Sunday, April 19, 2015

போலிகள் ஜாக்கிரதை !? அதிரை மெய்சாவின் 150 வது படைப்பு !

ஒருகாலத்தில் வெளுத்ததெல்லாம் பாலாகவும் போலிஎன்றால் என்னவென்று அதன் பொருள் கூட சரியாகத் தெரியாமாலும் நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். அந்த அளவுக்கு உணவு, உடை, மனம், எண்ணம், பேச்சு, நட்பு, உறவு,என அனைத்தும் போலி இல்லாமல் எல்லாமே சுத்தமாக இருந்தது. அன்றைய காலத்தில் வாழ்ந்தவர்கள் வெகுளித்தனமாக பிறரை ஏமாற்றத் தெரியாதவர்களாக இருந்தார்கள்.


ஆனால் இன்றைய நிலையோ எதையும் நம்பமுடியாத காலமாக மாறிவிட்டது. காரணம் போலி என்பது இப்படித்தான் இருக்கும் இதுதான் போலி என்று இனம்கண்டுபிடிக்கமுடியாமல் எல்லாவற்றிலும் கலந்து யூகிக்க முடியாத அளவுக்கு நம்மை சூழ்ந்து பலதரப்பாக அசலைப் போல் வேடமிட்டு வலம் வந்து கொண்டிருக்கிறது.

போலிகள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டுபோக பொதுமக்களும் ஒரு முக்கிய காரணமாக உள்ளனர். விஞ்ஞானமும் நவீனங்களும் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டு போகவே மக்களும் தனது தேவைகளை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர்.. அதாவது தேவைகளை மிஞ்சி மனிதன் தேட ஆரம்பித்து விட்டதால் தான் போலிகள் தாராளமாக புழங்கத் தொடங்கி விட்டன.

பழங்காலத்தை எடுத்துக் கொண்டோமேயானால் ஒரு ஆடையானாலும் அலங்காரப் பொருளானாலும் வீட்டு உபயோகப் பொருளானாலும் பயணிக்கும் வாகனமானாலும் நீண்ட நாள் வரை பாவித்து இன்றுவரை சிலபேர் நினைவுச் சின்னமாக கூட வைத்து அந்தப் பொருட்களை பாதுகாத்து வருகிறார்கள். அன்றைய காலத்தில் அனைத்தும் தரத்துடன் இருந்தது. பொருளில் மட்டுமல்லாது போலித்தனம் இல்லாத உழைப்பும் சேர்ந்து இருந்தது.

ஆனால் இன்றைய நிலையோ போலிகள் கணக்கில்லாமல் புழங்க ஆரம்பித்துவிட்டன. போலிகளை விற்பனை செய்பவர்களும்கூட போலித்தனமாக பகட்டுப் பேச்சும் உத்திரவாதமும் அளித்து அசலானது என நம்பவைத்து போலிகளையே அதிகமாகப் புகழ்ந்து தான் திறமைசாலியென நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களுக்கு இதையெல்லாம் யோசிக்கவோ மேற்கொண்டு கவனிக்கவோ அவகாசமும் இல்லை. அப்படியே யோசித்தாலும் அதை பெரிதுபடுத்துவதில்லை. இதுவே போலிகளை வளர்க்க சாதகமாகவும் காரணமாகவும் இருக்கிறது.

எல்லாவற்றையும் ஆக்கிரமித்த போலிகள் இயற்கைத் தாவரத்தையும் விட்டுவைக்கவில்லை. போலிக் காய்கறிகளும் தயாரிக்கத் தொடங்கி புழக்கத்தில் வந்து விட்டது. இன்னும் சொல்லப்போனால் நாம் அன்றாடம் உணவாகப் பயன்படுத்தும் அரிசிகூட போலியாகத் தயாரிக்கப்படுவதே உச்சகட்ட அதிர்ச்சிதரும் வேதனையாக உள்ளது.

அதுமட்டுமல்ல அனைத்திலும் போலிகள் புகுந்துவிட்ட இந்தக்காலத்தில் உண்மையென நினைத்த உறவையும்,நட்பையும் கூட விட்டுவைக்கவில்லை. அதுவும் போலித்தனமானதாகவும் சுயநலமிக்கதாகவும் தேவைக்கு பயன்படுத்தும் உறவுகளாகவும் நட்புக்களாகவும் பாசம் காட்டுவதெல்லாம் பாசாங்கமாகவும் அன்புசெலுத்துவதெல்லாம் அவரவர் தேவைக்காகவும் என அனைத்தும் அதிகபட்சம் போலியாகவே உருவெடுத்துக் கொண்டிருப்பது இன்னும் வேதனையளிக்கக் கூடியதாக உள்ளது.

எத்தனையோ விசயங்களுக்காக குரல்கொடுக்கும் பொதுஜனங்கள் இந்தப் போலிகளை ஒழிக்கவோ எதிர்க்கவோ யாரும் குரல் கொடுத்தமாதிரி தெரியவில்லை. குரல் கொடுக்காத காரணம்தான் ஏனோ ??? அப்படியானால் அனைத்திலும் போலித்தனத்தை விரும்பி ஏற்றுக் கொண்டுவிட்டார்களோ என்னவோ எல்லாம் புரியாத புதிராகத்தான் உள்ளது.!

இருப்பினும் நாம் போலிகளை இனம்கண்டு விழிப்புணர்வுடன் விலகி இருப்பதுடன் நாமும் நம் நடைமுறை வாழ்க்கையையும் செயல்பாடுகளையும், வியாபாரத்திலும், பணிசெய்வதிலும்,  பிறரிடத்தில் அன்பு செலுத்துவதிலும், ஆதரிப்பதிலும் போலித்தனம் இல்லாது அசலாக இருந்து சமுதாய மக்கள் போற்றும் நல்ல மனிதர்களாக வாழ வகை செய்து கொள்வோமாக !
அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.