அவசியமற்ற நட்புக்கள் கூடி மன உழைச்சல் ஏற்பட்டு நிம்மதி இழக்க வைத்து விட்டன. இதுவே உண்மை நிலைமை.

எத்தனை முறை ஊடக வாயிலாக உரையாடினாலும் கடிதம் வாசித்து செய்திகளறிந்தது மறக்கமுடியாத சுகமான அனுபவம். அந்த சுகத்திற்கு வேறேதும் ஈடாகாது. கடிதத்தொடர்பு இருந்த காலத்தில் அது பலவகையில் நன்மை பயக்கக்கூடியதாகத்தான் இருந்தது. அரைகுறை எழுத்தறிந்தவர்கள் கூட கடிதம் எழுதி எழுதி பழகி எழுத்தறிவை வளர்த்துக்கொண்டனர். இடைவெளியான தகவல் தொடர்புகளினால் குடும்பப் பிரச்சனைகளை தவிர்க்க உதவின. மாறாக உறவுகளின்,நட்புக்களின் ஏக்கமே அதிகமாய் எல்லோரிடத்திலும் காணப்பட்டன. கடிதத்தில் இரகசியங்கள் பாதுகாக்கப்பட்டன. கணவன் மனைவி உறவு வலுப்பெற்றன. தவறான அணுகுமுறை, வாக்குறுதியளிக்கப்பட்ட சொற்கள் யாவற்றிற்கும் ஆக்கபூர்வமான ஆதாரமாய் அமைந்தன.

ஆனால் இன்றோ நிலைமை வேறு !? ஆம் அனைவர்கள் கையிலும் அலைபேசி. நினைத்த நேரத்தில் முகம்பார்த்து பேசி உரையாட இன்டர்நெட் வீடியோ சாட்டிங் கான்ப்ரான்சிங் இப்படி எல்லாம் கம்பியூட்டர் மயமாக உருவெடுத்து வாழ்க்கை ஒரு வட்டத்திற்குள் சுருங்கிப்போய் விட்டது. இதனிடையில் அவசியமற்ற ஆபாச உரையாடல்கள். இத்தகைய உரையாடலை வேறு வழியில் பதிவிறக்கம் [ Download ] செய்து வீண் பேச்சுக்கள் விற்பனைப்பொருளாக மாறிவிட்ட அவலங்களையும் காண்கிறோம். அடுத்தவீட்டாரை கூட அடையாளம் தெரியாத அளவுக்கு நவீனங்கள் நம்மை ஒரு வட்டத்திற்குள் அடைத்து கண்களை மறைத்து விட்டன.

ஆக கடிதம் ஒரு காலத்தில் உறுதியான நட்புக்கும், உறவுக்கும் துணை நின்றது. இன்றோ கனவில்கூட காண்பது அரிதாகி தூரத்து நிலவாக, தூக்கியெறியும் பழம்பொருளில் ஒன்றாகி விட்டது. அதை அனுபவித்தவர்களுக்கே அதன் இழப்பின் தாக்கம் தெரியும். இன்றைய நாகரீக காலத்தில் கடிதம் எழுதுவது என்பதை யாரும் விரும்பாத நிலைமையில், அநாகரீகமாகவும்,நேரம் விரையமாவதாகவும் தவிர்க்கப்பட வேண்டியவைகளில் ஒன்றாகவும் நாம் எண்ணி வெறுத்து ஒதுக்கி விட்டோம். கடிதத்தொடர்பு துண்டிக்கப்பட்ட நாள் முதலே பொழுது போக்கிற்காக கிட்டும் ஊடக வாயிலான நட்புக்கள் பெருத்து உணர்வு பூர்வமான பாசநேசமும் நட்புக்களும் நம்மிலிருந்து தூரமாக விலகிக் கொண்டிருக்கிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

அது சரி இதனால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று முணுமுணுப்பது என் காதில் விழுகிறது. இத்தனை காலம் நம் உறவுக்கும் நட்புக்கும் உறுதியான பாலமாய் நம்முடன் இணைந்திருந்து நாகரீக வளர்ச்சியில் இன்று நம்மை விட்டு வெகு தூரமாகிப்போன கடிதத்தை எண்ணி நினைவு கூர்ந்தேன். அவ்வளவுதான் !

அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.