Monday, September 15, 2014

கவனம் ! வாலிபப்பருவம் !?

நாம் இவ்வுலக வாழ்க்கையில் மூன்றுவித பருவமாற்றங்களை சந்திக்கவேண்டியுள்ளது.அது குழந்தைப் பருவம்.இளமைப் பருவம், முதுமைப் பருவமாகும்.

இம்மூன்று பருவத்திலும் மிக முக்கியமான பருவமாக வாலிபப்பருவம் இருக்கிறது.. இவ்வாலிபப்பருவத்தின் ஆரம்பநிலையை மிகக் கவனமுடன் கடந்து செல்லவேண்டியதாக இருக்கிறது. இப்பருவம் மனிதனது வாழ்வின் நல்வழியையும் தீயவழியையும் தேர்ந்தெடுக்கும் மிகப்பெரும் திருப்புமுனையாக இருக்கிறது.இந்த ஆரம்பநிலை வாலிபப்பருவத்தை ஒருமனிதன் எவ்வித கலங்கமுமின்றி கடந்து வந்து விட்டானேயானால் அம்மனிதன் இவ்வுலகவாழ்வில் அனைத்திலும் மிகத் தூய்மையானவனாக வெற்றிபெற்றவனாக ஆகிவிட அதிக வாய்ப்பு உள்ளது. காரணம் இப்பருவத்தைக் கடக்கும்போது மனதுடன் நிறைய போராட வேண்டி உள்ளது. மனதில் உள்ள கட்டுப்பாட்டை இப்பருவத்தைக் கடக்கும்வரை பலமாக பிடித்து நிறுத்திவைக்கவேண்டியதாக இருக்கிறது.

வாலிபப்பருவத்தின் ஆரம்பகட்டத்தில் எதிலும் அனுபவமில்லாத காரணத்தினால் எதையும் பெரும் பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் அலட்ச்சியமாக பொறுப்பில்லாமல் விளையாட்டாக நடந்து கொள்ளும் பருவமாக இருக்கிறது. ஆனால் இதன் பின்விளைவுகளை அனுபவப்பட்ட பின்னரே அறிந்து கொள்வார்கள்.

இப்பருவத்தை அடையும்போது பொறுமை,தன்னம்பிக்கை, கட்டுப்பாடு,நிதானமாய் யோசித்து செயல்படுதல்,கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுதல், ஆகியவைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும். தன்னம்பிக்கை இருந்திடல் வேண்டும். தாழ்வுமனப்பான்மை ஒருபோதும் இருந்திடல் கூடாது. காரணம் இப்பருவத்தில் எந்தஒரு பிரச்சினைக்கும் தீர்க்கமாக முடிவெடுக்கத் தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.சின்னச்சின்ன விசயங்களுக்கெல்லாம் விபரீத முடிவுகளை எடுக்கத்தூண்டும்பருவமிது. அதன் விளைவாக மனநோயாளியாக அல்லது தற்கொலை போன்ற கோழைத்தனமான வாழ்க்கையை நாசம் செய்யும் செயலைச்செய்யத்தூண்டும்.அப்படி சின்னச்சின்ன விசயங்களுக்கெல்லாம் பின்விளைவுகளை கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்காமல் தற்கொலை எனும் கோழைத்தனமான முடிவை சிலர் அவசரப்பட்டு எடுத்து கொண்டு வாழ்க்கையை துவங்கப்போகும் சொற்ப்பவயதில் மாய்த்துக்கொள்வது வேதனையளிக்கக் கூடிய விசயமாக இருக்கிறது. இந்தக் கோழைத்தனமான போக்கிற்கு மனதில் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. மனதுடன் போராடியே ஜெயிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

இப்பருவத்தில் கண்மூடித்தனமாக பழகும் நட்புக்களும் நம்மை வழிகேடலுக்கு உந்தல் சக்தியாக இருந்து நம் வாழ்வை சீரழித்து விடும். விளையாட்டாகச் செய்யும் தீயசெயலும், சட்டவிரோத செயலும் வினையாகிப்போய் தன் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடும். ஆகவே நண்பர்கள் விசயத்தில் கவனமுடன் பழகுவது நல்லது.பெரும்பாலும் இப்பருவத்தில் பழகும் நண்பர்களைப் பொறுத்து தான் நம் வருங்கால வாழ்க்கையும் தீர்மானிக்கப்படுகிறது. சமுதாயம் நம்மை விரும்புவதும் வெறுப்பதும் நாம் பழக்கம் வைத்துக் கொள்ளும் நட்புக்களைப் பொருத்துதான் இருக்கிறது.ஆகவே நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்தல் மிக அவசியமாகிறது.

