Tuesday, May 15, 2018

புனிதமிகு ரமலானே வருக வருக.

புனிதமிகு ரமலானே வருகவருக
இப்புவி செழிக்க
அருள்மழையை தருக தருக


சுட்டெரிக்கும் வெயில் வந்தும்
சூரியனுக்கே சவால் விட்டு
வெட்டவெளி வெண்திரையை
வெப்பம் வந்து வாட்டியபோதும்
சுடர்விட்டுப் பிறந்திடுமாம்
ரமலான் எனும் புனித மாதம்

எத்திசையும் அருள் மணக்க
பசி வயிற்றை அமல் நிறைக்க
பாவம்பகை விட்டொழித்து
படைத்தவனைப் புகழும் மாதம்

சஹர் உணவில் ருசிமறந்து
இஃப்தாரில் பசிமறந்து
இறையோனை மனதில் சுமந்து
இயலும்வரை தௌபா செய்து
இஸ்லாத்தின் கடமைகளை
இன்முகத்தால் நிறைக்கும் மாதம்

ஏழைஎளிய மக்களுக்கு
ஜகாத் ஸதகா வழங்கும் மாதம்
ஐவேளை தொழுகையுடன்
மெய்வணக்கம் செய்திடும் மாதம்
அள்ளும் பகலும் அவனை நினைத்து
அழுது மன்னிப்புத் தேடும் மாதம்

அருள்மறையாம் இறைவேதம்
இறங்கியதும் இம்மாதம்
ஆசை நபுஸு அடக்கி நாமும்
அகத்தூய்மை கொள்ளும் மாதம்

செய்த்தானை விரட்டியடித்து
செய்த பலாய் நீக்கும் மாதம்
மெய்யறிந்து மேன்மையறிந்து
மேலும் நன்மை சேர்க்கும் மாதம்

துன்பத்தைத் தூரமாக்கி
இன்பத்தை ஏற்கும் மாதம்
தூக்கத்தை தியாகம் செய்து 
தூய வணக்கம் செய்திடும் மாதம் 

புண்ணிய மிக்க ரமலானை
கண்ணியமாய் வரவேற்போம்
எண்ணத்தூய்மை வணக்கம்கொண்டு
எண்ணிலடங்கா அருள்பெறுவோம்
     
                                                              அதிரை மெய்சா
                                 

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.