Wednesday, August 27, 2014

லஞ்சத்தை ஒழிக்க முடியாதா !?

லஞ்சம் என்பது குணப்படுத்த முடியாத புற்றுநோயாக அனைத்து துறையிலும் வளர்ந்து வேரூன்றி விட்டது..லஞ்சம் வாங்குவதும் குற்றம்.லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்று நாட்டில் சட்டம் நடைமுறையில் இருந்தாலும் எத்தனை லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணித்துப் பிடித்து தண்டனை வழங்கிவந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சாதாரணமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. இன்றைய காலத்தில் லஞ்சம் வாங்குபவர்கள் குறைந்துகொண்டு போனாலும் லஞ்சத்தை ஊக்கப்படுத்துவதுபோல லஞ்சம் கொடுக்கும் நாட்டுமக்கள் பெருகிக் கொண்டு போகிறார்கள் என்பதுதான் உண்மை நிலையாகும்..
அதற்க்குக் காரணம் பொதுமக்களின் சோம்பேறித்தனம் சொகுசான வாழ்க்கைநிலை,எதிலும் சுயநலம், முயற்ச்சியின்மை, தன்னால் இயலாதென சோர்ந்துபோகும் மனப்பான்மை சட்டதிட்டங்களை அறிந்து வைத்திராத அலட்சியப்போக்கு ஆகியவையே லஞ்சம் கொடுத்து காரியங்களை சாதித்துக்கொள்ள தூண்டுகோளாகவும்,காரணமாகவும் இருக்கின்றன.
சின்னச் சின்ன வேலைகளை காரியங்களை உடனுக்குடன் முடிப்பதற்காக பொதுமக்களே மனமுவந்து முன்வந்து லஞ்சம் கொடுப்பதைப் பார்க்கும்போது மனம் வேதனையாகத்தான் இருக்கிறது சட்டம் பேசினால் நம் காரியங்கள் தடைபட்டுப் போகுமோ என்கிற பயத்தில் பொதுமக்களாகிய நாமே லஞ்சத்தை ஊக்கப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்கிறோம். இப்படி மக்களின் மனநிலை இருக்கும்பட்சத்தில் எப்படி லஞ்சத்தை ஒழிக்க முடியும்...??? 
இதற்க்கு பல உதாரணங்களைச் சொல்லலாம்.அதில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.. சிலர் லஞ்சம் கொடுப்பதைப் பார்க்கும்போது மனம் கொதித்து கோபமடைய வைக்கும். எப்படிஎன்றால் நகரில் சில புகழ்பெற்ற மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் ஆகவே பெயர் பதிந்து டோக்கன் வழங்குவார்கள்.அதில்கூட பெயர்பதிவாளரிடம் முதல் டோக்கன் பெறுவதற்காக பொதுமக்களே மனமுவந்து லஞ்சம் கொடுத்து முதல் டோக்கன் பதிந்து சிகிச்சைபெற்று செல்கிறார்கள்.
அடுத்து பார்ப்போமேயானால் பிறப்பு, இறப்பு சான்றிதழை விரைவில் வாங்குவதற்கு, மானியம் வாங்குவதற்கு, உதவித்தொகை பெறுவதற்கு,சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் பெறுவதற்கு,முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு,இப்படி தனக்கு தேவையான அரசால் அதிகாரபூர்வமாக வழங்கக்கூடியவைகளுக்கெல்லாம் மக்கள் லஞ்சம் கொடுத்துப் பெறுகிறார்கள் என்பதுதான் மிகவும் யோசிக்க வேண்டியவைகளாக இருக்கிறது.லஞ்சத்தை சந்தைப் பொருளாக்கிய குற்றம் பொதுமக்களாகிய நம்மைத்தான் சேரும். மக்களிடத்தில் போதிய விழிப்புணர்வு இருந்தால் எதிர்த்து போராடுவர். 
லஞ்சத்தை ஒழிக்கமுடியாதா..? என்ற கேள்விக்கு பதில் நம்மிடத்தில் தான் உள்ளது. சில வேலைகளை உடனுக்குடன் முடிக்கவேண்டி சோம்பேறித்தனத்தால் அதற்க்கான முயற்ச்சியின்றி மன உளைச்சலின்றி பெற நினைக்கிறார்கள். காசுபணம் செலவானாலும் பரவாயில்லை காரியம் நடந்தால்சரி என்கிற மனநிலை முதலில் மக்களிடையே மாறவேண்டும்.
எத்தனையோ இலவச திட்டம்,இலவச சேவைமையங்களென அரசு ஏற்ப்படுத்திக் கொடுத்தாலும் அதனை முறையாக பயன்படுத்திக் கொள்ளாமல் அனைத்திற்கும் லஞ்சம் கொடுத்து சிரமமின்றி பெற்றுக் கொள்ளவே நாட்டுமக்கள் பழகி விட்டார்கள். இதன் காரணமாகவே பெரிய அளவில் லஞ்சம் பெருகி இன்று நிலைமையோ எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சமென லஞ்சத்தில் மூழ்கிறநிலை உருவாகிவிட்டது. 
அரசு எவ்வளவு முயற்சித்தும் லஞ்சத்தை ஒழிக்க முடியாமல் போவதற்கு பொதுமக்களின் ஒத்துழையாமை தான் முதற்க்காரணமாக இருக்கிறது. இன்றைய நிலையில் லஞ்சம் கேட்டு வாங்கும் நபர்களை விட லஞ்சம் கொடுத்து ஊக்குவிக்கும் நபர்களே நாட்டில் அதிகமாக இருக்கிறார்கள். ஆகவே முதலில் பொதுமக்களாகிய நாம் தான் லஞ்சம் கொடுப்பதை தவிர்த்து கொள்ளவேண்டும். அரசின் சட்டதிட்டங்களை ஓரளவாவது அறிந்து வைத்திருக்க வேண்டும்.அப்படியே லஞ்சம் கேட்டு வற்ப்புறுத்தும் அதிகாரிகளுக்கு தக்க பாடம் புகத்திடும் விதத்தில் சம்பந்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் தைரியமாகச் சென்று புகார் அளிக்கவேண்டும் 
மடியில் கனம் உள்ளவர்களுக்குத்தான் வழியில் பயமிருக்கும் என்று ஒரு பழமொழி சொல்வது போல நம்மிடத்தில் நேர்மை, நீதி தவறாமை, மற்றும் அரசின் விதிமுறைகளை கடைபிடித்தல், நாட்டுப்பற்று, நல்லொழுக்கம் கடமை தவறாமை பொதுநலத்தில் அக்கறை, சேவைமனப்பான்மை, ஆகியவைகள் இருந்தால் லஞ்சம் வாங்கவும் மனம் இடமளிக்காது..லஞ்சம் கொடுக்கவும் மனம் இடமளிக்காது. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் ஒவ்வொருகுடிமகனுக்கும் உள்மனதில் குடிகொண்டு விட்டால் லஞ்சம் மட்டுமல்ல நாட்டுக்கு தீங்கிழைக்கக் கூடிய அனைத்து தீய நடவடிக்கைகளையும் ஒழித்து இனிவரும் காலங்களில் உலகநாட்டு மத்தியில் நம்நாட்டை பிரகாசமாக ஒளிரச் செய்யலாம்.

அதிரை மெய்சா 

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.