Wednesday, February 5, 2014

காணாமல் போன தெரு விளையாட்டு !?


முன்பொரு காலத்தில் நம்நாட்டின் சிற்றூரிலிருந்து பெருநகரம் வரை தெருப்பகுதிகளில் இருக்கும் காலி இடங்களிலும் தெருமுனைகளிலும், சந்துகளிலும், தெருவீதிகளிலும் காலைபொழுதினிலும், மாலை பொழுது இரவு நேரம் வரை இளைஞர்கள், சிறுவர்கள், சிறுமியர்கள் படை சூழ கபடி, சில்லு விளையாட்டு, வட்டக் கோடு, கிளித்தட்டு, கோலி விளையாட்டு, லாக்குவிளையாட்டு, கில்லி விளையாட்டு, தொட்டு விளையாட்டு, கண்டுவிளையாட்டு ஒளிந்து விளையாடுதல் {கொக்கரக்கோ} ,கண்ணாமூச்சி விளையாட்டு, பாண்டி விளையாட்டு பம்பரவிளையாட்டு, எறிப்பந்து என இப்படி இன்னும் பல எண்ணிலடங்கா வகைவகையான விளையாட்டுக்கள் ஒவ்வொரு ஊர்ப்பகுதிகளிலும் விதவிதமாக விளையாடிக் கொண்டு இருப்பார்கள். தெரு வீதிகளெல்லாம் விளையாட்டுச் சப்தத்தில் ஒரே கூச்சலும் கும்மாளமுமாக கலகலப்பாக இருக்கும். பார்க்க சந்தோசமாக இருக்கும்.

இத்தகைய விளையாட்டுக்கள் விளையாடிய காலத்தில் உடல் வலிமையாகவும், மனதிற்கு புத்துணர்வு,உற்ச்சாகம், சுறுறுப்பு என அனைத்திலும் வலிமையுடன் ஆரோக்கியமுடன் இருந்தார்கள். அப்போது சிறுவயதில் நோய்வாய்பட்டு இறப்போர் எண்ணிக்கை அரிதாகவே இருந்தது. முதுமை எய்தியே அதிகமாக மரணிப்பார்கள்.இன்னும் சொல்லப் போனால் நாம் இன்றைய காலத்தில் கேள்விப்படும் புதுப்புதுவகை நோய்களும் அன்று இருந்ததில்லை.. காரணம் கலப்படமற்ற உணவுதானியங்கள் கள்ளம்கபடமற்ற மனசு, மனஉளைச்சல் இல்லா வாழ்க்கை அத்துடன் ஆரோக்கியமான விளையாட்டும் இருந்தன. காசுபணம் அதிகமாக இல்லாவிட்டாலும், இருப்பதைக்கொண்டு சந்தோசமான வாழ்க்கை இப்படி அனைத்தும் அன்று நிரம்பியிருந்தன.. அதனால் தான் நூறு வயதைத்தாண்டியும் ஆரோக்கியத்துடனும்,சுறுசுறுப்புடனும் நீண்ட ஆயுளுடன் நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள்.

ஆனால் இன்றைய நிலையோ தலைகீழாக மாறிப் போய்விட்டன. விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சியில் நவீனங்கள் தலை தூக்கியதால் நமது உடலுக்கு வலிமையூட்டிய பாராம்பரிய விளையாட்டுக்களும் மலையேறி மறையத் தொடங்கி விட்டன.அன்று நாம் தெரு வீதிகளில் கேட்ட விளையாட்டுச் சப்தம் ஓய்ந்து போய் இன்று வாகனங்கள் பல்கிப்பெருகி வாகனங்களின் இரைச்சல் சப்தம் தான் கேட்கிறது. விளையாட்டுச்சப்தங்கள் விளையாட்டுக்குக்கூட கேட்க முடியாத அளவுக்கு ஓடி ஒளிந்து விட்டன.எங்கு பார்த்தாலும் செல்போன்,ஐ போன், ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்டு போன் ஒலியும், டி வி சப்தமும், கம்பியூட்டர் மௌசின் சிணுங்களும், டேப்ளேட்டின் கேம் விளையாட்டு இரைச்சலுமாகத்தான் கேட்கிறது.வீட்டுக்குள்ளிருந்தே உலகைப் பார்க்கும் அனைத்து நவீனங்களும் வந்து விட்டன. ஐந்து வயதுப் பிள்ளைக்கு கூடஎல்லா நவீனங்களும் அத்துபடியாகி விட்டது.

அன்றைய காலத்துப் பழைய விளையாட்டுக்கள் கொஞ்சம்கொஞ்சமாக மறைந்து வருவதால் மனிதருக்குள் இருக்கும் நெருக்கம் கூட தூரமாகிச் சென்று கொண்டிருக்கிறது. வீட்டுக்குள்ளேயே வீடியோ கேம் விளையாடிக் கொண்டு நேரத்தைப் போக்கி விடுகின்றனர். சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய வயதில் சோம்பலாகிப் போய் விடுகின்றனர். வெளியுலகம் துண்டிக்கப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்து. மன விரக்தியில் தற்க்கொலை போன்ற எண்ணங்கள் தூண்டப்படுவதற்குக் கூட காரணமாக இருக்கிறது.

தெருவிளையாட்டில் கிடைத்த சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் இப்போதுள்ள இளைஞர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. காரணம் அன்று நாமும் ஏதாவது சாதிக்க வேண்டுமென்ற நாட்டமும் தன்னம்பிக்கையும்,முயற்ச்சியும் இருந்தது.தெரு விளையாட்டுக்களில் நடத்தப்படும் சிறு சிறு போட்டிகளின் காரணத்தினால் கூட ஆர்வம் ஏற்ப்பட்டு மேலும் தன்னை ஒரு நல்ல விளையாட்டு வீரனாக வளர்த்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் மனதினில் உதிக்க வாய்ப்பாக இருந்தன. அதுவே அடித்தளமாக அமைந்து வருங்கால விளையாட்டு வீரனாக உருவாக்க வழிவகுத்தன.
காலசுழற்ச்சியில் காணாமல் போய்க் கொண்டிருக்கும் தெரு விளையாட்டுக்கள் எட்டாக்கனியாகி விட்டதை நினைக்கும் போது ஏக்கமாகத்தான் உள்ளது. அந்த ஒட்டுமொத்த விளையாட்டுக்களையும் விண்ணுயர வளர்ந்திட்ட விஞ்ஞானம் தன் கையிலடக்கி நம்மை வேறு விதத்தில் ஆதிக்கம் செய்யத் துவங்கி விட்டன. .

இப்படிக் காலாகாலமாக நம் வாழ்வோடு ஒட்டியிருந்து உடல் ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும் தந்துவிட்டு இப்போது நவீனங்களைக் கண்டதும் ஓடிமறைந்து கொண்டிருக்கும் தெரு விளையாட்டுக்கள் மீண்டும் உயிர்த்தெழுவது எப்போது.!?!?!

அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.