Wednesday, April 11, 2018

ஆரோக்கிய வாழ்விற்கு அவசியம் தேவை உடற்பயிற்சி.!!!

நாம் உயிர் வாழ உணவு எந்த அளவுக்கு முக்கியமோ அதுபோல நமது உடல் உறுதியுடனும்,வலிமையுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க உடற்பயிற்சி மிக அவசியமாக இருக்கிறது. நவீன இயந்திரங்களும் சாதனங்களும் கண்டுபிடிக்குமுன் மனிதன்  உடல் உழைப்பைத்தான் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ளும்படி இருந்தது.
அப்படி உடல் உழைப்பு அதிகமாக இருந்ததால் உழைப்புடன் சேர்த்து உடலுக்கு பயிற்சியும் கிடைத்தது. எனவே எந்த பெருநோய்களுக்கும் ஆளாகாமல் நம் முன்னோர்கள் ஆரோக்கியத்துடன்  நீண்ட நாள் உயிர் வாழ்ந்தார்கள்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் நவீனக் கண்டுபிடிப்புக்கள் பெருகி எல்லாம் இந்திரமயமாக்கப்பட்டு உடல் உழைப்பு என்பது ஏறக்குறைய நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகிறது என்றே சொல்லலாம். உடல் உழைப்பு இல்லாமல் போனதால்தான் நாம் இன்று பற்பல நோய்களை சந்தித்துக் கொண்டு அற்ப ஆயுளில் சொற்ப வாழ்க்கை வாழ்ந்து மரணத்தை தழுவிக் கொண்டிருக்கிறோம்.

காரணம் வியர்வை வெளியேறும் அளவுக்கு உடல் உழைப்பு இல்லாததால் மனமும், உடலும் சுறுசுறுப்பின்றி சோர்வு நிலையை அடைந்து நமது உடல் உறுப்புக்களின் இயக்கமும் இரத்த ஓட்டமும் சராசரி நிலையிலிருந்து  குறைந்து விடுகிறது. இதனால் எந்த நோயும் நம்மை எளிதில் தாக்கி விடுகிறது. ஆகவே இந்த சூழ்நிலையில்  நமக்கு உடற்பயிற்சி மிக அவசியமானதாக இருக்கிறது.

உடற்பயிற்சி பலவிதமாக நமது வசதிக்கேற்ப செய்து கொள்ளலாம். நமது வீட்டில் அதற்கான இடவசதியும்,பொருளாதார வசதியும் இருந்தால் உடற்பயிற்சிக்கான கருவிகளை வாங்கி வைத்துக் கொண்டு தினமும் குறிப்பிட்ட நேரத்தை இதற்காக ஒதுக்கி உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். அல்லது உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று நமக்கு எந்தவிதமான உடற்பயிற்சி அவசியம் என்பதை தேர்வு செய்து அதனை தினமும் தவறாது செய்து வரலாம். வாக்கிங் என்று அழைக்கப்படும் நடைப் பயிற்சி,ஜாக்கிங் என்றழைக்கப்படும் வேகமில்லா ஓட்டம்,சைக்கிளிங் என்றழைக்கப்படும் இருசக்கர வாகனம் ஓட்டுதல் போன்ற பயிற்சி தினமும் செய்துவந்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். அல்லது குறைந்தபட்சம் காலையும், மாலையும் நடைப் பயிற்சி செய்துவந்தாலே உடலுக்கு ஏற்றமாகவும் புத்துணர்வு தருவதாகவும் இருக்கிறது.

இப்படி ஏதாவது ஒரு ரீதியில் உடற்பயிற்சி செய்து நமது உடலை சுறுசுறுப்புடனும் சீரான இரத்த ஓட்டத்துடனும் வைத்துக் கொண்டோமேயானால் பெருநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதுடன்  ஆரோக்கியமுடன் நீண்டநாள் உயிர்வாழவும் இந்த உடற்பயிற்சி பெரிதும் உதவியாக இருக்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை.

                                                               அதிரை மெய்சா
                                                     

1 comment:

  1. Very Helpful subject and Thank you for your Health Report

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.