Tuesday, July 1, 2014

மறைந்து வரும் வாடகை சைக்கிள் ! [ ஒரு நினைவூட்டல் ]

வாகன வசதிகள் குறைவாக இருந்த அன்றைய காலகட்டத்தில் பெருநகர் முதல் சிற்றூர்பகுதிகள் வரை சுமார் 25, 30 ஆண்டுகளுக்கு முன் வாடகை சைக்கிள் தான் அனைவருக்கும் மிகவும் பிரதான வாகனமாக கைகொடுத்தது. அன்றைய சூழ்நிலையில் சொந்தமாக சைக்கிள் வைத்திருப்பது என்பது பெருமைப்பட்டுச் சொல்லும் அளவுக்கு ஒருவாகனமாக இருந்தது. காரணம் அப்போது வசதி படைத்த ஒருசிலரிடத்தில் மட்டுமே சைக்கிள் சொந்தமாக இருக்கும்.அடுத்துசொல்வதானால் ஆசிரியர்கள் அரசு அதிகாரிகள் அலுவலகப்பணியாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் சொந்தமாக சைக்கிள் வைத்திருப்பார்கள்.

அன்றைய காலத்தில் பிற உயர்தர வாகனமாக கருதப்பட்ட மோட்டர் சைக்கிள் கார் போன்ற வாகனங்கள் ஒருசில மிகவசதி படைத்தவர்களிடத்தில் மட்டுமே அரிதாக இருந்தது..

அந்தகாலகட்டத்தில் பெரும்பாலும் வீதிகளிலும், தெருப்பகுதிகளிலும் வாடகை சைக்கிள் தான் மிகுதியாய் தென்படும். மற்ற வியாபாரக் கடைகளுக்கு நிகராக வாடகை சைக்கிள் கம்பெனிகளும் நகர்பகுதி முழுதும் நிறைந்து காணப்பட்டன. வாடகை சைக்கிள் தொழில் அன்று நல்ல வருமானம் ஈட்டித்தரக்கூடிய தொழிலாகவும் இருந்தது. ஒவ்வொரு சைக்கிள்கடை வாசலிலும் சுமார் 10 முதல் 20,30 சைக்கிள்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும். முழுவண்டி என்று சொல்லப்படும் பெரிய சைக்கிள் மட்டுமல்லாது சிறுவர்கள் ஒட்டுவதற்க்கென 1/4 வண்டி,1/2வண்டி,3/4வண்டியென அளவு வாரியாக சைக்கிள் வாடகைக்கு வைத்திருப்பார்கள். வரிசையாய் அந்த அந்தக் கடைகளின் பெயர் எழுதப்பட்ட சைக்கிள்களை நிறுத்தி வைத்திருப்பதை பார்க்க அழகாகவும் கடைத்தெருப் பகுதி கலகலப்பாகவும் இருக்கும்.

ஒருசில கடைகளில் நாள் வாடகைக்கு வண்டி கிடையாது என்றும் சிமிண்ட் மற்றும் மீன் லோடு ஏற்ற வண்டிகிடையாது என்கிற அறிவிப்புப் பலகையும் எழுதி வைத்திருப்பார்கள்.

சிறுவர்கள் முதன்முதலில் சைக்கிள் ஓட்டிப்பழகுவதற்காக அரைவண்டி என்று சொல்லப்படும் சிறிய அளவு சைக்கிளை வாடகைக்கு எடுப்பதற்காக ஒவ்வொரு சைக்கிள் கடை வாசலிலும் சிறுவர்கள் பட்டாளங்களாய் சைக்கிள் வரும்வரை காத்துக் கொண்டு நிற்ப்பார்கள். அந்த அளவுக்கு சிறிய வண்டிகள் வாடகைக்கு ரொம்ப கிராக்கியாக இருக்கும்.பகல் மற்றும் மாலைப் பொழுதில் அருகில் உள்ள மைதானங்களில் சைக்கிள் ஓட்டிப் பழகிக் கொண்டிருப்பதை பார்க்க வேடிக்கையாகவும், பரிதாபமாகவும் ரசிக்கும்படியும் இருக்கும். தினமும் சைக்கிள் எடுத்து ஓட்டிப் பழகுவதால் இறுதியில் தன்னம்பிக்கையுடன் வெற்றிபெற்று சந்தோசம் அடைவார்கள். சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டது ஏதோ வீர சாகசம் தெரிந்து கொண்டது போல பெருமைப்பட்டுச்சொல்லிக் கொள்வார்கள்.

