Friday, September 20, 2013

மீனவர்கள் !



சுனாமிப் பேரலைகள்
சுறா மீனாய் வந்தடித்தும்
கடல் நீரில் இறங்கிடுவர்
கட்டு மரத்தில் மீன் பிடிக்கும்
கடமையுள்ள மீனவர்கள்

சூறாவளிப் புயல் காற்று
சாரல் மழை பொழிந்த போதும்
துணையின்றி புறப்படுவர்
தூண்டிலுடன்
துணிச்சலாய் மீனவர்கள்

கடும்வெள்ளம் கரை புரண்டும்
கணப்பொழுதும் யோசிக்காது
வெகுண்டெழுவர் வீரத்துடன்
விசைப்படகில் மீன் பிடிக்கும்
வீரர்களே மீனவர்கள்

தேசமெல்லாம் திசையறிந்து
தேகமெல்லாம் உலர்ந்த போதும்
பாய் மரக்கப்பலிலே
படுதூரம் பயணிக்கும்
பாட்டாளியே மீனவர்கள்

தங்க மனைவியையும்
தவமிருந்து ஈன்ற குழந்தைகளையும்
தனியாக விட்டு விட்டு
தைரியமாய் சென்றிடுவர்
தன்னம்பிக்கையுடன்
தாய்நாட்டு மீனவர்கள்

இன்ப வாழ்க்கையெல்லாம்
இருட்டினில் கழித்து
துன்பம் போக்க
துணிவாய்ச் செல்லும்
தூயவர் மீனவர்கள்

தன்னுயிரை பணயம் வைத்து
தயங்காது முன்னின்று
கொள்கையிலே தவறாது
குண்டுமழையில் உயிர் நீத்து
வென்றிடுவர் வங்கக் கடலை
வீரமுள்ள தமிழ் மகனாம்
வீரமிகு மீனவர்கள்

கடல் நீரில் கரம் நனைத்து
கடும் உழைப்பில் மீன் பிடிக்க
எதிர் முனையில் வழிப்பறியர்
எதிரிகள் பலர் கண்டு
எதிர் நீச்சல் போட்டு வென்று
தன் மானம் இழக்காமல்
நம் மானம் காப்பவர் தான்
நாம் கண்ட மீனவர்கள்.

நம் நாட்டு வணிகத்தில்
நான்கிலொரு பங்காக
ஏற்றுமதி மீன்வளத்தில்
ஏற்றமிகு லாபம் காண
இராப்பகலாய் உழைத்திட்ட
இயந்திர மனிதர்களே மீனவர்கள்

நாளெல்லாம் கடல் நீரில்
நகர் வலமாய் சுற்றி வந்து
நா ருசிக்கும் கடல்மீனை
நமக்கெல்லாம் தந்தவரை
நகர மக்கள் முதல்
நாட்டு மக்கள் வரை
நன்றியுடன் நினைவோம்
நன்மக்கள் மீனவர்களை...!

அதிரை மெய்சா
 

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.