Sunday, November 16, 2014

பணம் படுத்தும்பாடு !?!?

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கை எனும் வாகனத்தை வளமாக ஓட்டிச்செல்ல வேண்டுமாயின் பணம் மிகமிக அவசியமாகத் தேவைப்படுகிறது. அதனால்தான் பணமில்லாதவன் பிணம் என்றும் பணம் பத்தும் செய்யுமென்றும் பணத்தைக் கண்டால் பிணமும் வாய்பிளக்கும் என்றும் பணம் பாதாளம் வரை பாயுமென்றும் இப்படி பணத்தின் அருமைகளைப் பற்றி பலவகையில் நாம் பேசுவதுண்டு.

சொல்லப்போனால் சிலசமயங்களில் பணமே ஒருவனின் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது என்று கூடச் சொல்லலாம். பணம் சாதாரண காகிதத்தில் அச்சிட்டப்பட்டு பார்ப்பதற்கு எளிமையான தோற்றத்தில் இருந்தாலும் இதன் சக்தியும் மதிப்பும் மிகமிக அபாரம் என்றே சொல்லலாம். இந்தப் பணத்தை நேர்வழியில் தேடுவதில் சேகரிப்பதில் பெறுவதில் பெரும் சிரமப்பட வேண்டி யிருக்கிறது. காரணம் இதைக் கணிசமாகதேடி பெரும் செல்வந்தராக வேண்டுமென்றால் கடின உழைப்போ, செய்தொழிலில் முன்னேற்றமோ, அல்லது புத்தியைப் பயன்படுத்தியோ மொத்தத்தில் நேர்வழியில் தேட பல இன்னல்களையும் சிரமங்களையும் சந்திக்க வரவேண்டியுள்ளது.

இத்தனை சிரமத்திற்கு மத்தியில் இப்பணத்தைத் தேட மனமில்லாதோர் நாட்டுச் சட்டத்திற்குப் புறம்பான குறுக்கு வழியைத்தேடி குறுகியகாலத்தில் பெரும் செல்வந்தராகி உல்லாசமாக வாழ முயற்ச்சிக்கிறார்கள்.இத்தகைய எண்ணம் உள்ளோர் திருட்டு,மோசடி,அபகரித்தல்,லஞ்சம், ரௌடீசியம், கடத்தல்,தேசவிரோத செயலென தனக்கு செயல்படுத்த முடிந்த தவறான வழிகளைப் பயன்படுத்தி பணம் சேர்க்க முற்ப்படுகிறார்கள்.இன்னும் சிலர் கிடைக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்தி பலவித மோசடி உத்திகளையும் கையாண்டு குறுகிய காலத்திலேயே பெரும் பணத்திற்கு சொந்தக்காரர்களாகி விட ஆசைப்படுகிறார்கள்.

ஆனால் இப்படித்தேடும் பணத்தால் நிச்சயமாக நிம்மதி ஒருபோதும் இருக்கப் போவதில்லை. எப்போதும் பயத்தையும் சேர்த்து அணைத்துக் கொண்டே தூங்கும்படித்தான் இருக்கும். அது மட்டுமல்ல சட்ட விரோதமாக சேர்த்த இப்பணத்திற்கு பாதுகாப்பு இல்லாமல் எந்நேரமும் அரசு பறிமுதல் செய்துகொள்ளும் அல்லது எந்நேரமும் குட்டு வெளிப்பட்டுப் போய்விடும் என்கிற எதிர்பார்ப்புடன்தான் வாழ் நாளைக்கழிக்க வேண்டியதாக இருக்கும்.

மனிதனின் நம்பிக்கையின் அடிப்படையில் பார்ப்போமேயானால் இப்படி அடுத்தவர்களுடைய வயிற்றெரிச்சலில் கிடைத்தபணத்தில் யாரும் நீண்டநாள் நிம்மதியுடன் வாழ்ந்ததாக சரித்திரமில்லை.மாறாக பணத்தையும் பொருளையும் இழந்தவர்களுடைய சாபத்திற்கு ஆளாகி வாழ்நாள் முழுதும் அடுத்தவர்களை ஏமாற்றிவிட்டோம் என்கிற மன உளைச்சல் ஒருபக்கமும் அவமானம் ஒருபக்கமும் குற்ற உணர்வு ஒருபக்கமுமாக மாறிமாறி மனதில் தோன்றி நிம்மதி இழக்க வைத்து விடும்.

நேர்வழியில் சம்பாரித்து முறையான கணக்குகளை அரசுக்குக் காண்பித்து வருபவர்களுடைய தைரியமும், சந்தோசமான வாழ்க்கையும் சட்டவிரோதமாக பணத்தைத் தேடியவர்களிடம் ஒருபோதும் இருக்க வாய்ப்பில்லை.வெளிப் பார்வைக்கு தாம் உயர்ந்தவராகக் காட்டிக் கொண்டாலும் உள்மனதில் தாழ்வுமனப்பான்மையுடன் உள்ளம் நிம்மதியிழந்து மனசாட்சி குற்ற உணர்வுடன் குத்திக் கொண்டுதான் இருக்கும்.இதுவே மனிதப்பிறவியின் நிதர்சன உண்மையாகும்.

போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்று சொல்வதைப் போல ஆசைகளை அடக்கி நேர்வழியில் ஈட்டிய செல்வத்தைக் கொண்டு நிம்மதியுடன் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளவேண்டும். மாறாக பேராசைப்படுவதால் பிறகு பெரும் நஷ்டத்தையே சந்திக்கும்படி இருக்குமென்பதை நாம் உணரவேண்டும்.

தவறான வழியில் பணத்தையும் சொத்தையும் சேகரித்து சந்தோசத்தையும் அமைதியையும் இழந்து நிற்ப்பதைவிட நேர்வழியில் சம்பாரித்த போதுமான பணத்தில் நிம்மதியுடன் வாழ்வதே மேலான வாழ்க்கையாகும்.ஆகவே யாரொருவர் பணத்திற்கு முழுக்க முழுக்க அடிமையாகி விடாமல் போதுமான பணத்தை நேர்வழியில் சம்பாரித்து தம் வாழ்க்கையை மகிழ்வுடன் வாழக் கற்றுக் கொள்கிறார்களோ அவர்களை பணம் ஒருபோதும் பாடுபடுத்துவதில்லை என்பது இதிலிருந்து நமக்குப் புலப்படுவதை நன்கு அறிந்து கொள்வோமாக...!!!!
அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.