Friday, August 1, 2014

கதியற்றோர் வாழ்வு ?

சொந்த மண்ணில் தஞ்சமாகி
சோகமதைச் சொந்தமாக்கி
மதியிழந்து நிற்கதியாய்
மாறியதோ உந்தன் வாழ்வு

நெஞ்சு பதைக்கும் நீங்கா நிகழ்வு
எஞ்சியிருக்கும் நிழலாய்த் தொடர
பந்தங்கள் பட்டினியால்
பரவிக்கிடக்குது அகதிகளாய்
கெதியற்றுப்போயினரே
கதியற்ற வாழ்க்கையாக

ஈழப்பிறவிகள் ஈனப்பிறவிகளாய்
இன்னலுற்று இடம்பெயர்ந்து
அனுதினமும் அவல வாழ்வில்
அகதியெனும் முத்திரையில்
அவலங்கள் என்று மறையும்
துயரங்கள் என்று தீரும்

வெளிர்ந்திருந்த வெண்மண்ணில்
விஷச்செடிகள் துளிர் விட்டு
கன்னியரைக் கந்தையாக்கி
கயவர்கள் சூறையாட
செங்குருதி ரணவடுக்கள்
சொல்லுமிந்தச் சோகத்தை
கதியற்றான் கதையைத்தான்

முல்லிவாய்க்கால் மரண ஓலம்
முழங்கியதே உலகமெங்கும்
துடித்ததுதான் ரத்தநாளம்
துயருற்றனவே எங்கள் இதயம்
அத்தனையும் அரைநொடியில்
அடங்கியதே அனைத்துயிரும்
தொடங்கியதே எஞ்சிய உயிர்கள்
துயருடன் கதியற்றோறாய்

சுய விலாசம் தொலைத்தவராய்
சகலமும் இழந்தவராய்
அகதியெனும் முகவரியில்
அகிலத்தை வளம் வந்து
திக்குத்தெரியா கானகத்தில்
திசை மாறித்தான் போயினரே
மகிழ்வைத்தான் இழந்தனரே

நிலைமாறித் தடுமாறி
நிர்க்கதியாய் நம் மக்கள்
நடைபிணமாய் ஆயினரே
நாதியற்றுப் போயினரே

முடிவுற்றும் முடிவுறாநிலையில்
இன்று முகம்மதியரை குறிவைத்து
கருவறுக்கும் ஈனச்செயல்
தொடங்கிற்றே தோரணையாய்

அதுமட்டுமா அவலநிலை
தொடர்கிறது இவ்வுலகில்
காஸாவின் ரோஜாக்கள்
கசங்கிடுதே நாள்தோறும்

சிரியாவும் சீர்கெட்டு
சிதைந்தனவே கிளர்ச்சிகளால்
போராளி எதிர்கொள்ளும்
போராட்டம் இதுவன்றோ

பர்மாவிலும் பரிதாபம்
பாவிகளின் அட்டூழியம்
கொடூரக் கொலைகள் கேட்டு
கொதிக்கிறதே இதயம் கனத்து

அனுதினமும் பிணக்குவியல்
ஆங்காங்கே குண்டுமழை
இத்தனைக்கும் இரக்கமில்லை
இவர்கள் என்றும் மனிதரில்லை

பிணம் புசிக்கும் கூட்டம் ஒன்று
இனம் பிரித்து கொல்கிறதே
மனம் கனத்து மடிகிறதே
மகிழ்வு தொலைத்து நிற்கிறதே

என்று ஒழியும் இக்கயவர்களின் ஆட்டம்
என்று தணியும் இம்மக்களின் தாகம்
என்று ஓய்ந்திடும் இம்மக்களின் போராட்டம்
என்று மறையும் இக்கதியற்றோர் துயரம்

அதிரை மெய்சா 

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.