Thursday, June 11, 2015

மறக்க முடியவில்லை !

நெஞ்சினிலே நித்தமுமாய்
நினைவலைகள்
வந்ததுவே வந்தனமாய் என்மனதில்
வஞ்சித்தவரும் வாழ்த்தியவரும்
நெஞ்சுக்குள்ளே
வனப்புடனே வாழ்ந்தவரோ
மண்ணுக்குள்ளே


தனை ஈன்ற தாய் தந்தையோ
உயிருக்குள்ளே
தாரமாகி எனைக் கவர்ந்தவள்
மனதுக்குள்ளே

கொஞ்சுதழிழை பயில்வித்த ஆசான்
உடலுக்குள்ளே
கொஞ்சிப்பேசும் குழந்தைகளோ
கண்ணுக்குள்ளே

கூவிப்போகும் குயிலினோசை
காதுக்குள்ளே
கூடிக்கூவி பழகிய நட்புக்கள்
உயிர்நாடிக்குள்ளே

அரும்பு மீசையில் விரும்பிய காதல்
ஆன்மாக்குள்ளே
அன்பென நினைத்து வம்பில் முடிந்தது
ஆசைக்குள்ளே

நாகாத்துப் பேசிட்டு நல்லாசி வழங்கியதும்
நாவுக்குள்ளே
முகர்ந்த மணமும் முகம்சுழிக்கும் வாசனையும்
மூக்குக்குள்ளே

பொல்லாரைப் புறந்தள்ளி பகையோரை வசைபாடியது
வாயிக்குள்ளே
படைத்திட்ட இறையோனை வணங்கிய தழும்பு
நெற்றிக்குள்ளே

பாச உறவுகளும் நேச ஊராரும்
உணர்வுக்குள்ளே
பாடிப்பறந்தவர் வெளிநாட்டில் அடைபட்டது
புத்திக்குள்ளே

இத்தனையும் புதைந்தனவே முத்துக்களாய்
மனதுக்குள்ளே
எதைமறப்பேன் எதைநினைப்பேன்
எனக்குள்ளே

இன்னுமுண்டு பல்லாயிரம் வகை
இதயத்துக்குள்ளே
இவையனைத்தையும் நினைத்திடனும்
இறப்புக்குள்ளே
அதிரை மெய்சா
இந்தக் கவிதை கடந்த 17/04/2015 வெள்ளிக் கிழமை துபாய் கராமாவில் உள்ள சிவ் ஸ்டார் பவனில் வானலை வளர்தமிழ் நடத்திய கவிமன்றத்தில் வாசிக்கப்பட்டது. 

2 comments:

  1. உங்களின் பதிவுகளை ... சுவைத்தேன்
    திகட்டவில்லை ...

    தங்களின் வரிகளில் ...
    வாழ்வியல் புதையல் ...
    சுரங்கமாய் ..

    ReplyDelete
    Replies
    1. கவிவரிகளை ரசித்து வாசித்து சுவைத்தமைக்கு மிக்க நன்றி.

      Delete

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.