சைக்கிளின் மோகம் நிறைந்த அந்த காலகட்டத்தில் நம்வீட்டுக்கு விருந்தாளிகள் யாராவது சைக்கிள் கொண்டுவந்தாலும் சிறுவர்கள் அதையும் விட்டுவைக்காது எடுத்து ஒட்டி மகிழ்வர்

சைக்கிள் பிற வாகனங்களைப் போல போக்குவரத்திற்க்காகவும்,பிறபயன்பாட்டிற்காகவும் மட்டுமல்லாது ஒருகல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல சைக்கிள் ஓட்டுவது உடலுக்கு சிறந்த உடற்ப்பயிற்சியாகவும், சுறுசுறுப்பும் ,உடல் ஆரோக்கியமும் பெருகுகிறது. சைக்கிள் அதிகப் புழக்கத்தில் இருந்தகாலத்தில் ஊர்ப்பகுதிகள் மாசுபடியாது இருந்தது. சைக்கிள் ஒட்டுவதால் உடல் ஆரோக்கியம் பெற்று பெருநோய்கள் குறைவாக இருந்தது. குறிப்பாக சாலை விபத்துக்கள், உயிரிழப்புக்கள் மிகக்குறைவாக இருந்தது.

அன்றைய காலத்தில் அக்கம்பக்கம் ஊர்களுக்கு விஷேச காரியங்களுக்கு செல்வதற்கும் நண்பர்களுடன் சினிமா பார்க்க செல்வதற்கும் ஒரு சைக்கிளில் இரண்டு மூன்று பேரென போவார்கள். டபுள்ஸ் என்று சொல்லும் பின் சீட்டில் அமர்ந்தபடி இருவர் மிதித்து போவதில் தனி சுகமான பயணமாக ஜாலியாக இருக்கும். இதை அனுபவிக்காதவர்கள் அன்றைய காலத்தார் யாரும் இருக்கமாட்டார்கள்.

இன்றைய காலத்தில் சைக்கிள் வாகனம் கணிசமாக குறைந்து பல விதவிதமான இருசக்கர வாகனங்கள், மொட்டோர்சைக்கிள்கள், கார்கள் என கிராமப்பகுதிகளையும் விட்டுவைக்காது பல்கிப்பெருத்து விட்டன.எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் நாளுக்குநாள் கூடிவிட்டதால் அதிலிருந்து வெளியாகும் வாகனப்புகையால் நகர் முழுதும் மாசுபடியத் தொடங்கி விட்டன. விபத்துக்களும் உயிரிழப்புக்களும் கூடிவிட்டன.கணக்கில்லாமல் பலரக வாகனங்களும் பல்கிப்பெருத்து சைக்கிளின் பெல் ஒலிச்சப்தம் சாலைகளை விட்டு மறைந்து எரிச்சலையும், பயத்தையும் ஏற்ப்படுத்தும் வாகனம் எழுப்பும் ஒலிச்சப்தத்தை கேட்டு அதிர்ச்சியும் மன உளைச்சலும் தான் ஏற்படுகிறது.

எது எப்படியோ விஞ்ஞானம் வளர்ச்சிபெற்று பல்வேறு நவீனவாகனங்கள் கண்டுபிடிப்பாலும், வணிக வர்த்தகம் இன்னும்பல நவீனங்களின் பக்கம் மனிதன் சென்று பணவசதிகளை ஏற்படுத்திக் கொண்டதாலும் மனிதனின் அசுர வேக வாழ்க்கைச் சூழலில் தவிர்க்க முடியாத தேவைகள் அதிகரித்துவிட்டதாலும் எரிபொருளில் வேகமாக இயங்கும் வாகனத்தேவை அவசியமாகி விட்டது. ஆகவே வாடகைக்கு சைக்கிள் எடுத்து ஓட்டுபவரின் எண்ணிக்கையும் கணிசமாக  குறைந்து விட்டது.

எத்தனையோ விதவிதமான வாகனங்கள் அறிமுகமாகிக் கொண்டு இருந்தாலும் இன்றுவரை ஒரு சிலர் வாடகைக்கு சைக்கிள் எடுத்து அதையே தனது பிரதான வாகனமாக ஓட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதுவே இன்றுவரையிலும் வாடகை சைக்கிள் கம்பெனி வைத்து நடத்துபவர்களுக்கு சற்று ஆறுதலான விசயமாக உள்ளது.

அதிரை மெய்சா 

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.