Sunday, December 15, 2013

ஞாபகம் வருதா !? ஞாபகம் வருதா !?


காலங்கள் கண்சிமிட்டும் நேரத்தில் காணாமல் போகும் ஒளியாய் ஓடி மறைந்தாலும், அக்கால நினைவுகள் நம் கண்களையும் மனதையும் விட்டு நீங்கா ஒட்டிய பிறவிகளாக நம்முடன் வாழ்ந்து வருகிறது. நமது இவ்வுலக வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஞாபகமென்பது அவரவர் வாழ்வில் நடந்த மறக்க முடியாத நிகழ்வுகளை பொக்கிசமாக உறுதியான எண்ணத்தில் உள்வாங்கி மூலையில் பதியப்பட்டு பாதுகாத்துவைக்கும் நிகழ்வுகளின் பிரதிபலிப்பாகும்.


இறைவன் நமக்குத்தந்த ஒரு உன்னத சக்தி தான் இந்த ஞாபக சக்தி. அன்றாட வாழ்வில் அனைத்து மனிதனுக்கும் மிக அவசியமான ஒன்றாகும். ஞாபக சக்தியை அடிப்படையாய்க்கொண்டே இவ்வுலகம் இயங்கிக்கொண்டு இருக்கிறது. இத்தகைய ஞாபகமென்பது நம்மிடையே இல்லையெனில் இவ்வுலகம் இயங்க வேறு எந்தச்சாத்தியக்கூறுகளும் இல்லையென்று தான் சொல்லமுடியும்.ஞாபக சக்தி என்பது மனிதர்களுக்கு மட்டுமல்லாது மற்ற பிற அனைத்து உயிரினகளுக்கும் உள்ளது. அப்படி இருப்பதாலேயே தனது வளர்ப்பு பிராணிகள் எங்கு சென்றாலும் தனது இருப்பிடத்தை தேடி வந்து விடுகிறது. எதிரிகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்கிறது.
ஞாபகமென்பது எந்த ஒரு வேலையானாலும், ஒரு இயந்திரத்தை இயக்குவதாக இருந்தாலும்,அன்புகாட்டுவதானாலும்,அடையாளம் கண்டுகொள்வதானாலும்,நடை முறை வாழ்க்கைக்கு இவ்வுலகில் அனைத்திலும் மிக மிக அவசியமாக இருக்கிறது.

இந்த ஞாபக சக்தியை இரு வேறு வகையாகப்பிரிக்கலாம். ஒன்று அன்றாட வாழ்வில் மறக்காது நாம் ஞாபகம் வைத்து செய்யும் காரியங்கள். மற்றொன்று மலரும் நினைவுகளாய் என்றோ பல வருடத்திற்கு முன் நடந்த சம்பவங்கள் நம்மனதில் வந்து அசைபோடும் வாழ்வில் நடந்த பழைய நினைவுளாகும்.

பண்டைய காலத்து முதியோர்கள் 90,100 வயதை அடைந்தும் திடகாத்திர சிந்தனையோடும், ஞாபக சக்தியோடும் இருந்தார்கள். அன்று இத்தனை நவீனங்கள் ஒன்றுமில்லாமல் இருந்தன. இன்றையகாலத்து இளைஞர்களோ நவீனங்களை நம்பி கொஞ்சம் கொஞ்சமாக ஞாபக சக்தியை தொலைத்து வருகின்றனர். உதாரணத்திற்கு சொல்வதானால் கால்குளேட்டார் இல்லாமல் கணக்குப் போட தெரியவில்லை. காரணம் மூளையின் சிந்தனைத்திறனை சிறுகச்சிறுக இழந்து வருகின்றனர்.

நாம் இவ்வுலகில் அன்றாட வாழ்வில் ஞாபகமின்மையால் ஏற்ப்படும் நிகழ்வுகளை தினம் தினம் காணலாம். சில சமயம் ஞாபக மறதியால் நம் வாழ்க்கையே தொலைந்து போகும் நிலை கூட ஏற்ப்பட்டுப் போய்விடும். உதாரணமாக சொல்வதானால் ......

ஏர்ப்போர்ட்டிற்கு வந்தபிறகு பாஸ்போட்டை தேடுவது.!

பர்சை எடுத்துவராமல் பஸ் ஏறிவிடுவது.!

