Sunday, November 16, 2014

மலிவாகி விட்டதா !? மனித உயிர்கள் !?!?

உயிரை மையமாக வைத்தே உவ்வுலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பிட்டுச் சொல்வதானால் அனைத்து உயிரினங்களுக்கும் மேலாக மனித உயிர் விலை மதிக்க முடியாத உயிராகவும் வேறு எந்த உயிர்களோடும் ஒப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு உயர்ந்தவையாகவும் இருக்கிறது.

காரணம் மனிதன் மற்ற உயிரினங்களைப் போல் அல்லாது சிந்தித்துச் செயல்படும் ஆறறிவுடன் படைக்கப்பட்டுள்ளான். நல்லது கெட்டதை நன்கு அறிந்து நடக்கக் கூடியவனாக இருக்கிறான். மனிதனின் மகத்துவமிக்க அறிவைப் பயன்படுத்தியே இவ்வுலகம் இத்தனை வளமாக திகழ்கிறது. மனிதன் மேம்பட வில்லையெனில் இவ்வுலக வாழ்க்கை அர்த்தமற்றதாகத்தான் இருந்திருக்கும்.ஆகவே மனிதனும் மனித உயிரும் இவ்வுலகில் பெரிதும் மதிக்கப்பட வேண்டியதாக உள்ளது.

அப்படிப்பட்ட மிக உயர்ந்த மனித உயிர் மலிவாக கொல்லப்படுவது மனித நேயம் உள்ளவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. இது அண்மையில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டையே உதாரணமாகச் சொல்லலாம். காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு வாலிபர் காவல் நிலையத்திலேயே சுட்டுக் கொல்லப்படுகிறார்.அந்த வாலிபனின் எத்தனையோ வருங்கால வாழ்க்கைக் கனவுகளெல்லாம் சிறிது நேரத்திலேயே சின்னாபின்னமாகி குண்டுகளால் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விடுகிறது. மனதிற்க்கு வேதனையையும், அதிர்ச்சியையும் தரக்கூடிய இச்சம்பவம் வேறு வெளிநாட்டில் எங்கோ நடந்திடவில்லை.. எல்லாம் நம் அமைதிப் பூங்காவில்தான் அரங்கேறியது.
.
இது இப்படியிருக்க ....

சமீபத்தில் நமக்கு அடுத்துள்ள ஆந்திர மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தது. மனித உயிருக்கான மதிப்பை ஏற்ப்படுத்தும் விதத்தில் நடந்த இந்நிகழ்வு அனைவரது இதயத்திலும் இடம்பிடிக்கும் விதத்தில் இருந்தது.பத்துவயதேஆன அச்சிறுவனுக்கு தாம் வருங்காலத்தில் காவல்துறையில் உயர் பதவி வகிக்க வேண்டுமென்றஆசை. ஆனால் அச்சிறுவனுக்கு இரத்தப் புற்றுநோய் தாக்கி மருத்துவரால் கைவிடப்பட்டு எந்நேரமும் உயிர்பிரியும் என்கிற எதிர்பார்ப்புடன் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் அச்சிறுவனின் ஆசையை மனிதாபிமானத்தின் அடிப்படையில் நிறைவேற்றிவைக்கிறார் அங்குள்ள அந்த மனிதாபிமானமுள்ள உயர் அதிகாரி. அந்தச்சிறுவனுக்கு முறையாக சீருடை கொடுக்கப்பட்டு முறையாக பதவிப் பிரமாணம் செய்துவைத்து ஒருநாள் மட்டும் அந்த உயர் பதவிக்கான அதிகாரங்களைக் கொடுத்து அழகு பார்த்தார் அந்த உயர்ந்த மனிதர்.இதிலிருந்து என்ன தெரியவருகிறது. மனித உயிர்கள் ஒருபக்கம் மதிக்கப்படுகிறதுதானே..!

இன்னும் சொல்லப்போனால் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு நாட்டுச் சட்டங்கள் வழங்கிடும் மரண தண்டனையை கூட கடைசி நிமிடத்தில் கருணையின் அடிப்படையில் விடுவிக்கப்படுகிறார்கள். ஏன்..? மனித உயிர்கள் மதிக்கப்படுவதால் தானே...!

அதுமட்டுமல்ல நீண்டகாலமாக சுயநினைவின்றி படுக்கையில் இருப்பவர்களையும்,தீராத வியாதியால் தினம்தினம் வேதனையில் அவதிப்பட்டு சிறுகச் சிறுக செத்துக் கொண்டிருப்பவர் களுக்கும்கூட அவ்வளவு எளிதாக கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்கப் படுவதில்லை.காரணம் இங்கு மனித உயிர்கள் மதிக்கப்படுவதால் தானே..! இப்படி மனித உயிர்கள் மதிக்கப்படுவதற்கான பல உதாரணங்களை அடுக்கடுக்காக சொல்லிக் கொண்டு போகலாம்.

இப்படிப் பலகோணத்தில் மனித உயிர்கள் மதிக்கப்பட்டாலும் வேறுபல கோணத்தில் மனித உயிர்கள் மலிவாகிக் கொண்டிருப்பது தான் வேதனையளிக்கக் கூடியதாக உள்ளது

இயற்கைச் சீற்றத்தால் ஏற்ப்படும் இறப்புக்களும்,விபத்துக்களால் ஏற்ப்படும் மரணங்களும், நோய்வாய்ப்பட்டு இறப்பதும், முதுமை எய்தி மரணிப்பதும் கொடுங்குற்றங்கள் புரிந்து மரண தண்டனை அடைவதும் இவைகள்யாவும் நடைமுறையில் மனிதனுக்கு ஏற்ப்படும் மரணங்களாகும்.இதை விதி என சொல்லித்தான் ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டும். .
.
ஆனால்....

இவ்வுலகில் வன்முறையின்பால் ,முன்விரோதத்தின்பால்,இன மதக் கலவரத்தின்பால்,அதிகார ஆளுமையின்பால், போலி என்கவுண்டரின்பால், மூட நம்பிக்கையின்பால் நரபலி மற்றும் சிசுக் கொலைகள்,போன்ற மனிதாபிமானமற்ற கொலைகள் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு பகுதிகளிலும் வெவ்வேறு விதமாக அனுதினமும் நடந்துகொண்டு இருப்பது தான் பொறுத்துக் கொள்ள முடியாத வேதனை தரும் நிகழ்வாக இருக்கிறது. இத்தகைய கொலைகள் மனித உயிர்களின் விலையரியாத போக்காக உள்ளது. நினைத்துப் பார்க்கும்போது நெஞ்சு கனத்துத்தான் போகிறது..மனித உயிர்கள் மலிவாக்கப்பட்டு நடக்கும் இத்தகைய கொலைகளை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் என்றாவது ஒருநாள் இறக்கக் கூடியவையே. இறப்பை நோக்கியே நாம் பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். ஆக்கலும் அழித்தலும் அகிலம் முழுதையும் படைத்த இறைவனின் செயல்.அவனன்றி இவ்வுலகில் வேறு எவருக்கும் பிறர் உயிரை எடுக்கும் உரிமையில்லை.அதுமட்டுமல்ல தன் உயிரைக் தானே போக்கிக் கொள்ளும் உரிமை கூட யாருக்கும் கிடையாது. இதை ஒவ்வொருவரும் உணர்ந்து நடந்தாலே இவ்வுலகில் நடக்கும் குற்றங்களும் கொலைகளும் கொடூர சம்பவங்களும் முடிவுக்கு வந்து கணிசமாக குறைந்து போகும்.எனவே அனைவரும் சற்று சிந்திப்போமாக ...!!!

அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.