Saturday, February 21, 2015

சுத்தம் !

நித்தம் நித்தம்
சுத்தம் வேண்டும்
நெஞ்சினில் என்றும்
நிறைந்திட வேண்டும்


தத்தம் மனதில்
சுத்தமிருந்தால்
பித்தம் தெளிந்து
குற்றம் குறையும்

ஆடையும் உணவும்
ஆரம்பச் சுத்தம்
ஆராய்ந்து பார்த்தால்
அதன் விடை கிட்டும்

பல்லிலும் நாவிலும்
இருந்திடும் சுத்தம்
சொல்லிலும் செயலிலும்
இருக்கணும் நித்தம்

மாதமும் காலமும்
மாறாமல் சுற்றும்
மகத்துவம் நிறைந்திட்ட
இறையோனின் சட்டம்

மேகமும் மழைநீரும்
மேன்மையாய் சுத்தம்
மெல்லிய குரல்வளம்
மெட்டுக்குச் சுத்தம்

கன்னியர் வாழ்வினில்
கறைபடியா சுத்தம்
காலத்தில் அழியாத
கண்ணியத்தின் சொத்தாம்

எண்ணிய எண்ணத்தில்
ஏற்றமாய்ச் சுத்தம்
ஏகபோக வாழ்வுக்கு
என்றுமே உதவும்

சுத்ததிற்க் கீடிணை
யாதுமே இல்லை
சுக இன்பம் பெறுவதும்
சுத்தத்தின் வலிமை

சுத்தங்கள் அனைத்திற்கும்
வித்திட்ட இறையோனை
சோபிக்க அறிந்திடல்
மனிதனின் கடமை

அதிரை மெய்சா 
குறிப்பு : இந்த கவிதை கடந்த [ 20-11-2014 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. கீழே உள்ள காணொளியில் 2.45 வது நிமிடத்தில் வாசிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.