அனுபவம் என்பதை இருவெவ்வேறு வகையாக பிரிக்கலாம். முதலாவது நம் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பலரீதியிலான அனுபவங்கள். இரண்டாவது நம் நல்வாழ்க்கைக்காக நாமே ஏற்படுத்திக் கொள்ளும் நல்ல பல அனுபவங்கள். இந்த இருவெவ்வேறுவகை அனுபவங்களும் நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள பெரிதும் உதவியாக இருக்கின்றது.
நாம் சிந்தித்து செயல்படும் ஆற்றலை பெற்ற பிறகு இவ்வுலகவாழ்க்கையில் பல எண்ணிலடங்கா அனுபவங்களை பெற்றிருப்போம். அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு படிப்பினையை நமக்கு தந்திருக்கும். சில அனுபவங்கள் நல்லதொரு பாடமாக அமைந்திருக்கும். சில அனுபவங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத இன்னல்களை,துயரங்களை,அவமானங்களை ஏற்படுத்தியிருக்கும். இப்படியான பலவகை அனுபவங்களை அனைவரது வாழ்விலும் நிச்சயமாக சந்தித்திருப்போம்.
அனுபவம் என்பதை சாதாரணமாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. அது நம் முன்னேற்றத்திற்கு முன்னின்று உதவும் மூலப்பொருளாகவும், உந்தல் சக்தியாகவும் சவாலாகவும் இருக்கிறது. நம் வாழ்க்கைக்கு பலன் தரக்கூடிய நல்ல படிப்பினையாக இருக்கிறது.
எத்தனையோ மேதாதைகளும்,விஞ்ஞானிகளும் அரசியல் தலைவர்களும், தொழிலதிபர்களும் உருவாகக் காரணம் அவர்களது வாழ்வில் பெற்ற பல மறக்கமுடியாத படிப்பினை எனும் அனுபவங்களே என்று சொன்னால் அது மிகையாகாது. ஆரம்ப காலத்தில் சாதாரண நிலையில் இருந்த அவர்களை வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களே இந்த நிலைமைக்கு உயர்த்தி இருக்கிறது என்று பல ஊடகவாயிலாகவும் பத்திரிக்கைச் செய்தி வாயிலாகவும் நாம் படித்தும் பல மேடைப்பேச்சுக்களில் கேட்டும் அறிந்திருப்போம்.
ஆக நாம் நம் வாழ்வில் சந்தித்த இன்ப துன்ப அனுபவங்கள் பிற்காலத்தில் அது நம்வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும். அது நம்மை வாழவைக்கும்.ஆக அனுபவமும் ஒருமனிதனை உலகறிய வைக்கிறது.
அடுத்து இரண்டாம் வகை அனுபவம் என்பது தமது சொந்த முயற்ச்சியில் மேற்கொள்ளும் அனுபவமாகும். கல்லூரி பட்டப்படிப்பிற்கு நிகராக அனுபவமும் ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு அவசியம் தேவைப்படுகிறது. நமக்கு எவ்வளவு பல திறமைகள் இருந்தும் அனுபவசாலிக்குத்தான் செல்லுமிடத்திலெல்லாம் சிறப்பான வரவேற்பாய் இருக்கும்.அவர்களுக்கே முன்னுரிமை அளிப்பார்கள். காரணம் அனுபவம் என்பது பல கஷ்டம், துன்பம், இன்னல்களைக் கடந்து வந்து கற்று கைதேர்ந்து வந்தவையாகும்.
அனுபவசாலிகளிடம் எந்த ஒருசிரமமான வேலையானாலும், பிரச்சனையானாலும், எப்படிக் கையாழ்வது என்கிற சமயோஜிதின புத்தியும், பொறுமையும், சிந்தித்து செயல்படும் தன்மையும் இருக்கும்.ஆகவே அனைத்து விசயத்திலும் அனுபவசாலிகளையே தேர்ந்தெடுப்பார்கள்.
உதாரணத்திற்கு சொல்வதானால் அரசியல்,ஆன்மீகம்,மருத்துவம் இன்னும் பல இவ்வுலக வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களுக்கும் அனுபவமே அவசியம் தேவைப்படுகிறது. ஒரு சிறிய வேலைமுதல் பெரிய வேலைகள்வரை அனுபவசாலிகளையே தேர்ந்தெடுப்போம். வேலைக்காக நேர்முகத்தேர்வுக்குப் போனால் கூட அனுபவசாலிகளுக்கே முன்னுரிமை அளிப்பார்கள். தேர்ந்தெடுக்கும் நபர் முன்அனுபவம் உள்ளவரா என்றுதான் முதலில் பார்ப்பார்கள்.
ஆக நம் வாழ்க்கையில் ஏற்படும் பல மறக்கமுடியாத இன்னலானாலும்,இன்பமானாலும் அனுபவங்களை நினைத்து மனம் குன்றி சோர்ந்து விடாமல் நம் அறிவை வளர்த்துக்கொள்ள அதை ஒரு ஆயுதமாகவும், முன்னெச்சரிக்கையுடன் செயல்பட நல்லதொரு படிப்பினையாகவும் நினைத்துக்கொள்ள வேண்டும்.
ஆகவே கல்வி அறிவு பெற்றால் மட்டும் போதாது.பொது அறிவும் அறிந்திருக்க வேண்டும்.அதுபோல நான் படித்தவன் அதைச்செய்யமாட்டேன். இதைச்செய்ய மாட்டேன் என்று மமதை கொள்ளாமல் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தன்னை தயார் படுத்திக் கொண்டு . வெட்கப்படாமல் பல நேர்மையான வேலைகளும் செய்து அனுபவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அது எப்போதும் தக்க சமயத்தில் கை கொடுக்கும். .எனவே அனுபவத்தை அலட்சியப்படுத்தாது லட்சியமாக எடுத்துக் கொண்டு நல் அனுபவத்தை ஒவ்வொருவரும் ஏற்படுத்திக் கொண்டால் ஒளிமயமான எதிர்காலத்தை அடையலாம்.!
அதிரை மெய்சா
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.