மார்கெட்டுக்குச்செல்லும் போது மிக முக்கியமான சாமான்களை வாங்க மறந்து விட்டு வருவது.!

கடையினில் பொருள் வாங்கும் போதும், பஸ்ஸில் டிக்கெட் எடுக்கும் போதும் மீதிச்சில்லரை கேட்டு வாங்க மறந்து விட்டு வருவது.

வெளியூர் செல்லுமிடத்தில் தன் பிள்ளைகளை ஞாபக மறதியால் விட்டு விட்டு தேடுவது. !

திருமண மற்றும் வீட்டில் நடக்கும் சுப நிகழ்வுக்கு நெருங்கிய சொந்தகளை அல்லது நெருங்கிய நட்புக்களை அழைக்க மறந்து போவது.

இப்படி எத்தனையோ சம்பவங்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஞாபக மறதியால் ஏற்ப்படும் சிறுசிறு சம்பவங்கள்,அசம்பாவிதங்கள் அனைவரது வாழ்விலும் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் இதன் உச்சகட்டமாக ஞாபக சக்தி அறவே இல்லாமல் தொலைத்து விட்டால் நம் வாழ்க்கையின் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்று சற்று சிந்தித்துப்பாருங்கள்.!

இவ்வுலக வாழ்வில் ஒவ்வொருவருக்கும் மிக அவசியமாக ஞாபக சக்தி தேவைப்படுகிறது. சுருக்கமாக சொல்வதானால் இவ்வுலகம் இயங்குவதற்கு மிக அவசியத்தினுள் ஒன்றானது என்றால் அது இந்த ஞாபக சக்தியே.! ஞாபகமென்ற வார்த்தையை மனிதன் பெரும்பொருட்டாக நினைக்காமல் அலட்சியமாக எடுத்துக்கொள்கிறான். ஆனால் மனித சமுதாயத்தின் உறவுமுறைகளை முறையுடன் வாழச்செய்வதில் இந்த ஞாபக சக்தி பெரும் பங்கு வகிக்கிறது. என்று சொன்னால் அது மிகையில்லை.

நம் வாழ்வில் நமக்கு படிப்பினை ஏற்ப்படுத்தி தந்த எத்தனையோ சம்பவங்கள் இன்ப துன்ப நிகழ்வுகள் இருக்கும். அத்தனையும் பொக்கிசமாக ஞாபகம் வைத்து நமது பிற்ச்சன்னதியினருக்கு எடுத்துச் சொன்னால் அவர்களும் விழிப்புணர்வுடன் தனது வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

விஞ்ஞானம் வளர்ச்சியடைந்து மனித வாழ்க்கை இயந்திரவாழ்க்கைக்கு உட்பட்டு எல்லாமே கம்பியூட்டர் மயமாகி நவீன வாழ்க்கை வாழ அடியெடுத்து வைத்து விட்டதால் சிந்திக்கும் ஆற்றல் நம்மிடையே குறைந்து கொண்டிருக்கிறது. நமது மூளையை வேறுவழியில் செலவிட்டுக் கொண்டிருக்கிறோம்.ஆகவே ஞாபக சக்திக்கான மூளைப்பயிற்ச்சி எனும் சிந்தனையைத்தூண்டும் விதத்தில் எண்ணங்களை மனதில் ஏற்றச்செய்து நினைவூட்டிக்கொள்வதை மேற்கொள்ளவேண்டும்.

ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள மூளை நன்று சிந்திக்கும் திறன் பெறவேண்டும். முழுக்க முழுக்க நவீனங்களையே நம்பி வாழாமல் பழமையை நினைவூட்டும் விதமாக புதுமையுடன் கலந்து பொக்கிசமாக பாதுகாத்து வந்தால் ஞாபகசக்தி நம்மிடையே என்றென்றும் நிலைபெறும் பழமை பவுன் போன்றது.[ OLD IS GOLD ]

முடிந்த வரை நமது ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள என்னென்ன வழிமுறைகள் உள்ளனவோ அவை அனைத்தையும் பின்பற்றி ஞாபக சக்தியுடன் திடமான சிந்தனையுடையவர்களாக இருந்து வாழ்க்கைப் பாதையை சரியான வழியில் அமைத்துக்கொள்வோமாக .!

அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.