Thursday, November 5, 2015

அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே.!


அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே
உன் விரிவுக்கு நிகராக யாதுமுண்டோ
மொத்தநீரையும் உனதுள்ளடக்கி - உலகின்
மூன்றில் இருபங்கை உனதாக்கி
நித்தமும் நீ எழுப்பும் ஓசையினால்
நெஞ்சம் கனத்திடும் நெகிழ்ச்சியிலே


எத்தனைதான் ஆச்சரியம் உனதுள்ளே
எண்ணி வியக்கிறோம் மனதினுள்ளே
அத்தனையும் நிறைந்திட்ட அதிசயமே
ஆராய முடியாத ஆழ்மனமே

கலர்கலராய் பலநிறத்தில் உன் தோற்றம்
காண்பதற்கு வியப்பூட்டும் அதிசயமே
கொடிசெடியும் மலைமடுவும் உனதுள்ளே
கோடான கோடி உயிர் வாழ்கிறதே

சுனாமிப் பேரழிவைத் தந்தபோதும்
பினாமிபோல் உன்மேல் பயணம் செய்வர்
கனாவில் உன் சப்தம் கேட்டபோதும்
கலங்காமல் மீனவர்கள் கடல் செல்வர்

சமுத்திரமாய் சங்கமிக்கும் உன்நீர்க்கு
சரிசமமாய் சொல்வதற்கு நிகரில்லை
பவித்திரமாய் வெளிப்படும் உன்போக்கு
பன்முகமும் காட்டுவது உன்சிறப்பு

உனக்கென்று ஓர் உலகம் உவர்ப்புநீராம் - நீ
உருவான இடம் எந்த நீர்நிலையாம்
கருவாக நீ சுமக்கும் உயிர்களெல்லாம்
உருவான விதம் நினைத்தால் அதிசயமே


கற்பனைக்கு எட்டாத கடல்நீரே - நீ
கசந்தாலும் உப்பாகி சுவைதருவாய்
இத்தனை நீர் நிறைந்த ஆழ்கடலே
இக முடிவானதும் எங்கு செல்வாய் ?



அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.