இப்படி அவசரத்தால் செய்யும் காரியங்களும் அவசரப் போக்காலும் எதையும் நாம் பெரிதாக சாதிக்கப் போவதில்லை. மாறாக பல இழப்புக்களையே சந்திக்க வேண்டியுள்ளது. அவசரம் என்று செலுத்தப்படும் வாகனத்தால் விபத்துக்களே அதிகமாக ஏற்படுகிறது. அவசரம் என்று வெளியூர் பயணமோ, அல்லது பணிக்குச் செல்லும்போதோ அல்லது பள்ளி,கல்லூரிக்குச் செல்லும்போதோ முக்கிய ஆவணங்களை மறந்து விட்டுச் செல்லும் சூழ்நிலை ஏற்ப்பட்டு விடுகிறது. அத்தனை அவசரப்பட்டு போயும் புண்ணியமில்லாமல் திரும்பிச் செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது.
அவசியத்திற்கு அவசரப்படுவதை ஏற்றுக் கொள்ளும்படி இருந்தாலும் அதிகபட்சமாக அவசியமில்லாதவைகளுக்கெல்லாம் ஏன் அவசரப்படுகிறோம் என்று யாரும் யோசிப்பதில்லை. இந்த நிகழ்ச்சியை தினமும் .நம் வாழ்வில் காணலாம்.
உதாரணமாகச் சொன்னால் நாம் ஒரு கடைக்கு சாமான்கள் ஏதேனும் வாங்கச் சென்றால் அங்கு பொறுமை காப்பதில்லை. கடைக்காரரை அல்லது விற்பனையாளரை அவசரப்படுத்துகிறோம். அப்போது சில சாமான்களை தவற விட்டு விட்டோ அல்லது மீதிப்பணத்தை வாங்க மறந்து விட்டோ சென்று விட்டு ஞாபகம் வந்தால் திரும்ப வந்து பெற்றுக் கொண்டு போகிறோம்.. இதனால் நமக்கு மேற்கொண்டு காலதாமதமாவதுடன் பல நஷ்டங்களும் மேலும் நேரம் விரயமாகி இழப்புகளே ஏற்ப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் அதிகமாக அவசரப்படுவதால் சில எளிதாக ஆகவேண்டிய அலுவலக, காரியங்கள் கூட அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகி இன்னும் காலதாமதமாகிப் போய்விடுகிறது. மருத்துவரிடம் சிகிச்சைக்குச் செல்லும்போதும் மற்ற பிற நம் தேவைக்கு செல்லும்போதும் அவசரப் படும்போது எரிச்சலுக்கு ஆளாகி மீண்டும் காலதாமதமாவதுடன் இழப்புகளுக்கே ஆளாகிறோம். ஆகையால் அவசரத்தால் அதிகமாக ஏதாவது ரூபத்தில் இழப்புக்களையே சந்திக்க நேரிடுகிறது.
இன்னும் சொல்லப்போனால் பின்விளைவுகளை யோசிக்காமல் அவசரப்பட்டு முடிவு எடுப்பதாலும் அவசரப்பட்டு வார்த்தைகளை அள்ளி வீசிவிடுவதாலும் உறவுகளையும் நல்ல நட்புக்களையும் இழந்துவிட நேரிடுகிறது. அப்படியானால் எல்லாம் அவசரத்தால் வரும் இழப்புக்கள் தானே.
இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது யாதெனில் அவசரம் எப்போதும் ஏதாவது ஒருவகையில் நமக்கு இழப்பையே தருகிறது. கொஞ்சம் பொறுமையை கையாண்டு பின்விளைவுகளையும் சிந்தனையில் கொண்டு நடந்து கொண்டோமேயானால் இறைவன் நமக்களித்துள்ள இந்த நல்வாழ்வை வளமுடன் வாழ வகைசெய்யும். அத்துடன் கொஞ்சம் காலதாமதமானாலும் பரவாயில்லை என்கிற பழக்கத்தை கடைப்பிடித்து பழகிவிட்டோமேயானால் நம் வாழ்வில் இழப்பை அரிதாக்கி செழிப்புடன் வாழ வழி வகுத்துக் கொள்வதாக இருக்கும்
ஆகவே நாம் எதிலும் அவசரப்பட்டு இழப்புக்களை சந்திக்காமல் நிதானமாக செயல்பட்டு நிம்மதியாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும். அவசரத்தின் தடுமாற்றத்தால் தவறுகள் ஏற்ப்படுவதை தவிர்த்து பொறுமையைக் கடைப்பிடித்து அவசரத்தினால் ஏற்படும் இழப்புக்களை தவிர்த்து நிம்மதியுடன் நாம் மேற்கொள்ளும் காரியங்கள் வெற்றியடைந்து மகிழ்வுடன் வாழ வழிவகுத்துக் கொள்வோமாக..!!!
அதிரை மெய்சா
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.