Monday, September 16, 2013

பிள்ளைகள் வளர்க்கும் பெற்றோர்கள் கவனத்திற்கு.!

இயற்கையிலேயே பெற்றோர்களுக்கு தன் பிள்ளையின் மேல் சற்று பாசம் அதிகமாகவே இருக்கும். தன் பிள்ளை எதைச்செய்தாலும் அதை ரசிக்கத்தோன்றும். எதைச்சொன்னாலும் இனிமையாய் கேட்கத்தோன்றும். அதுவே நாளடைவில் தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளையும் நியாயப்படுத்தி தன் பிள்ளையை தரமானவர்களாக புகழாரம் சூட்டுவார்கள். குழந்தைப்பருவத்திலிருந்தே தன் பிள்ளை ஏதாவது தவறு செய்தாலும் அதை பெரும்பொருட்டாக எடுக்காது மாறாக புகழ்ந்து திறமைசாலி என பேசும் அப்பாவி பெற்றோர்கள் நிறைய பேர் உள்ளனர். எந்தக்குழந்தையும் நல்லக்குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்க்கையிலே.என்று ஒரு பாடல் வரி உண்டு.

மிகை மிஞ்சிய செல்லத்துடன் வளர்த்ததன் விபரீதம் தன் பிள்ளை வளர்ந்து ஆளாகி பெரிதான பிறகு அந்தப்பிள்ளைக்கு மனதைரியம் கூடிவிடுகிறது. யாரும் நம்மை ஏதும் சொல்லமாட்டார்கள் என நினைத்து மனதில் பெற்றோர்களின் மேல் அலட்சியப்போக்கு உருவாகி அதுவே பல சமூக விரோத செயல்கள் வன்செயல்கள் பாலியல் குற்றங்கள் இப்படி பல கொடுஞ்செயல்களில் ஈடுபட வழி வகுக்கிறது. பல சமூக விரோத செயல்கள் செய்து நம்மைச் சமூகத்தார் மத்தியில் தலை குனிந்து நடக்க வைத்து விட்டதே நம் பிள்ளை என்று எண்ணி மனம் வெம்பி நொந்து வேதனைப்படுவார்கள். இதற்க்கு முழுக்காரணமும் முன்பொருகாலத்தில் அப்பெற்றோர்கள் காட்டிய அளவு கடந்த பாசமே.!

பிறந்த குழந்தைக்கு ஊட்டச்சத்து எவ்வளவு முக்கியமோ அந்தளவுக்கு நல்ல பிள்ளையாய் பெயரெடுக்க வளர்க்கும் விதமும் முக்கியம். குழந்தை மனம் என்பது பால்போன்று வெண்மையானது. அதில் நச்சுத்தன்மையான செய்திகளை விளையாட்டுக்குக்கூட பேசக்கூடாது. காரணம் நல்லது கெட்டது எது என பிரித்துப்பார்க்க தெரியாத வயசும் மனசும் உள்ள பருவம் அது. அத்தருணத்தில் நாம் எதை நியாப்படுத்தி அதன் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறோமோ அதுவே மந்திரச்சொல்லாக மனதில் பதியும். குழந்தைப்பருவம் முதலே நாம் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக கையாள வேண்டும் அதை விடுத்து கண்கெட்ட பின்னே சூரிய ஸ்நானம் எதற்கு.! தலைக்கு மேல் தண்ணி போன பின் இனி ஜான் போனால் என்ன முழம் போனால் என்ன என்று பழமொழி சொல்லிப்புலம்புவதில் எந்த புண்ணியமும் இல்லை.

தவழும் நிலையிலிருந்து நிற்கும் நிலை, நடக்கும் நிலை, பேச்சுக்கு பதில் கொடுக்கும் நிலை, புரிந்து கொள்ளும் நிலை,சிந்தித்து செயல்படும் பகுத்தறிவு நிலை, இனி சுயமாக தனது அனைத்துத்தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளும் நிலை. இப்படி மனித வாழ்வில் நிலைபாடுகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுகின்றன.

