Saturday, March 3, 2018

புரையோடிக்கொண்டிருக்கும் பாலியல் கேவலங்கள்.!

ஒருபுறம் கல்வியறியும் நாகரீகமும் நவீனமும் முன்னேறி பெருகிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இன்னொருபுறம்  பெண்கள் சிறுமியர்கள் மீதான பலாத்காரமும் பாலியல் கேவலமும் பெருகிக்கொண்டு போவதுதான் பரிதாப நிலையாக உள்ளது. அதிலும் சில சம்பவங்கள் நாம் கேள்விப்படும் போது ஜீராணிக்கவே முடியவில்லை. மனசாட்சியே இல்லாமல் சிறுமியென்றும் பாராமல் கூட்டு பாலியல் பலாத்காரம்  கொஞ்சம்கூட ஐயப்பாடு இல்லாமல் கொடூரமான முறையில் நடப்பதை நினைத்தால் இம்மனித நாகரீகம்  பல வருடத்திற்கு பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.


அது மட்டுமல்லாது திருமணமாகி குழந்தை குடும்பமென வாழ்க்கையில் சந்தோசமாக இருக்கும் பல குடும்பங்களிலும் இந்த பாலியல் புரையோடி பல குடும்பத்தை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறது. கணவன் இருக்கும்போதே அடுத்த ஆடவரின் நாட்டமும் மனைவி இருக்கும்போதே அடுத்த பெண்களுடன் தொடர்பும் வைத்துக் கொண்டு அற்ப ஆசைக்காக அவப்பெயருடன் மானம் மரியாதையை இழந்து சமூகத்தார் மத்தியில் தலைகுனிவு ஏற்படும் சூழ்நிலைக்கு சிலர் தள்ளப்படுகிறார்கள்.

இப்படியான தவறுகள் பெருகிக் கொண்டுபோக காரணம் என்ன.? ஏன் மனித மனத்தின் மனசாட்சி மலிந்து கேவலமாகிக் கொண்டிருக்கிறது.?  இதைப்பற்றி சற்று சிந்தித்து பார்ப்போம்.இப்படியான பாலியல் தவறுகளுக்கு பலதரப்பு காரணங்கள் இருக்கின்றன. அவையாதெனில் சுருக்கமாகச் சொன்னால் வாழ்க்கையின் தேவைகளை தேடுதல்களை சிரமமில்லாமல் விஞ்ஞான கண்டுபிடிப்பு நவீன வசதிகளைக் கொண்டு ஒரு குறுகிய வட்டத்திற்குள் மனிதன் வாழத் துவங்கிவிட்டான்.சற்று யோசித்துப் பார்த்தோமேயானால் இதுதான் அடிப்படை காரணமாக இருக்கும் என்பது புரியும்.

குறுகிய வட்ட வாழ்க்கை என்பது உடல் உழைப்பும் சிரமங்களும் குறைந்து எதுவும் எளிதாக கிடைக்கும் வகையில் எல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் கிடைத்து விடுவதாகும். இப்படி கிடைக்கும்போது அம்மனிதனுக்கு அதன் மதிப்போ கஷ்டமோ  தெரிவதில்லை.நவீனத்தின்பால் மனம் மூழ்கி தான் அச்சப்பட்டவைகளும் வெட்கப்பட்டவைகளும் விரும்பும் நேரத்தில் கிடைப்பதால்   மனசாட்சி,மனிதநேயம்,உறவுமுறை,பாசம்,நேசம் ஆகியவை தூரமாகி விடுகின்றன. ஒருகாலத்தில் செக்ஸ் என்பது அந்தரங்க விஷயமாக நாணப்படும்படி ரகசியமாக  இருந்தது.ஆனால்  இன்றைய நாகரீக காலத்தில் பல தகவல் தொடர்பு சாதனங்கள் வந்தபிறகு அது இலகுவாக்கப்பட்டு சந்தைப் பொருள்போல் ஆகிவிட்டது. இன்றைய நாகரீக காலப் போர்வையில் வெட்கப்பட்டவைகளெல்லாம் வெட்டவெளிச்சமாகி வீதிக்கு வந்து  விட்டது.  எனவே பாலியல் என்பது பயமோ கூச்சமோ வெட்கமோ இல்லாமல் நடத்துவதற்கு மனித மனம் துணிந்து விட்டது என்று சொல்லலாம்.

உதாரணத்திற்கு சொல்லப் போனால் ஒருகாலத்தில் தகவல் தொடர்பு என்பது கடிதம் எழுதுவது மூலமாக மட்டுமாகவே இருந்தது.பதில் கடிதம் வரும்வரை எதிர்பார்ப்புடன் காத்திருப்போம். அப்போது இருந்த அந்த மகிழ்வும் சந்தோஷமும் இப்போது நமக்கு அந்த உணர்வு யாருக்கும்  இருப்பதாக தெரியவில்லை.  இப்படித்தான் ஒவ்வொரு விஷயங்களிலும் நவீனங்கள் புகுந்து எல்லாம் இலகுவாக்கப்பட்டு  மனித மனம்  மழுங்கடிக்கப்பட்டு தூங்கிக்கிடந்த உணர்வுகளுக்கு துணிச்சல் கொடுத்து பின் விளைவுகளை யோசிக்காமல் தவறிழைக்க வைக்கிறது.

நவீனத்தால் நாகரீகம் முன்னேறிப் போய்க்கொண்டிருந்தாலும் அதே நவீனத்தால் மனிதனது செயல்பாடுகள் அழிவுப்பாதையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லமுடியும்.இதற்க்கு தீர்வு என்னவெனில் நவீனத்தில் இருக்கின்ற நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு மனக்கட்டுப்பாட்டுடன் நடந்தோமேயானால் அவர்களை எத்தனை நவீனங்கள் வந்தாலும் ஒன்றும் செய்ய இயலாது. இதிலிருந்து தப்பித்து மீள்பவர்களே திறமைசாலிகள் வாழ்க்கையில் வெற்றியாளர்கள் ஆவார்கள்.

                                                              அதிரை மெய்சா

1 comment:

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.