Tuesday, September 17, 2013

எது வரை.?

கலிகாலத்தில் நாம் காணும்
இக் காட்சிகள் யாவும்
கணப்பொழுது யோசித்தால்
கண் நாணப்பட
கணக்கிறது உள்மனது
மானமிழந்த மனிதனாய்

மாறுபட்ட வாழ்க்கையின் மறுபக்கம்
மாபெரும் புரட்சி கண்டு
மாறி விட்ட இப்புவியினில்
மகிழ்வுடன் வாழ்வது எதுவரையோ ?

இதிகாசம் படைத்திடத்தான்
இப்புவிதனில் நீ வாழ்ந்திடவே
இருவேறு வேடமிட்டு
உன் பரிகாசம் ஓயவில்லை
சதிகார கூட்டமதில்
கதியாகி போன தொண்டா
உன் புரியாத புதிருக்கு
புலம்பாதே பதிலிருக்கு
உன் ஆணவத் தாண்டவம்
அடங்குவதென்றோ
அது எதுவரையோ ?

முடிவில்லா இன்னல்களும்
முறையில்லா வாழ்க்கைகளும்
முகமில்லா மனிதர்களும்
முழுவதுமாய் ஒழியா மறையா
முடியுறும் இப்பூலோக வாழ்வு
முடிவாகும் நாள் தான் எதுவரையோ ?

இம்மைக்கு நீ செய்த நற்க்காரியமும்
இல்வாழ்விலும் மேலான
மறுமைக்கு நீ செய்தநற்ச் செயலுமாய்
வந்துபதில் சொல்லிடுமாம்
வகைபடுத்திக் காட்டிடுமாம்
வறியோர்க்கு அது எதுவரையோ ?

வானவர்கள் வாழ்த்திட த்தான்
வாகை சூடி வாழ்ந்திட த்தான்
தேடும் உந்தன் சொர்க்கத்தில்
திண்ணமாய் மறுவாழ்வு
தொய்வில்லாமல் வாழ்ந்திடவே
தேடி நீ புறப்படு தீருமுன்
அது எதுவரையோ ?

இவ்வையகத்து அத்தனை மனிதனும்
வகை வகையாய் வாழ்ந்திட்டு
வந்தவழி திரும்புகையில்
வாழ்ந்து முடித்த உன் வாழ்வின்
வரவு செலவு ஒப்படைக்க
இறைவன் கையகப்படுத்தும் நம் உயிரை
மெய்யகப்படுத்தும் நாள் வருமாம்
அது மறுமையெனும் இறுதியே
எல்லாம் அதுவரையே..!

அதிரை மெய்சா

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 23-05-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.