Wednesday, February 12, 2014

மாறிவரும் உணவுவகையும் மடிந்து வரும் ஆரோக்கியமும்.!?


இவ்வுலகில் வாழப்பிறந்த மனிதன் நோய், சீக்கு பிணி இன்றி நீண்ட ஆயுளுடன் திடகாத்திரமாக இருக்க பெரிதும் பேணப்பட வேண்டியவைகளுள் ஒன்று நாம் உட்கொள்ளும் உணவு வகைகளேயாகும். நல்ல உணவுகளும் மனிதனை நலமாக வாழவைக்கும் சிறந்த மருந்து போன்றதே. நாம் உணவாக சாப்பிடும் பலவகை பழவகைகள், காய்கறிகள்,கடல் வாழ் உயிரினங்கள், தரைவாழ் உயிரினங்கள் போன்ற இயற்கையாய் கிடைக்கும் உணவுகளில் தான் உடலுக்கு வலிமை சேர்க்கும் சத்தும், மருத்துவ குணங்களும் நிறைந்து இருக்கின்றன. இதன் தன்மையை மாற்றிச் சாப்பிடும்போது தான் நமக்கு கேடு விளைவிக்கிறது.


அனைத்திலும் புகுந்து விட்ட நாகரீகம் உணவையும் விட்டு வைக்கவில்லை. டின்,பாட்டில்,கவர்ச்சியான பேக்கிங்களில் நிரப்பப்பட்டு அமிலத்தன்மையால் கெட்டுப் போகாமல் குறிப்பிட்ட காலம் வரையிருக்கும் இவ்வகை உணவுகளை நாம் சாப்பிடும்போது உடல் ரீதியில் பலவகையில் தீங்குகள் ஏற்ப்பட வாய்ப்பாக இருக்கின்றது.

நமது நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொருவகை உணவு பிரசித்தி பெற்றதாக இருந்தாலும் நம் தமிழ் நாட்டில் ஆதிகாலம் முதல் அனைவராலும் சாப்பிடப்படுவது அரிசிச் சோறு உணவுதான். என்னென்ன வகைவகையான உணவுவகைகள் இருந்தாலும் சோறு சாப்பிட்டால் தான் பசி அடங்கி சாப்பிட்ட திருப்தியும் உற்ச்சாகமும் ஏற்படுகிறது. காரணம் பண்டு தொட்டு நமது உணவுப் பழக்கவழக்கங்கள் அப்படி ஆகிவிட்டது.

சாதம்,சோறு என்று நம் மாநிலத்தவரால் அழைக்கப்படும் இந்த அரிசிச் சோறு அகில உலக மக்கள் அனைவரும் வெவ்வேறு சுவையில் தயாரித்து உணவாக உட்கொண்டாலும் இதற்க்கு மிக முக்கியத்துவம் கொடுத்து முழுநேர உணவாக நம் தமிழ்நாட்டில் தான் சாப்பிடப்படுகிறது.

சொல்லப் போனால் ஒரு காலத்தில் காலைஉணவாக ஏழை பணக்காரர்கள் என்று வித்தியாசமில்லாமல் அனேகம்பேர் பிரியமாக அரிசிக்கஞ்சி வகைகளும், நீராகாரமும் தான் சாப்பிட்டு வந்தார்கள். அதிகபட்ச வீடுகளில் அரிசிச் சோறாகத்தான் இருந்தது. அதாவது காலை உணவாக பழையகஞ்சி, சுடுகஞ்சி, தேங்காப்பால் கஞ்சி என அரிசியில் சமைக்கப்படும் கஞ்சி உணவுதான் சாப்பிடப்பட்டது.

காலப் போக்கில் கஞ்சி குடிக்கும் நிலைமாறி இட்லி,இடியாப்பம், தோசை,ஆப்பம், வண்டப்பம், என்று ஆரம்பித்து பிறகு ரோஸ்ட்,மசாலாதோசை,ஆனியன் தோசை, ரவா தோசை, உப்மா, வடை, பொங்கல்,பூரி, சப்பாத்தி,என காலை உணவுகளின் கண்டுபிடிப்புக்கள் வளர்ந்து அத்தோடு நின்று விடாமல் கோதுமை தோசை,பரோட்டா, கொத்துப் பரோட்டா,முர்த்தபா, முட்டைப்பரோட்டா, லாப்பா, ஆம்லெட்,ஆப்பாயில், பிறகு பிரியாணி, பாயா, குஸ்கா, மட்டன்மசாலா,சிக்கன்65 இப்படிப்பல தரப்பட்ட உணவோடு தற்போது மந்தி, டிக்கா, கபாப், நான்ரொட்டி, தந்தூரி, சவர்மா, சாண்ட்வீச்,கெண்டகி, பிஜா என இன்னும் எண்ணிலடங்கா உணவுவகைகள் பெரிய பட்டியலாய் வளர்ந்து நிற்கிறது.

மனிதனின் உடலுக்கு அனைத்துப்புப்புரதச்சத்துக்களும் அவசியமாக இருப்பதால் எல்லா வகை உணவுகளும் அவசிமாக இருந்தாலும் சில புதியவகை தயாரிப்பு உணவுகளையும், துரிதமாக தயாரிக்கும் ரெடிமேட் உணவுகளையும் உடலுக்கு தேவையில்லாத கொழுப்பைக் கூட்டும் உணவுவகைகளைத்தான் நாகரீகத்தின் போர்வையில் நாம் அதிகமாக உட்கொள்ள ஆரம்பித்து விட்டோம். நம்மை அறியாமலேயே நமது உடல்ஆரோக்கியத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்

தவிர்க்கமுடியாத அளவிற்கு தற்போது தொழில் வளம் பெருகி விஞ்ஞானம் வளர்ச்சியடைந்து முன்னேற்றத்தை நோக்கி நாம் சென்று கொண்டு இருப்பதால் பெரும்பாலோனோர் வீட்டில் தயாரிக்கும் உணவின் மேல் நாட்டமில்லாமல் ஹோட்டல் உணவுகளையே விரும்பிச் சாப்பிட ஆரம்பித்து அத்தோடு நமது உணவுப் பழக்கவழக்கங்களையும் மாற்றிக் கொண்டு வரத்தொடங்கி விட்டோம்.பசிக்கும் நேரத்தில் சாப்பிடாமல் பாஸ்ட்புட் என அறிமுகமாகியிருக்கும் மாலைநேர உணவுகளை பசியில்லாதபோதும் பொழுது போக்கிற்காக சாப்பிடும் பழக்கமும் தற்ப்போது அதிகரித்து விட்டது. இப்படி நேரம் தவறி சாப்பிடுவதாலும் நமக்கு உடல் ரீதியாக கேடுகள், ஜீரணக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது.ஆகவே உடல் ரீதியாக அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியத்திற்கு ஆளாகிவிட்டோம்..

என்னதான் வகைவகையான உணவுவகைகள் அறிமுகமானாலும் அன்று கைக்குத்தல் அரிசியில் கஞ்சிகுடித்து வாழ்ந்தவர்களின் கம்பீரமும் ஆரோக்கியமும் இன்று இல்லாமல் போய்விட்டதே உண்மைநிலையாகும். இயற்க்கைக்கு மாறாக எதைச் செய்தாலும் அது கேடு விளைவிக்கத்தான் செய்யும் ஆகவே உணவு விஷயத்தில் சற்று உஷாராக இருந்தால் ஆரோக்கியத்துடன் நமது வாழ்நாளை நோயின்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம்.
அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.