Monday, June 9, 2014

அன்புள்ள மாணவ மாணவிகளுக்கு !

கல்வி அறிவு என்பது இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் மிக அவசியமானதாகும். அதிகம் படிக்காவிட்டாலும் நாலு எழுத்தையாவது தெரிஞ்சிவச்சிருக்க வேணும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். கல்வி என்பது நம் வாழ்க்கையை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்லும் ஒரு அறிவுப் பொக்கிஷமாகவும், நம் வாழ்க்கையை நல் வழியில் நடத்திச்செல்லும் ஒரு வழிகாட்டியாகவும் உள்ளது. அதை யாராலும் மறுக்க முடியாது.
நாம் கல்விகற்க பாடசாலைக்கு சென்ற பிறகு நல்ல பழக்கவழக்கங்கள், ஒழுக்கமுறைகள், பேச்சுத்திறமை, அறிவுப்பூர்வமான சிந்தனைகள் யாவற்றையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்..அதுவே ஒரு நல்ல மாணவனுக்கு சிறந்த அடையாளமாகும். இதுவே நம் முன்னேற்றத்திற்கு அடித்தளமாகவும் இருக்கிறது.ஒருகாலத்தில் கல்வியின் அருமை தெரியாமல் கசப்பு மருந்து சாப்பிடுவதுபோல கசப்பாகவும் வெறுப்பாகவும் இருந்தது. பள்ளிக் கூடத்திற்கு செல்வதாக சொல்லிவிட்டு கிளாசை கட்டடித்து விட்டு நண்பர்களுடன் ஊர்சுற்றுவதும், முடிந்தால் சினிமா பார்த்துவிட்டு நல்லபிள்ளைபோல வீட்டற்கு செல்வதுமாக பள்ளி நாட்களை வீணடித்தோர் பலருண்டு. .ஆனால் இன்றைய கால இளைஞர்கள் அப்படியல்ல. படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பது பாராட்டிற்குரிய விஷயமாக இருக்கிறது. கல்வி அறிவு பெற்றிருப்பதை கௌரவமாக கருதி படிப்பில் நல்ல ஆர்வம் செலுத்திவருகின்றனர்.தேர்ச்சி மதிப்பெண்னை விட அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெறும் மாணவமாணவிகள் ஒவ்வொரு வருடமும் எண்ணிக்கையில் கூடிக் கொண்டு போவது பெற்றோர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் மனநிறைவையும், மகிழ்வையும் தருகிறது.
முந்தைய காலத்தைவிட இன்றைய காலத்தில் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கிப்பெருகி விட்டன.. அனைத்துப் பள்ளி கல்லூரிகளிலும் மாணவமாணவிகள் நிரம்பி வழிகின்றனர்.இதுவே மாணவமாணவிகள் படிப்பு சதவிகிதம் கூடியதற்கான சாட்சியாக இருக்கிறது.
மேல்நிலை பள்ளியில் படிக்கும்போதே ஒவ்வொரு மாணவமாணவிகளுக்கும் ஒரு குறிக்கோள் மனதில் இருக்க வேண்டும் அதாவது அவரவர் கவனம் திறமை ஆர்வம்,நாட்டம் இவைகளை மையமாகக் கொண்டு நமக்கு எந்தத் துறை பொருத்தமாக இருக்கும் என்பதை பத்தும் வகுப்புக்கு அடியெடுத்து வைக்கும் போதே சரியாக தேர்ந்தெடுத்து அதில் நல்ல கவனம் செலுத்திப்படிக்க வேண்டும். அப்படி ஒருகுறிக்கோளுடன் படித்தால் கல்லூரிப் படிப்பிலும் வெற்றிபெற்று வருங்காலத்தில் அவர்கள் அந்தந்தத்துறையில் பெரிய சாதனையாளர்களாக திகழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை 
மாணவர்கள் ஒருதுறையை தேர்வு செய்யும் முன்பே தனது குடும்ப சூழ்நிலை,பெற்றோர்களின் வசதிவாய்ப்பு,தமது திறமை தகுதி ஆகியவைகளை நன்கு அறிந்து உணர்ந்து தனது தகுதிக்குட்பட்ட துறைகளை தேர்வு செய்து அதில் நாட்டம் கொள்வதே சிறந்ததாகும். நாம் பல கற்பனைகளை செய்து விட்டு அது நிறைவேறாமல் போனால் வேறு துறைகளை எடுத்துப் படிக்க மனம் வெறுப்பாக இருக்கும். அப்படி இஷ்டமில்லாத ஒரு துறையை தேர்வு செய்து படிப்பதால் எதிலும் பிடிமானமில்லாமல் பெயருக்கு படித்ததுபோல இவ்வளவு கஷ்டப்பட்டு படித்தும் . புண்ணியமில்லாமல் போய்விடும். இந்த விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை.
எக்காரணத்தைக் கொண்டும் தனது பெற்றோர்கள் ஆசைப்படுகிறார்கள் என்பதற்காகவும் தனது சக நண்பர்கள் வேறு கல்லூரிக்கு செல்கிறார்கள் என்பதற்காகவும். அந்த குறிப்பிட்ட கல்லூரியில் தான் படிக்கவேண்டும் என்பதற்காகவும் படிக்கக் கூடாது. அப்படியொரு எண்ணத்துடன் படித்தால் நமது குறிக்கோளை அடைய முடியாமல் போய்விடும்.பிறகு மனது விரக்தி அடைந்து படிப்பில் நாட்டமில்லாமல் போய் பள்ளிப் படிப்பில் முதல்நிலையில் இருந்த மாணாக்கள் கல்லூரிப் படிப்பில் பின்தங்கிப்போக நேரிடும். ஆகவே இதை பெற்றோர்களும் நன்கு உணர்ந்து எடுத்துச் சொல்வதுடன் பிள்ளைகள் விருப்பப்படும் துறைகளை தேர்ந்தெடுத்துப்படிக்க சுதந்திரமாக அனுமதிக்க வேண்டும்.
ஆகவே மாணவ மாணவிகளே தாங்கள் கஷ்டப்பட்டு பயின்ற கல்வியும் சிரமத்திற்கிடையே படித்து நல்லமதிப்பெண் பெற்று தேர்வில் வென்று பலரின் பாராட்டுக்களைப் பெற்றது வீண் போய்விடாமல் இருக்க மென்மேலும் தனது படிப்பெனும் பாதையில் பொருத்தமான வழியை தேர்ந்தெடுத்தால் வெற்றி நிச்சயம் அடைவீர்கள்.
அதிரை மெய்சா 

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.