Saturday, November 1, 2014

திறமை !...

தனக்கெனத் தனித்துவம்
தாமறிந்த மகத்துவம்
தரணி போற்றிப்புகழ்ந்திட
தாங்கிநிற்கும் திறமையாய்


மனக்கணக்கில் வெல்பவரும்
மதியைச் சீராய் கொள்பவரும்
பணப்பையை நிரப்புபவரும்
பாதுகாப்பாய் வாழ்பவரும்
பார்போற்றும் திறமையரே

எண்ணற்ற திறமைகள்
கண்ணற்று இருட்டினில்
எளியோரின் திறமைகள்
ஏங்கிக்கிடக்கும் உள்மனதில்

மனிதனின் திறமையை
மரித்தபின்னும் பேசுவர்
மக்களின் மனதினில்
மாறாது இடம்பெறுவர்

திறமைகள் யாதுமே
தீர்க்கமாய் நிலைகொள்ளும்
தூரத்து நிலவொளியாய்
தொடர்ந்திடும் நிழல்போல

திறமையில் பல உண்டு
தீங்கிழைப்பது நலமன்று
குணங்களிலும் சிறந்ததுண்டு
கூடா நட்பு திறமையன்று

பஞ்சம்பசி போக்குவதும்
பகையோர் பணிய பேசுவதும்
நெஞ்சம் நிறைந்து நிற்பதும்
நிம்மதியாய் மக்கள் வாழ்வதும்
அரசின் திறமை இதுவன்றோ
அறிந்திடல் சாலச் சிறந்ததன்றோ

திறமைக்கு மதிப்புண்டு
திண்ணமாய் விலையுண்டு
அனைவருக்கும் திறமையுண்டு
அவரவர்கள் அறிவது நன்று

அதிரை மெய்சா

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 30-10-2014 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. இந்த கவிதை கானொளியில் 0.48 வது  நிமிடத்தில் வாசிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.