Tuesday, September 17, 2013

உழைப்பாளர்கள் தினச்சிறப்புக் கவிதை தொழிலாளி !

தோல்ச்சுமையை முத்தமிட்டு
தன் உழைப்பை மனம் உவந்து
தாயென செய்தொழில் மதிக்கும்
தொய்வில்லா மனம் கொண்டவர்கள் தான்
தொழிலாளர்கள்

அசுத்தங்கள் சாக்கடையாய்
அச்சுறுத்தி தடுத்தாலும்
அசிங்கமென எண்ணாமல்
அயராது மனமுவந்து
எச்சிரமம் வந்தாலும்
ஏற்றுக்கொண்ட தன் பணியை
ஏற்றமுடன் முடிப்பவர்கள் தான்
தொழிலாளர்கள்

பட்டி தொட்டியெல்லாம் இன்று
பகட்டாய் மின்னும் பங்களாக்கள்
பார்ப்போரை வியக்க வைக்கும்
பல அடுக்கு கட்டிடங்கள் என
பல சாதனைக்கு சொந்தக்காரர்கள் தான்
தொழிலாளர்கள்

காற்றாயினும் மழையாயினும்
கணப்பொழுதும் அயராது
மாற்றாரின் தோட்டத்தை
மழைக்குடையாய் காத்து வரும்
மகத்தான மனிதர்கள் தான்
தொழிலாளர்கள்

காடாயினும் மேடாயினும்
கடினமாய் உழைத்திட்டு
கால் வயற்றுக்கஞ்சி குடித்து
நெஞ்சம் மகிழ்ந்து வாழ்ந்து வரும்
நேர்மையான மனிதர்கள் தான்
தொழிலாளர்கள்

பேரூந்து புகைவண்டி லாரி என
பல வாகனங்களில்
நாள் முழுதும் பொதி சுமந்து
நா வறண்டு நின்ற போதும்
தளராத மனம் கொண்டு
தயங்காது எதிர்கொள்ளும்
துணிவான மனிதர்கள் தான்
தொழிலாளர்கள்

ஏழ்மையிலும் தாழ்ந்திடாமல்
ஏளனச்சொல் கேட்டிடாமல்
தனக்கென்று ஒரு பிழைப்பை
தன் மானத்துடன் தத்தெடுத்து
தன்னம்பிக்கை துணை கொண்டு
தற்பெருமை இல்லா
தரம் மிக்க வர்க்கம் தான்
தொழிலாளர்கள்

மெய்யான உழைப்பிற்கு
மே தினத்தை அனுசரித்து
கைமாறு பல செய்து
கைகோர்த்து மனம் மகிழ்ந்து
மனிதநேயம் வளர்த்திடும்
மேன்மையான மனிதர்களே
தொழிலாளர்கள்

நாடு போற்றும் நம் தோழன்
நலிவுறும் வேளையிலே
கைகொடுத்து கரம் பிடித்து
அரவணைத்து ஆதரிப்போம்
அகம் மகிழச்செய்திடுவோம்
அன்பு நம் தொழிலாளர்களை !
அதிரை மெய்சா


குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 02-05-2013 ] அன்று 'தொழிலாளர் தினத்திற்காக' உழைப்பாளர்களின் சிறப்புகளைப்பற்றி இலண்டன் தமிழ் வானொலியின் 'கவிதை நேரம்' நிகழ்ச்சிக்காக முதன்மையாக ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.