அடுத்து பார்ப்போமேயானால் ஆணாகினும் பெண்ணாகினும் இப்பருவவயதில் யார் தம்மீது அனுதாபப்படுகிறார்களோ, அன்பாக, பாசமாக, நேசமாக,அக்கறையாக கவனம் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்கள் யாரென்று யோசிக்காமல் கவனம் அவர்களின் பக்கம் திரும்பும். அப்படி அக்கறை எடுத்துக் கொள்பவர்கள் தனது அறியாமையை பயன்படுத்தி ஆசையை நிறைவேற்றிக் கொள்பவராக இருக்கலாம். அல்லது அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்பவராக இருக்கலாம். அல்லது தீய வழிகளில் இழுத்துச் செல்லலாம்.இச்சூழ்நிலையில் மனம் போன போக்கில் போய்விடாமல் தனது சுயகட்டுப்பாடுடன் தனது வருங்காலத்தையும் குடும்ப சூழ்நிலையையும், பெற்றோர்களையும், மனக்கண்முன் நிறுத்தி நன்கு யோசித்து முடிவெடுக்க வேண்டும். இப்படி பாசம் காட்டுபவர் ஒரு வாலிபனிடத்தில் வாலிபமங்கையோ அல்லது வாலிபமங்கையிடத்தில் ஒருவாலிபனாக இருக்கும் பட்சத்தில் இந்தமாதிரியான உறiவுகளை தவிர்த்துக் கொள்வதே நலமாகும்.

அதிகபட்சம் இப்பருவத்தில் ஏற்ப்படும் ஆண் பெண் நட்புக்கள் அன்பு,அனுதாபம் என்கிற போர்வையில் பருவக்கோளாரின் காரணமாக ஏற்ப்படும் பரிதாப ஆசைகளாகும். எந்தமாதிரியான மனஇச்சைக்கும் இடமளிக்காமல் நடந்து கொள்வதே ஒரு வாலிபப்பருவத்தினரின் மனக்கட்டுப்பாட்டின் உறுதியை நிலைபடுத்திக் காட்டுகிறது.

தோளுக்கு உயர்ந்துவிட்டால் தோழன் என்றொரு பழமொழி சொல்லிற்க்கேற்ப தோழமை உணர்வுடன் இத்தருணத்தில் பெற்றோர்களும், உறவினர்களும் பழக வேண்டும்.இப்பருவத்தை தொடும் வாலிபர்களிடம் அன்புகாட்டி அரவணைத்து நடந்து கொள்ள வேண்டும். நல்லுபதேசங்களை மறைமுகமாக வழங்கவேண்டும்.கண்டிப்பு என்கிற பெயரில் தண்டித்து கடுஞ்ச்சொற்களை ஒருபோதும் பிரயோகப்படுத்திடல் கூடாது. இப்படி நடந்து கொள்வதால் வேற்றுமனிதர்களின் அன்பிற்கும், வழிகேடலான இன்பவார்த்தைகளுக்கும் ஒருபோதும் மயங்கிட மாட்டார்கள். அடிபணியமாட்டார்கள்.

ஆகவே ஒவ்வொரு வாலிபர்களும் இதை உணர்ந்து வாலிபப்பருவத்தை நல்வழியில் பயன்படுத்தி இவ்வுலகில் பிறந்ததற்கான அர்த்தத்தை அர்த்தமுடன் வாழ்ந்து காட்டவேண்டும். இப்பருவத்தில் ஏற்ப்படும் அனைத்து தடங்கள்களையும்,சோதனைகளையும் பொறுமையுடன் கையாண்டு மனக்கட்டுப்பாட்டுடன் நல்வழியில் பயணித்து யாதொரு கலங்கமுமில்லாமல் கடந்து வந்து விட்டாரேயானால் அவர்களது வருங்கால வாழ்க்கை நிச்சயமாக வளமுடன் இனிமையாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
அதிரை மெய்சா 

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.