Sunday, February 16, 2014

மரணம் !?


உடலோடு உறவாடி
உயிரோடு விளையாடி
உலகாளும் மரணமன்றோ-உயிரை
உணவாக்கிச் சுவைத்திடுமே


நிகழ்வாகிக் கனவாகி
நினைவுகளை நிழலாக்கி
நிம்மதியை கொடுத்திடுமோ
நிற்கதியாய் ஆக்கிடுமோ

கண்ணுக்கு விருந்தாகி
காணும் பல காட்சியாகி
மண்ணுக்கு உரமாகி - உடல்
மக்கியதோ மரணமாகி

மரணத்தின் பிடியினிலே
மறைந்திருக்கும் நம்வாழ்வு- தக்க
தருணத்தில் வந்தணைக்கும்
தரணியெங்கும் நிலைத்திருக்கும்

ஜெகத்தினை அழித்திடவே
அகத்தினில் மறைந்து வாழும்
யுகத்தினில் நாம் காணும்
மகத்துவம் நிறைந்ததாகும்

உள்ளுக்குள் ஒளிந்திருக்கும்
உயிரறுக்கக் காத்திருக்கும்
கல்லுக்குள் தேரையாய்
காலம் முழுதும்
கடமையைச் செய்யும்

சாதியில்லை பேதமில்லை
சமத்துவமே மரணத்தின் கொள்கை
நாழிகையில் நசுக்கிவிடும்
நம்முயிரைப் பறித்துவிடும்

தோற்றத்தில் துயர் நிகழவாய்
மாற்றத்தை ஏற்படுத்தும்
தோள்சுமந்து செல்பவரும்
நாள் சுமந்து செல்வாரே

மண்ணறையில் இடமளித்து
மறுவாழ்வுக்கு வழிவகுக்கும்
மாறுபட்டு மரணிக்கும்
மனிதனை அங்கே சபித்துவிடும்

ஊராரும் உறவாரும்
உறங்காமல் பாதுகாத்தும்
உயிர்பிரிக்க நேரம் காத்து
உடல் பிரித்து மரணம் வெல்லும்

மரணத்தின் பிடியினிலே
மனிதனவன் சிக்குமுன்னே
தருணத்தில் செய்யும் அமல்
தாங்கிவரும் சுவனம் வரை
அதிரை மெய்சா

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 06-02-2014 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது

2 comments:

  1. மரணத்தின் தன்மைகளையும் அதன் நிதர்சனத்தையும் செறிவான சிந்தனையாக செதுக்கியிருக்கிறாய்.
    முன் எழுத்தில் முதிர்ச்சி கூடி மெறுகேறி வருகிறது என்பதற்கு அத்தாட்சி இக்கவிதை.

    அருமை...அருமை!

    ReplyDelete
  2. சிறப்பான சிந்தனை

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.