Thursday, December 11, 2014

முணு முணுப்பு !

மனிதனின் வாழ்வினிலே
மாறாத பழக்கமாய்
மடியும் வரை தொடர்ந்திடுமாம்
மனத்தினிலே நிலைபெறுமாம்
முணுமுணுப்பு

சினங்கொண்ட பகையோரும்
சீண்டிய நம் உறவுகளும்
புறம்பேசி முணுமுணுப்பர்
பொல்லாங்கு செய்ய நினைப்பர்

இனம்கண்ட தவறுகளும்
எதிர்கொண்ட இகழ்வுகளும்
பணம் கொண்டு மறைந்து விடும்
புகையாகி முணுமுணுக்கும்

அன்பான சிநேகிதமும்
அளவு கூடி விலகிவிட்டால்
வம்பாகி முணுமுணுக்கும்
வசைபாடி வினையாகும்

ஆதிக்கம் செலுத்துவோரும்
சாதிக்க நினைப்போரும்
சோதனையால்முணுமுணுப்பர்
சோர்ந்து மனக் கவலைகொள்வர்

ஊதாரியாய் அலைந்தால்
ஊரார்கள் முணுமுணுப்பர்
உதவாக்கரையென
உறவார்கள் தூற்றிடுவர்

நாதாரியாய் இருந்தால்
நம்பியவர் சபித்திடுவர்
போதாதகாலமென - மனம்
புண்ணாகி முணுமுணுப்பர்

நாளெல்லாம் முணுமுணுத்து
நகர்ப்புரத்தை வலம்வருவோர்
நா ருசிக்க உணவுண்பர்
நடிப்பினிலே உலகைவெல்வர்

அனுதினமும் முணுமுணுத்தால்
அருகிலுள்ளோர் விலகிடுவர்
ஆகாயம் முணுமுணுத்தால்
அந்தி - மழைவந்து மகிழ்ந்திடுவர்

முணுமுணுப்பில் பலதும் உண்டு
முகமறியா நலமும் உண்டு
கணக்கில்லா முணுமுணுப்பில்
காரியமும் கெடுவதுண்டு

தனக்குள்ள பழக்கத்தை
தரமாக்கி வாழ்தல் நலமே
முகம் சுழிக்கா முணுமுணுப்பை
முறையாக அறிதல் உயர்வே
அதிரை மெய்சா

குறிப்பு : இந்த கவிதை கடந்த [ 13-11-2014 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.