ஒவ்வொரு பருவ மாற்றத்தின்போதும்.நமது அன்பு,பாசம், கண்டிப்பு, அரவணைப்பு உபசரிப்பு அனைத்திலுமே வெவ்வேறு அணுகுமுறையுடன் நடந்து கொள்ளவேண்டும். நாம் பிள்ளைகளுடன் பேச வாய்ப்புக்கள் வரும்போதெல்லாம் ஒவ்வொரு வாக்கியத்திலும் பேசப்படும் நிகழ்வைப்பொருத்து அதன் நன்மை தீமைகளை தவறாது எடுத்துரைக்க வேண்டும். அந்தப்பிள்ளை எதைச்சொன்னாலும் கேட்காது என்று தமக்குத்தாமே சொல்லிக்கொள்வது அர்த்தமற்றது. அன்று செவிகொடுத்து கேட்க வில்லையெனில் அடுத்து என்றாவது ஒருநாள் அவர்களின் செவி ஏற்றுக்கொள்ளும். இதுவே அந்த அறியாப்பருவத்தினரின் உண்மைக்குணமாகும்.

அவர்களின் அறிவு முதிர்ச்சி அடைய அடைய அவர்களின் நடவடிக்கைகள்,நட்புகள், பழக்க வழக்கங்கள் மாறும். இக்காலகட்டத்தில் நாம் மிக கவனத்துடன் கண்காணிக்கவேண்டும். அதேசமயம் எள்ளளவும், பெற்றோர்கள் தன்னை சந்தேகப்படுகிறார்கள் என்ற எண்ணத்தை மனதில் ஏற்ப்படுத்தாதவாறு பிள்ளைகளிடம் பழக வேண்டும்.

சந்தர்ப்பம் கிட்டும் போதெல்லாம் அந்தப்பிள்ளை செய்த இரெண்டு தீய செயலுடன் ஒரு நல்லசெயல் செய்ததையும் ஒப்பிட்டு இப்படிப்பட்ட நீ இப்படி ஏன் செய்தாய். சரி இனிமேல் இப்படி செய்வதை தவிர்த்துக்கொள். என்பதாகவும் அவ்வப்போது நமது மூதாதையார்களின் பழைய சரித்திரங்களையும் தெவிட்டாத அளவுக்கு இனிமையாய் எடுத்துச்சொல்லலாம்.

இப்படி அவர்கள் கண்களுக்கு புலப்படாத நாம் வரையறுக்கப்பட்ட வட்டத்துக்குள் இருக்கிறார்களா.? என்பதை கண்காணிக்க அடிக்கடி தொடர்பில் இருக்க வேண்டும்.. அவர்களின் மனநிலையும் நாம் தாய், தந்தையரின் கட்டுப்பாட்டில் இருக்கிறோம் என்ற எண்ணம் தானாகவே மனம் புரிந்து கொள்ளும்படி உண்டாகிவிடும்.. அதேநேரத்தில் எக்காரணம் கொண்டும் அவர்களின் சுதந்திரத்தை பறித்து விடக்கூடாது. முழுசுதந்திரத்தையும் பறித்து விட்டால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விடுவர்.

இப்படி நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் நடவடிக்கைகள் நம் பார்வைக்குட்பட்டதாகவே அமைந்து விடும். இதையும் மீறி தப்பான வழியில் செல்ல வாய்ப்புக்கள் மிகக்குறைவாகவே இருக்கும்.

இதிலிருந்து பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில் குழந்தை பருவத்தை கடந்து மூன்றாம் பருவமான பேச்சுக்கு பதில் கொடுக்கும் நிலை வரும்போதுலிருந்தே நாம் பிள்ளைகளிடம் பாசம் காட்டுவதற்கு சம நிலையில் அறிவுரைகளும் அன்பான கண்டிப்புக்களும் நிறைந்து இருக்க வேண்டும்.

இந்த சூழலை மையமாக கொண்டு பகுத்தறிவு பருவம் வரை வளர்க்கப்பட்டால் நாம் பயமில்லாமல் நம் பிள்ளைகளை நம்பி எங்கும் அனுப்பலாம்.

நம்பிக்கைதான் வாழ்க்கை. நாம் வளர்க்கும் விதத்தில் தான் பிள்ளைகளின் வளர்ச்சியும் இருக்கும். நல்லதைச்சொல்லி வளர்ப்போம். நட்பாய் பழகி அணைப்போம். நாடு போற்றும் நற்ப்பிள்ளையாய் உருவாக துணை நிற்ப்போம் !!!
அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.