Saturday, May 3, 2014

ஊரு... உறவு... உலகம் !?



காலங்கள் கடந்து செல்லச் செல்ல கால சூழல் எல்லாம் மாறிக் கொண்டு வருகிறது.மனிதனை மனிதன் சாப்பிடாத குறையே அன்றி மற்ற அனைத்து அநீதிகளும் அனாச்சாரகளும், மனித தர்மத்திற்கு எதிரான செயல்களும் மனிதன் தினமும் அரங்கேற்றிக் கொண்டுதான் இருக்கிறான். மனிதருக்குள் எத்தனை எத்தனை தான் பிரிவுகள், பிரச்சனைகள்,ஒரு ஊருக்குள்ளேயே ஆயிரெத்தெட்டு பிரிவினைகள்,பிறகு தெருவாரியாக ஆயிரெத்தெட்டு பிரிவினைகள் பிறகு குடும்பவாரியாக் ஆயிரத்தெட்டு பிரிவினைகள் அந்தக் குடும்பங்களாவது ஒற்றுமையாக இருக்கிறதா என்று பார்த்தால் அங்கேயும் உள்ளுக்குள் ஆயிரெத்தெட்டு பிரிவினைகள் . இப்படி மனித ஜென்மங்கள் தன்னைத்தானே பிரித்துக்கொண்டு சிதறுண்டு போய்க்கொண்டிருக்கிறது.


ஊர் ஒற்றுமை பேசுவோர்பேச்சு வாயளவில் மட்டுமே பேசப்படுகிறது.. செயல்பாட்டில் செயலிழந்து உள்ளதுதான் உண்மைநிலை. என்னவென்றால் ஊரைப் பொருத்தவரை எது தட்டுப்பாடகிப் போனாலும் புறம்பேசுதல்,பொறாமைப்படுதல், கோள்சொல்லுதல், கேடுவிளைவிக்கும், செயல்,அடுத்தவர்களின் ஆஸ்திக்கு ஆசைப்படுதல், ஏமாற்றுவேலை,துரோகச்செயல், மோசடிகள் என்று இவைகள் யாவும் நீண்ட பட்டியலாய் பஞ்சமில்லாமல் இருக்கிறது.

நல்லவர் கெட்டவர் என ரகம் பார்க்கப்படுவதில்லை.பணம் உள்ளவர் புகழப்படுகின்றனர். ஏழைகளை ஏறெடுத்தப் பார்க்க ஆளில்லை.பணம் பணத்துடன் சேர்க்கிறது.மரியாதை மடியில் கணம் உள்ளவர்களுக்கு மட்டும் கொடுக்கப்படுகிறது.ஏண்டவன் ஆண்டவன் என்று சொல்வது போல எல்லோரிடமும் போட்டியும், பொறாமையும் புரையோடிக்கிடக்கிறது. இதற்குமேல் ஊரைப்பற்றி. சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது.

அடுத்து உறவு முறைகளைப் பார்க்கப் போனால் பாசம் வெறும் வேசமாகவும், சுயநலம் தலைதூக்கியும் நிற்கிறது. நலிந்து இருக்கும் இரத்த உறவுகள் தூரமாகவும் புது உறவுகளுக்கு புகலிடமும் கொடுக்கப்பட்டு வருகிறது. உடன் பிறந்தோரும் உற்ற நண்பர்களும் பணவசதியின்பால் பாராட்டிற்குரியவர்களாக மதிக்கப்படுகிறார்கள். தாய் தந்தையர்களை முதியோர் காப்பகத்திற்கும், தனது பிள்ளைகளை தரமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் குறிக்கோளை மேற்க்கொண்டு இருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் உறவினர்களிடையே ஏற்படும் சிறு பிரச்சனைகள் எல்லாம் பெரிதாக்கப்பட்டு பிரிந்து சிதறுண்டு உறவு முறைகள் தரமிழந்து போய்க் கொண்டிருக்கிறது என்று தான் சொல்லமுடியும்.புரிந்து கொள்ளும் மனப்பான்மை புதையுண்டு போட்டிபொறாமை தலை தூக்கி நிற்கிறது. மானம் காப்பவராலேயே மானபங்கப்படுத்தப்படுகிறது. மொத்தத்தில் உறவுகள் ஊனமாகிக் கொண்டிருக்கிறது

அடுத்து உலகைப் பார்க்கப் போனால் அமைதியின்மை,அண்டை நாடுகளுடன் ஒற்றுமையின்மை, அராஜகப் போக்கு, அகதிகளாய் மக்கள் கூட்டம், வன்முறை,தீவிரவாதம்,இனப் படுகொலை,இப்படி ஒரு புறமிருக்க விண்ணைத்தொடும் அளவுக்கு விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி புதுப்புது கண்டுபிடிப்புக்கள், மலிவாகிப் போன உலகச் சந்தை, விண்வெளி ஆராய்ச்சியில் சாதனை, செவ்வாய்க் கிரகத்திற்கு சென்று வசிக்க மனிதர்களின் ஆசைகள். இப்படி உலகம் ஒவ்வொரு நொடியும் வேகமாக நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது.

ஆக மொத்தத்தில் காலம் கலிகாலத்தை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறது. இப்படியே போனால் இனி வரும் காலங்களில் நம் சந்ததியினரின் பாடு என்னவாகப் போகிறதோ.!?!?

ஊரு...உறவு...உலகம்...என்று சற்று இந்தப்புரத்தையும் சிந்திப்போம் !!!

அதிரை மெய்சா 

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.